பத்தி

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு: இந்திய அரசுக்கும் பன்னாட்டு நிதியகத்திற்குமான முரண்பாட்டின் வெளிப்பாடா?

அருண் நெடுஞ்செழியன்

ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பானது, இந்திய பெரு முதலாளி வர்க்கப் பண்புகளுக்கும் பன்னாட்டு நிதியகத்தின் பணக் கொள்கைகளுக்குமான முரண்பாட்டை பட்டவர்த்தமாக வெளிப்படுத்தியுள்ளது.

மேலோட்டமாக மோடி எதிர்ப்பென்ற வகையில் இச்சிக்கலை பார்க்காமல் மோடி என்பவர் இந்திய அரசின் பிரதிநிதி என்ற வகையில்,இந்திய அரசு/இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம் Vs பன்னாட்டு நிதியகக் கொள்கை,ஏகாதிபத்திய மூலதனம் என்ற முரண்பாடுகளுக்கு இடையிலான பொருளாதாரக் பகுப்பாய்வின் அடித்தளத்தில் இச்சிச்சலை சற்று நெருக்கமாக பார்ப்போம்.

1

தேசிய அரசுடனான பன்னாட்டு நிதியகத்தின் சமரசம்:

பன்னாட்டு நிதியகம் என்பது உலகளாவிய அளவில் நிதி மூலதனங்களை கையாள்கிற அல்லது நிதி மூலதன முதலீடுகளுக்கு கொள்கைசார்ந்த,தகவல்கள் சார்ந்த ஆலோசனைகளை வழங்குகிற நிதி நிறுவனம் ஆகும்.இதை வளர்ந்த பொருளாதார நாடுகள் இயக்குகின்றன.அதாவது ஐக்கிய அமெரிக்கா தலைமை வகிக்க அதன் பங்காளிகளான ஜப்பான்,பிரான்சு,இங்கிலாந்து,ஜெர்மனி போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனப் பரவல் நலன் சார்ந்து இயங்குகின்றன.

ஏகாதிபத்திய நாடுகளானது,இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சூழலில் தனது வழமையான நேரடிப் பாணியிலான சுரண்டல் போக்கை சுய ஆய்வு செய்யத் தொடங்கியது.தனது கடந்த காலத்தைய,நேரடியான காலனிய ஆதிக்க சுரண்டலானது,சுரண்டப்படுகிற நாடுகளின் பெரும் தேசிய எழுச்சியை உண்டாக்கி, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் டசன் கணக்கின் தேச அரசுகளின் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்ததை கவலையோடு பார்த்தது.

இங்கிலாந்திடம் இருந்து இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,பிரான்சிடம் இருந்து அல்ஜீரியா என தேச அரசுகளின் தோற்றத்தை உதாரணம் கூறலாம்.சோவியத் ரஷ்யப் புரட்சியும்,சீனப் புரட்சியும் சோசலிச முகாம் என்ற மாற்றை வழங்கிய சூழலில் புதிதாக உதயமாகியுள்ள இந்த நாடுகள், சோசலிச முகாமில் செல்லாமல் தடுப்பது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அவசியமாகியது.

அதேபோல உலகளவில் இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கத்திடம் மிகப்பெரும் சமரசத்தையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.நல்ல கூலி கொடுத்து உற்பத்தியை முடிக்கிவிடத் தொடங்கியது.தனது வழமையான பாணியில் புதிய நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்யவதை கட்டுப்படுத்த தொடங்கியது.
ஆக இந்த சூழல்,உலக வரலாற்றில் மிக முக்கியமான மூன்று முகாம்களை உருவாக்கியது.இந்த 1945-1970 கட்டத்தில்

• வளர்ந்த ஏகாதிபத்திய முகாம்
• ரஷ்யா,சீனா என்ற சோசலிச முகாம்
• புதிதாக விடுதலை பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகள்
நிலவின.

2

தேச புனரமைப்பும் தேசிய முதலாளிய வர்க்கமும்:

நேரடி காலனியாதிக்கத்தில் இருந்து அரசியல் விடுதலை பெற்ற நாடுகளின்,பொருளாதார கட்டமைப்பிற்கு,தேச புனரமைப்பிற்கு அந்நாடுகளின் தேசிய முதலாளிய வர்க்கம் முக்கியப் பங்காற்றியது.அரசியல் அரங்கிலும் இந்த வர்க்கம் பெரும் செல்வாக்கு செலுத்தியது.இந்த சூழல் கடந்த காலங்களில் இல்லாத ஒன்று.ஏகாதிபத்திய சகாப்தத்தில் புதிய பண்பு மாற்றமாக இது நடந்தது.இந்த சூழலில் புதிதாக அரசியல் சுதந்திரம் பெற்ற நாடுகளின் தேச நிர்மாணத்திற்கு மூன்று வாய்புகள் இருந்தன.

