சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்தை  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி  திங்கள் கிழமை முற்றுகை போராட்டம் நடத்தியது.

இந்த போராட்டம் அறிவித்த உடனே காவல் துறை நுங்கம்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியைச் சுற்றி அரண் அமைத்து போராட்டத்தை தடுக்க முயன்றது.  ஆனாலும் புமாஇமு அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தின் போது பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர்  கணேசன் கூறியது :

“சமீபத்தில் மல்லையா உள்ளிட்ட 63 கருப்புப் பண முதலாளிகளின் 7016 கோடி ரூபாய் கடனை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது. ஆனால் சில ஆயிரங்களையும், ஒரு சில லட்சங்களையும் கடனாகப் பெற்ற மாணவர்களை குற்றவாளிகள் போல சித்தரிக்கிறது அரசு.

மேலும் தற்போது கடனை வசூலிக்கும் வேலையை ரிலையன்சு கந்துவட்டி கும்பலிடம் தந்துள்ளது. இதனால் மதுரையில் மாணவர் லெனின் என்பவர் தூக்கிட்டு மாண்டு போயுள்ளார். பல லட்சம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஆகவே மாணவர்கள் அனைவரின் கல்விக் கடனையும் உடனே ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மாணவர்களே கல்விக்கடனை செலுத்த மறுப்போம்! மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரையும் இணைத்து இப் போராட்டத்தை எடுத்துச் செல்வோம்” எனக் கூறினார்.