“தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளில் தொடங்கி பல மாதங்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த   மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத்  தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், அதற்கான காரணங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன” என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்; இனி எந்த காலத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று சர்வதேச அளவில்  பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடந்த 2014 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் மே 7-ஆம் தேதி தான் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனால் 2015 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. மத்திய அரசுக்கு தமிழகத்திலிருந்து அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி கடந்த 07.01.2016 அன்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், மத்திய அரசின் அறிவிக்கைக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதனால் 2015-ஆம் ஆண்டைப் போலவே 2016-ஆம் ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதில்லை; ஜல்லிக்கட்டு காலம்காலமாக தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த விளையாட்டாக திகழ்கிறது; ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகத் தான் பார்க்கப்படுகிறது என்பதால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மத்திய அரசும் கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை  காரணம் காட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளிக்கலாம் என்று வாதிட்டது. ஆனால்,  உச்சநீதின்றமோ, 2014-ஆம் ஆண்டு தீர்ப்பில் கூறப்பட்டிருந்த காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறி ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது. 07.05.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையை மாற்றவே முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

‘‘ ஜல்லிக்கட்டு போட்டி என்பதே விலங்குகள் மீது இழைக்கப்படும் கொடுமை தான். அக்கொடுமைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விலங்குகள் மீது நாம் கருணை காட்ட வேண்டும். அது அரசியலமைப்புச் சட்டப்படி நமது கடமையாகும். மனிதர்களின் பொழுதுபோக்குக்காக காளையை அடக்க வேண்டுமா?  காளைகள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவை ஏன் ஓடவிடப்படுகின்றன?’’ என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக வினா எழுப்பியுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக்  கோரி வழக்குத் தொடர்ந்த இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் ஒரு காலத்தில் எழுப்பிய வினாக்களை இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியின் அடிப்படையை நீதிபதிகள் புரிந்து கொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு புரியும் வகையில் தமிழக அரசின் சார்பில் வாதிடப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டி காலம்காலமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், அப்போட்டிகளில் மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, காளைகளுக்கு எந்த காயமும் ஏற்பட்டதில்லை. காளைகளுக்கு மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் கொடுத்தும், கண்களில் எரிச்சலூட்டும் பொடிகளைத் தூவி கொடுமை இழைக்கப்படுகிறது என்றும் மேலத்தட்டு தொண்டு நிறுவனங்கள் வாதாடினாலும் அதற்கு முகாந்திரம் இல்லை. அதுமட்டுமின்றி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது என்பதால் காளைகள் கொடுமைப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை. மாறாக காளைகள் குழந்தைகளைப் போல வளர்க்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன என்பதே உண்மை. இதை உணராமல் ஜல்லிக்கட்டுத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்திருப்பது தவறு ஆகும்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு கடந்த 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதற்கு சட்டம் கொண்டு வராமல், ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கோருவது எப்படி முறையாகும்? என நீதிபதி தீபக் மிஸ்ரா வினா எழுப்பியிருந்தார். இதே வினாவைத் தான் பாட்டாளி மக்கள் கட்சியும் கடந்த 10 மாதங்களாக எழுப்பி வருகிறது. காட்சிப்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருந்தால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்திருக்கலாம். ஆனால், பாம்புக்கு வாலையும் பூனைக்கு தலையையும் காட்டியது போல தமிழக மக்களை திருப்தி படுத்துவதற்காக அறிவிக்கை வெளியிட்ட மத்திய அரசு,  விலங்குகள் நல அமைப்புகளை திருப்தி படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யாமல் இரட்டை வேடம் போட்டது. இப்போது தமிழக மக்களிடம் மத்திய அரசின் இரட்டை வேடம் கலைந்து விட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டி கண்டிப்பாக நடத்தப்படும் என்று வாரத்திற்கு ஒருமுறை விமானநிலையத்தில் கூறி, மத்திய அரசின் நாடகத்துக்கு துணையாக இருந்தவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்?
தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கிறது என்றால், நடப்புக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து வரும் தை மாதத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.