நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு பிரதமர் மோடி முயற்சிக்கக் கூடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை:

மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாக சொல்லிக் கொண்டு ஏழை-எளிய மக்களின் வயிற்றில்அடிக்கும் பொருளாதார அவசர நிலையை இன்று நாட்டில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த பொருளாதார அவசர நிலையால் உயிரிழந்த 47 பேர்களில் ஒருவர் கூட பணக்காரர்கள் இல்லை. இதிலிருந்தே இது கருப்பு பணக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை என்பதை அறிய முடியும்.

மோடியின் இந்த நட வடிக்கை துக்ளக் தர்பாரை விட மோசமானது என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சிக்கிறார்கள். இதனால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படலாம் என உச்சநீதிமன்றமே அச்சம் தெரிவித்திருக்கிறது.

மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் இவ்வளவாக உருவாகவில்லை. இப்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால் இருக்கிற வேலை வாய்ப்புகளும் பறிபோகும். விவசாய தொழிலாளர்களும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் பட்டினி கிடந்து சாகும் நிலை ஏற்படும்.

இத்தகைய நெருக்கடிக்கு நாட்டை ஆளாக்கியிருக்கும் மோடி அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை பறித்து பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்திருக்கும் மோடி அரசு அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு முயற்சிக்கக் கூடும்’ என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.