அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்ய தமிழக எதிர்க்ட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சுமார் 40 சதவீத அளவுக்கே பெய்ததைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தாண்டவமாடுகிறது. மாநிலத்திற்கு கிடைக்கும் வருடாந்திர மழையளவில் 48 சதவீதமும், கடலோர மாவட்டங்களுக்கு 60 சதவீத மழையும் கிடைக்கும் வட கிழக்கு பருவமழை ஏறக்குறைய பொய்த்து விட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடிநீரும் இன்றி, விவசாயத்திற்கான பாசனத்திற்கு தண்ணீரும் இன்றி தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் தனி நபர் வருமானமும் கடுமையாக குறைந்து, அன்றாட செலவுகளுக்கே அவதிப்படும் சூழ்நிலை அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 89 அணைக்கட்டுகளில் மிக முக்கியமான 20-க்கும் மேற்பட்ட அணைகளின் நீர் மட்டம் தரைமட்டம் என்று கூறும் அளவிற்கு வறண்டு விட்டன. குறிப்பாக மேட்டூர், பவானி சாகர், வைகை, பாபநாசம், மணி முத்தாறு, அமராவதி உள்ளிட்ட முக்கிய அணைகள் “நீரில்லா மைதானம்” போல் காட்சியளிக்கின்றன. இதே நிலை வீராணம் ஏரி உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளிலும் நீடிக்கிறது. ஏரிகள், குளங்கள், அணைகள் வறண்டு காட்சியளிப்பதால் நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்குப் போய் விட்டது. சென்னை உள்ளிட்ட புறநகரில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஏரிகள் ஆகியவற்றில் ஒரு டி.எம்.சி. தண்ணீர் கூட இல்லை என்ற நிலை எட்டியிருக்கிறது. வட கிழக்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகள் எந்த விதமான விவசாயத்தையும் செய்ய முடியாமல் தங்கள் வாழ்க்கையில் சூறாவளி ஏற்பட்டு விட்டதாக உணருகிறார்கள். குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை, சம்பா ஆகிய இரு சாகுபடிகளுக்கும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் மொத்தமாகவே படுத்து விட்டது. நெற்களஞ்சியமே நிற்கதியாகி நிற்கும் அவல நிலைமை அதிமுக ஆட்சியில் உருவாகி விட்டது.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். காவிரி டெல்டா மற்றும் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 11 விவசாயிகள் “வாடிய தங்கள் பயிரைக் கண்டும்” “வறண்டு போன தங்கள் நிலத்தைப் பார்த்தும்” கண் கலங்கி தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள். இந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ஒரு லட்சம் ரூபாய் நிதியைக் கூட மாநில அரசு கொடுக்கவில்லை என்று அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது மாநில அரசு எந்த அளவிற்கு ஒரு ஈவு இரக்கமற்ற முறையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கிடையே வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல, பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்பினால், ஏழை-நடுத்தர மக்களின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பாகி விட்டது. கறுப்புப் பண ஒழிப்புத் திட்டத்தினை அலட்சியமாக செயல்படுத்தும் மத்திய அரசால் கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக குறுவை பொய்த்துப் போய் இந்த ஆண்டு சம்பாவும் முழுமை அடையவில்லை. விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பயிர்கடன் உள்ளிட்ட எந்த சலுகைகளும், மான்யமும் போய்ச் சேராமல் அவதிப்படுகிறார்கள். இத்தனை இன்னல்கள் மக்கள் முன்பு அணி வகுத்து நின்றாலும், மாநிலத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி இது பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் கண்ணை மூடி நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறது.

காவிரியிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இதனால் நவம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஏறக்குறைய 98 டி.எம்.சி. காவிரி நீர் இதுவரை வரவில்லை. ஆந்திராவிலிருந்து சென்னைக் குடிநீருக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீரும் வரவில்லை. குடிநீர் பஞ்சம் சென்னையின் பல பகுதிகளில் ஏற்கனவே வந்து விட்ட பிறகு கூட தமிழக அரசு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவும் இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தர முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதிமுக அமைச்சர்கள் “இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு” முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதை விட்டால் அப்பல்லோ மருத்துமனை முன்பு நிற்க விரும்புகிறார்கள். ஆனால், வாக்களித்த மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிமுக அமைச்சர்களும் சரி, அதிமுக ஆட்சியும் சரி எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

புதிய கால்வாய்கள் கட்டுவது, கால்வாய்கள், ஏரிகள், அணைகள் தூர் வாருவது, தடுப்பணைகள் கட்டுவது- என கடந்த ஐந்து வருடங்களில் 1931.81 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தமிழக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இவ்வளவு கோடி ரூபாய் செலவிட்ட பிறகும் ஏன் கடந்த வருடம் பெய்த கன மழை நீரை ஏரிகளிலும், குளங்களிலும், அணைகளிலும் சேமித்து வைக்க முடியவில்லை என்ற நியாயமான கேள்வி எழுகிறது. இன்று தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், அணைகள் எல்லாம் வறண்டு கிடப்பதைப் பார்த்தால் கடந்த ஐந்து வருடத்தில் இந்த சுமார் 2000 கோடி ரூபாய் பணம் உண்மையிலேயே தூர்வாரும் பணிகளுக்கு செலவிடப்பட்டதா அல்லது செலவு கணக்கு மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. கன மழை பெய்த போது அந்த நீரை சேமித்து வைக்கவும் தமிழக அரசு முன்வரவில்லை. இப்போது வறட்சியில் மாநிலம் தவிக்கும் போது “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கவும் தயாராக இல்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே விவசாயிகளின் நலன், மாநிலத்தில் நிலவும் குடிநீர் பஞ்சம், அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலை, பொய்த்துப் போன வடகிழக்கு பருவ மழை போன்ற அனைத்து காரணங்களையும் மனதில் கொண்டு தமிழகத்திற்கு உடனடியாக மத்தியக் குழு ஒன்றை அனுப்பி, வறட்சி நிலைமைகளைப் பார்வையிட்டு, தமிழகத்தை வறட்சியால் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி தமிழகத்தில் நிலவும் அசாதரணமான சூழ்நிலை பற்றி விவாதித்து “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க” சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக முழு ஒத்துழைப்புத் தர தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.