தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு பணம் வழங்கியிருப்பதால் அந்த தொகுதிகளுக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்துசெய்யவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம்ஜைதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை 10.40 மணிக்கு தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல்ஆணைய அலுவலகத்தில் நஜீம்ஜைதியை அன்புமணி சந்தித்துப் பேசினார். அப்போது கோரிக்கை மனுவை வழங்கினார். அன்புமணி அளித்த மனுவின் நகலை சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி இராஜேஷ்லக்கானியிடம் பா.ம.க. தலைவர் கோ.க.மணி வழங்கினார்.

மனு விவரம்:

இந்த இரு தொகுதிகளிலும் தற்காலிகமாக தேர்தலை ஒத்திவைப்பதால், களச்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், காலப்போக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது. இத்தகைய நிலையில், இப்போது இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறது என்ற முடிவுக்கு ஆணையம் எந்த அடிப்படையில் வந்தது? என்பது மில்லியன் டாலர் வினாவாகும். பொதுத்தேர்தலின் போதே அளவுக்கு அதிகமாக பணம் வழங்கப்பட்டு, அதனைக் காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இம்முறையும் பணம் பெரிய அளவில் வினியோகிக்கப்படுவதை தடுக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு தான் தேர்தலை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இதுதொடர்பாக பா.ம.க. சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. இராஜேஷ் லக்கானி அவர்களிடம் கடந்த 21.10.2016 அன்று மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

குறைந்தபட்சம் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் கொடுத்த குற்றச்சாற்றுக்கு ஆளான அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. ஆனால், வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை என்று கூறி அக்கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் பண வினியோகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததற்கு காரணமாகும்.

மேலும், பொதுத்தேர்தலின் போது செய்யப்பட்டிருந்த அளவுக்குக் கூட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்து முடித்துவிட்டனர்.

தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.500 வீதம் வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.2000 வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு 1500 ரூபாயும், தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு 500 ரூபாயும் வழங்கப்பட்டன. திருப்பரங்குன்றம் தொகுதியிலும் இதே அளவில் பணம் வினியோகிக்கப்பட்டது. ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு கட்சி வேட்பாளர்களும் அந்தத் தாள்களைத் தான் வாக்காளர்களுக்கு வழங்கினார்கள். அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் களத்தில் எதிரணியினரைப் போல காட்டிக் கொண்டாலும், பணம் கொடுப்பதில் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை என ஒப்பந்தம் செய்துகொண்டு வினியோகம் செய்துள்ளனர். இதை ஆணையத்தால் தடுக்கமுடியவில்லை.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த 07.11.2016 அன்று தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி இராஜேஷ் லக்கானி தாக்கல் செய்த பதில் மனுவில்,‘‘தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வசதியாக பண வினியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் வானளாவிய அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. அதன்படி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுப்போம்”என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க ஆணையம் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்துள்ள துணைத் தேர்தல் ஆணைய உமேஷ் சின்ஹா திருச்சி விமான நிலையத்தில் 14.11.2016 அன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,” 3தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. பணப்பட்டுவாடா குறித்து புகார்கள் வந்தால், கடந்த முறை போன்று தேர்தலை ஒத்திவைக்க ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று கூறியிருந்தார். உண்மையில், 3 தொகுதிகளில் நடக்கும் பண வினியோகம் குறித்த தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் இக்கருத்துக்களை துணைத்தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

உண்மையில், துணைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தஞ்சாவூர் தொகுதியில் ஆய்வு செய்த நாளில் தான் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்துக் கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகி பாலசுப்பிரமணியத்திடமிருந்து 82,000 ரூபாயும், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகி சக்கரவர்த்தியிடமிருந்து 44,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுடன் பணம் வினியோகித்த மேலும் இரு திமுகவினர் தங்களிடமிருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

அதேபோல், நாஞ்சிக்கோட்டை சாலையில் பண வினியோகத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகியான திருச்செல்வத்திடமிருந்து ரூ.2.90 லட்சமும், மருத்துவக் கல்லூரி அருகில் பண வினியோகத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி இளவரசனிடமிருந்து ரூ.50 ஆயிரமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் இருவரும், திமுக நிர்வாகிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக கைது செய்யப்பட்ட நால்வரும் பணம் வினியோகிக்கவில்லை என்றும், கணக்கில் காட்டப்படாத பணத்தை மட்டுமே வைத்திருந்ததாக கூறி விடுதலை செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, அவர்களின் பணத்திற்கு கணக்கு காட்டப்பட்டதாகக் கூறி கைப்பற்றப்பட்ட பணமும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் ரூ.50 கோடியும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தலா ரூ.40 கோடியும் குறைந்தபட்சமாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டிருப்பதாக யூகிக்க முடிகிறது. வாக்காளர்களுக்கு இதுவரை வினியோகிக்கப்பட்ட ரூ.130 கோடியில் ரூ.120 கோடி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் ஆகும். இதன்மூலம் 3 தொகுதிகளிலும் தேர்தல் விதிகள் மட்டுமின்றி, கருப்புப்பணத் தடுப்பு சட்ட விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன என்பதை உணரலாம்.

2016 மே மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியாதவாறு கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்தது. அதையும் மீறி ஒரு ஓட்டுக்கு ரூ.5000 வரை வழங்கப்பட்டிருக்கலாம் என்று தேர்தல் ஆணையமே கூறியிருந்தது. ஆனால், இப்போது தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் எந்த வித கண்காணிப்பும் செய்யப் படவில்லை. இதனால் எந்த தடையுமின்றி, அதிமுக, திமுக வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைத்தனர்.

இவ்வளவுக்கும் பிறகு 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டால் அது ஜனநாயகப் படுகொலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்ததாகவே அமையும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்ப்பதாக அமையாது. அதுமட்டுமின்றி, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவி, இந்திய ஜனநாயகத்தை கரையான்களைப் போல அரித்து விடும். இதைத் தடுத்து இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்பும், கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.

2016 மே மாதம் பொதுத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 14- ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இன்னும் 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருக்கிறது. அந்த விசாரணை முடிவடைந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்துவது தான் முறையானதாக இருக்கும். அதுமட்டுமின்றி, அடுத்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிவடையவிருக்கும் நிலையில், அவசர அவசரமாக தேர்தலை நடத்த வேண்டிய தேவை எதுவுமில்லை. எனவே, அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். இத்தொகுதிகளின் அதிமுக, திமுக சார்பில் ஓட்டுக்கு பணம் தரப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அதனடிப்படையில் 3 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று பாமகவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.