• அது சொந்தமாக தனது தேசிய முதலாளிகளின் கால்களில் நிற்பது
• சோசலிச முகாமை சார்ந்து இருப்பது
• வளர்ந்த ஏகாதிபத்திய முகாமை சார்ந்திருப்பது
இந்தியாவைப் பொறுத்தவரை இவை மூன்றின் கலவையாக,பிரத்தேய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

இதே காலத்தில் அரசியல் விடுதலை பெற்ற தென் கொரியா,நேரடியாக தனது முதலாளிய வர்க்கத்தின் சொந்தக் கால்களில் முன்னேறத் தொடங்கியது.

இந்தியாவின் பெரு முதலாளிகள்,உற்பத்தி சக்திகளை குறிப்பாக தொழில் நுட்ப ஆய்வுகளில்,வளர்ச்சியில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டினர்.இதன் காரணமாக வளர்ந்த தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதனால் பலன் பெறுகிற வகையில் தொழில்களை நடத்தினர்.அதற்கேற்ற கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள அரசை வற்புறுத்தினர்.

தேசிய முதலாளிகளுக்கான சலுகைகள்,மானியங்கள் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக மாறியது. துறை சார்ந்த முதலீடுகளை,வளர்ச்சிகளை மேற்கொள்கிற வகையில் சரியான திசை வழியை அரசு காட்டவில்லை.
இது தென் கொரியாவில் தலைகீழாக நடந்தது. மானியம் வேண்டுமென்றால் உற்பத்தி அளவிற்கும்,வளர்ச்சிக்கும்,வேலை வாய்ப்பிற்கும் உறுதி கூறவேண்டும். இது அரசின் தீவிர கண்காணிப்பில் நடைபெற்றது.

இந்தியாவிலோ, பழமையான நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் பெரும் மாற்றம் இல்லை, பெயரளவில் நிலச் சீர்திருத்தம் நடைபெற்றன.

மேற்கூறிய காரணத்தால் வழமையான மரபு ரீதியான முதலாளிகளின் ஆதிக்கமே இந்தியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் பெற்றன.டாட்டா குழுமம் போன்ற வாரிசு முதலாளிகளே தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தனரே அன்றி புதிய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற,புதிய இடை நிலை முதலாளிய வர்க்கத்தையே உருவாக்க வில்லை.

தொகுத்துக் கூறின்,முதலீடுகளின் அதிகம் பாதிப்பில்லாமல், லாபத்தில் அதிக உத்திரவாதம் மிக்க,தொழில்நுட்பத்திற்கு மேற்குலகை சார்ந்த, நிலப்பிரபுத்துவதுடன் சமரசம் செய்து கொண்ட, அரசின் மானிய சலுகளைப் பெற்றுக் கொண்டு தேசிய அரசுடன் ஒண்டிக்கொண்டே உபரியை உறுஞ்சுகிற ஒரு மட்டமான, மந்தமான ஒட்டுண்ணி வர்க்கமாக இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம் உருப்பெற்றது.இதன் விளைவாக இன்று வரை இந்திய ஒன்றியமானது, அரை-தொழில்மய கட்டத்திலேயே நீண்டகாலமாக தேக்கம் பெற்று நிற்கிறது.

மேற்கூறிப்பிட்ட காரணத்தால் இந்தியப் பெரு முதலாளிய வர்க்கமானது, 1947-1990 வரை அந்நிய மூலதன ஊடுருவலை எதிர்க்கவும் இல்லை, உள்நாட்டில் வளர்ச்சியை சாத்தியப்படுத்தவும் இல்லை. மாறாக இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இடை நிலை முதலாளிய வர்க்கமே, பன்னாட்டு மூலத்தின் ஊடுருவலை அரசியல் விடுதலைப் பெற்ற காலம் தொட்டு கண்டித்து வந்தது. இறையாண்மைக்கு எதிரானது என்றும்,தங்களது தொழில் பாதிப்படைவது குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தது.அது எவ்வாறாயினும் இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம் பெரும் ஒட்டுண்ணித் தனத்துடன் அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்ற வளர்ச்சிக்கு உதவாத உதவாக்கரை வர்க்கமாக வளர்ந்தது.

இதே காரணத்தால்தான், அது 90 களில் அமுலுக்கு வந்த தாராளமயத்தை எதிர்க்கவில்லை.
மாறாக அந்நிய நிறுவனங்களின் முகவராக பெருந்தொழில் நிறுவனங்கள் கூட்டு வைத்துக் கொள்ளையடித்தன.
இந்த இடத்திலும் பாதிக்கப்பட்டது என்னவோ இடை நிலை முதலாளிய வர்க்கமே.

