குடமிளகாயின் வரலாறு:

தென் அமெரிக்க நாடான சிலி மிளகாயின் தாயகம். மிளகாயின் ஒரு வகையான குடமிளகாயின் பூர்வீகமும் அதுவே. தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்திருந்த ஸ்பானியர்கள் உருளைக்கிழங்கு, மக்காள்சோளம், பீன்ஸ் இவற்றோடு மிளகாயையும் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினர். போர்த்துக்கீசியர் மூலம் மிளகாய் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் அறிமுகமானது. காரச்சுவைக்காக மிளகாயின் பெரும்பாலான வகைகள் பயன்படுகின்றன.  தனிச்சிறப்பான மணத்திற்காகவும் காரச் சுவை குறைவாக இருப்பதாலும் குடமிளகாய் மட்டும் ஒரு காய்கறியாக உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதை சமைக்காமலும் சமைத்தும் பயன்படுத்தலாம் என்பது இன்னொரு சிறப்பு. உலக மக்களால் அதிகமாக உண்ணப்படும் காய்கறிகளுள் ஒன்று குடமிளகாய்.

உண்பதற்கான குடமிளகாயை தேர்ந்தெடுப்பது எப்படி?

பச்சை, மஞ்சள், இளம் பச்சை, சிவப்பு நிறங்களில் குடமிளகாய் உற்பத்தியாகிறது. எல்லாவற்றிலும் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம் தோலில் எந்தவித சுருக்கங்களோ, கோடுகளோ இல்லாமல் இருக்கிறதா என்பதைத்தான். தோலில் சுருக்கம் இருந்தால் காய், செடியிலிருந்து பறித்து வேகுநாட்கள் ஆகியிருக்கும். இதனால் உள்ளேயிருக்கும் விதைப்பகுதி கறுத்து, அழுகும் நிலைக்கு வந்திருக்கும். இது சமைக்க ஏற்றது அல்ல.

குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் உண்டு?

குடமிளகாயி(100கிராம்)ல் உயிர்ச்சத்து சி 404 சதவிகிதம் உள்ளது. காய்கறிகளிலேயே அதிக அளவு உயிர்ச்சத்து சி உள்ளது குடமிளகாயில்தான்.கி,கார்போஹைட்ரேட் 9கி, புரதம் 2 கி, நார்ச்சத்து 1.5 கி ,கொழுப்பு 0.2 கி,சர்க்கரை 5 கி அளவில் அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம்,சோடியம், மக்னீஷியம் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் இ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துக்களும் உண்டு.

குடமிளகாயில் ஒரு ரெசிபி: ஸ்டஃப்டு குடமிளகாய்

தேவையானவை:

குடமிளகாய் – 6

வேகவைத்த ஸ்வீட்கார்ன், மசித்த உருளைக்கிழங்கு – தலா ஒரு கப்

நறுக்கிய வெங்காயம், துருவிய பனீர், சிறு துண்டுகளாக நறுக்கிய மாங்காய் – தலா அரை கப்

மஞ்சள்தூள், இஞ்சி விழுது, மிளகு, சீரகத்தூள் – தலா ஒரு தேக்கரண்டி

சோயா சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 தேக்கரண்டி

கார்ன்ஃப்ளார் – 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் — தேவையான அளவு

நறுக்கிய மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை :

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும். இதை அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித் தழை தூவி கலந்து வைக்கவும்.

குடமிளகாயின் மேல் பகுதியை வெட்டி எடுத்து விடவும். உள்ளிருக்கும் விதைகளை சுரண்டி எடுத்து விட்டு, ஒவ்வொரு மிளகாயிலும் தயாரித்து வைத்திருக்கும் கலவையை நிரப்பவும். கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையாக்கி மிளகாய்களின் மேல் பகுதியை மூடவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு மிளகாய்களைப் பரவலாக வைத்து மூடி, 15 நிமிடம் வேக விடவும். ஆறியதும் இரண்டாக வெட்டி சாஸ் அல்லது மல்லி சட்னியை மேலே ஊற்றி சாப்பிடவும்.

மேலதிக ரெசிபிகளுக்கு நான்குபெண்கள் தளத்தை பார்வையிடுங்கள்.