நீரின்றி, மழையின்றி நட்ட பயிர்கள் காய்ந்து கருகியதைக் கண்டு மனம் கருகி, ஒரே நாளில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இருவிவசாயிகள் மாண்டு போன துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.

தேமங்கலம் அந்தோணிசாமி

கீழ்வேளூர் அருகே உள்ளது சங்கமங்கலம். அந்த கிராமத்தின் தெற்குவெளி மாதாகோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி அந்தோணிசாமி(62). இவருக்கு சிக்கலில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.

மிக அல்லற்பட்டு அந்த ஒரு ஏக்கர் நிலத்தில்சம்பாவை நட்டார்.அந்தோணிசாமி, தினமும் தேமங்கலத்திலிருந்து சிக்கல் வந்து சம்பா பயிர் தேறியிருக்கிறதா என்று பார்த்துப் பார்த்துப் பயிர் கள் நீரில்லாமல் கருகியதைக் கண்டு மனமுடைந்து போனார். செவ்வாய்க்கிழமைக் காலை 7.30 மணியளவில், வயலுக்கு அருகிலேயே மாரடைப்பு ஏற்பட்டு விழுந்து மாண்டார். அவருக்கு பிளோமினாமேரி என்னும் மனைவியும்,

விக்டோரியா, வினோலியா, விண்ணரசி என்னும் 3 மகள்களும், வின்சென்ட் என்னும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் விக்டோரியாவுக்கு மட்டுமே திருமணமாகியிருக்கிறது.

தலைஞாயிறு பாலசுப்பிரமணியன்

தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சி மூலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகையன், பயிர்கள் கருகிய தால், திங்கட்கிழமை அன்று தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட முருகையனின் இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(65) என்ற விவசாயி, தன் அண்ணன் ராமச்சந்திரன் நிலத்திலிருந்து தற்கொலை செய்துகொண்ட முருகையனுக்குக் குத்தகைக்கு நிலம் கொடுத்தவர் இவரே.குத்தகைக்கு நிலம் வாங்கிச் சாகுபடி செய்த முருகையனும் மாண்டு போனார். தனது அண்ணனின் நிலமும் தனது பயிர்களும் பிழைக்கப் போவதில்லை என்று மனமுடைந்து, நண்பரின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்ற பாலசுப்பிரமணியன், தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டுக் கீழே விழுந்து மாண்டுபோனார். நாகை மாவட்டத்தில் அண்மையில் விவசாயி களின் கோர மரணம் 5 ஆகவும், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் அவல மரணம் 9 ஆகவும் கூடி யிருக்கிறது.

நன்றி: தீக்கதிர்.