3

தாராளமய கட்டத்தில் இந்திய அரசும் பன்னாட்டு நிதியகமும்:

உலகளாவிய அளவில் 1975-90 கட்டத்தில் உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி சக்திகளும்,நிதி மூலதனமும் குவிமையப் படுத்தப்பட்டன.மூலதனம் ஒன்று குவிக்கப்பட்டன(இதன் விளைவே இன்றளவில் விரைவான பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டு வருகிறது,இதற்குள்ளாக நாமிப்போது செல்லப் போவதில்லை)ஒன்று குவிக்கப்பட்ட மூலதன ஏற்றுமதிக்கான சந்தையை ஒழுங்கமைத்து தருவதில் பன்னாட்டு நிதியகம் முக்கிய பங்காற்றியது.பன்னாட்டு நிதியகம் உருவாக்கிய காலம்தொட்டு கடந்த ஐம்பது ஆண்டுகளில், பெரிய செயல்பாடுகள் இல்லாத சூழலில் மீண்டும் 90 களில் அது முக்கியத்துவம் பெற்றது.

அதுவரை பொம்மையாக இருந்த வளர்ச்சி பெற்று வருகிற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் ரிசர்வ் வங்கி ஆளுனர்கள் முக்கிய இடத்திற்கு வந்தனர்.இந்த நாடுகளின் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள்,நிதி அமைச்சர்பன்னாட்டு நிதியகத்தின் பிரதிநிதியாகினர்.

தனது கடந்த கால அனுபவத்தில் படிப்பனை பெற்ற பன்னாட்டு நிதியகம்,1945-75 வரை தேசிய அரசு கட்டுமான கட்டத்தில் செல்வாக்கு பெற்ற தேசிய முதலாளிகளுக்கு எதிராகவும் இல்லை,அதேநேரத்தில் முழுமையாக விட்டுக் கொடுக்கவும் இல்லை.

தேச அரசுகளின் உருவாக்கத்தின் காரணமாக,1945-75 காலத்தில் மண்ணுக்கு அடியில் புதைந்து உயிரை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிற தவளையின் ஹைபெர்நேசன் மோடில் இருந்த ஏகாதிபத்திய மூலதனம்,அதன் முகவரான பன்னாட்டு நிதியகம் 80 களுக்கு பின்பு புலியாக மூன்றாம் உலக நாடுகளில் பாய்ந்தது.அதை SAP இன் ஊடாக செய்தது.அதாவது structural adjustment program.கட்டமைப்பு மாற்றம்.அதாவது பன்னாட்டு மூலதனத்திற்கு ஏற்ப உள்நாட்டு சந்தையை அனுசரித்து அடிபணிய வைப்பது.

80களின் பொருளாதார நெருக்கடி கட்டம் உலகப் பொருளாதார திசைவழியை மாற்றியது.ஏகாதிபத்திய நாடுகளின் மூலதன ஊடுருவல் மூன்றாம் உலக நாடுகளில் வேகமாக பாய்ந்தது.இந்திய சந்தைகள் பன்னாட்டு மூலதனத்திற்கு திறந்துவிடப்பட்டன.அரசின் வசமிருந்த உள்நாட்டு சந்தைகள் தனியாருக்கு விடப்பட்டன. இந்திய வங்கிகளில் தனியார் மூலதனம் பாய்ந்தது.தனியார் வங்கிகள் முளைத்தன.முன்னெப்போதும் இல்லாத வகையில் நிதி மூலதனம் இந்திய வங்கிகளில் திரட்டப்பட்டது.

வங்கிகள்,உலக நிதி மூலதனத்தை கையாள்கிற முக்கிய இடத்திற்கு வந்தது.ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் முன்னுக்கு வந்தனர்.இந்த இடத்தில் இந்தியாவின் ரிசர்வ் வங்கிக்கு புதிய நெருக்கடி உருவானது.அது பன்னாட்டு நிதியகத்தின் நிதிக் கொள்கைகளின்வழி நடப்பது அதேநேரத்தில் தேசிய முதலாளிகள்,தேசிய அரசியல்வாதிகளுக்கு சாதகமாக நடப்பதுஅதாவது வங்கி நிதி மூலதனம் vs தேசிய முதலாளிகளின் தொழில் மூலதனம் என்ற முதலாளிய வளர்ச்சிப் போக்கின் உள்ளார்ந்த முரண்பாடாக வெளிப்படத் தொடங்கியது.

ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை அரசு,இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்திற்கும் தனது நிதிமூலதன நிர்வாகத்திற்கும் இடையே பெரிய சீனச் சுவரை கட்டி எழுப்பிக்கொள்ளவில்லை. மாறாக பாலும் நீரும் கலந்தது போன்ற உறவையே ரிசர்வ் வங்கி ஆளும்வர்க்கத்துடன் பேணியது.

தேசிய அரசுடன் கடந்த காலத்தில் தனக்கிருந்த செல்வாக்கை இன்றும் இந்தியப் பெரு முதலாளியவர்க்கம் பேணி வருகிறது. அரசும், இந்த வர்க்கத்தை பன்னாட்டு மூலதனத்திற்கு கைவிட்டுவிடவில்லை. அதேநேரம் உலகப் பொருளாதார வலைப்பின்னலில் அங்கமாகாவிட்டால் வாழ்வும் இல்லை என்பதை இந்திய அரசு உணர்ந்தது.இருதலைப் கொல்லியாக தவித்த அரசும் முதலாளிய வர்க்கமும் தற்போதைய உலகப் பொருளாதார மந்தக் கட்டத்தில் வசமாக சிக்கித் தவிக்கிறது.

அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் இந்தியப் பெரு முதலாளிகளுக்கு வழங்கிய கடன்கள்,இந்திய வங்கிகளை திவால் நிலைமைக்குள் தள்ளியுள்ளது.இதை கண்காணித்த பன்னாட்டு நிதியகம், இந்திய வங்கிகளை புனரமைக்கக் கோரியது.ஏனெனில் இந்திய வங்கிகளில் நெருக்கடி நிலை, பன்னாட்டு மூலதனப் பரவலாக்கும் தடையாக அமையும் அல்லவா?

பன்னாட்டு நிதியகத்தின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன், இதுகுறித்து மேலதிகமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். வாராக் கடனை வசூலிக்கிற சாட்டையை இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திடம் சுழற்றினார். வாங்கிய கடனை திருப்பியளிக்காத மல்லையாவை கடுமையாக விமர்சித்தார்.

இதை அரசு அவமானமாக பார்த்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிலைநிறுத்தப்பட்ட தனது ஆதிக்கம் தகர்வதாகப் பார்த்து. கண்நெதிராக தனது சகாக்களை கைவிடுவதை அது விரும்பவில்லை. அதேநேரத்தில் வங்கியின் நிதி மூலதன இருப்பையும் பலப்படுத்தவேண்டும்.

ஆக, நேரடியாக கடனை வசூலிக்காமல் மக்களிடம் உள்ள பணத்தை உறிஞ்சுகிற அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடவடிக்கையை பன்னாட்டு நிதியகம் எதிர்ப்பார்க்கவில்லை. அது விரும்பவும் இல்லை. ஏனெனில் நாட்டில் முதலாளித்துவமும் ஜனநாயகமும் இணைந்து ஒருவித சமரச சீர்திருத்தல் போக்கை கடைபிடிக்க விரும்பியது. உடனடி லாபத்தை விட அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தனது மூலதனத்தை முதலீடு செய்கிற சந்தைக்கான சூழலை உருவாக்க முனைகிறது. அது கடந்த கால அனுபவத்தை கணக்கில் கொண்டும் கம்யூனிச அச்சத்தை கவனத்தில் கொண்டும் மெல்ல முன்னேற முயல்கிறது.

அரசை சார்ந்துள்ள ஒட்டுண்ணித் தனமான இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்தின் போக்கிற்கும் பன்னாட்டு நிதியகத்தின் நிதிக் கொள்கைக்குமான முரண்பாடு,மோடி அறிவிப்பின் ஊடாக பட்டவர்த்தமாக வெளிப்பட்டுள்ளன. தான் இன்னும் 1947 கட்டத்தில் உள்ள தேசிய அரசு தான், எனது பங்காளிகளை கைவிட முடியாது என உரக்க அறிவித்துள்ளது இந்திய அரசு.அதற்கு யாரையும் பலிக் கொடுப்பேன் என்கிறது. அதற்கு பெரும் விலையை கொடுத்துள்ளது.சமூகத்தின் எழுச்சியை, அதிருப்திகளை வலுக்கட்டாயமாக உருவாக்குவது, வர்த்தகத்திற்கு நல்லதல்ல என்பது பன்னாட்டு நிதியகத்தின் நிலை. இந்த சூழ்நிலையில்,

பன்னாட்டு மூலதன சக்திகள் தற்போது என்ன செய்யப் போகிறது?
இது எந்தத் திசைவழியில் வரும்காலத்தில் செல்லப் போகிறது?
இந்திய அரசுக்கும் பன்னாட்டு மூலதனதிற்குமான உறவு எவ்வாறு அமையப் போகிறது? புதிதாக சீனா-ஜப்பான்-ரஷ்யா உடன் பிராந்திய கூட்டணி அமைத்துக் கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ளுமா? அல்லது தனது இந்தியப் பங்காளிகளை கைவிடுமா? பொறுத்துப் பார்ப்போம்.

முகப்புப் படம்:பன்னாட்டு நிதியகத்தின் இயக்குனர் கிறிஸ்டியன் லகர்டேவும்இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும்

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்;எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.