சிவராஜ்

தங்களின் இருப்பை எல்லோருக்குமாக பங்கிட்டுக்கொட்டு எல்லாபுறத்தையும் கருணையின் ஒளிகளால் நிரப்பிய சமணர்களின் படுக்கைகள் இருக்கும் ஒரு மலையடிவார கிராமம்.

எண்ணற்ற அழிவுகளால் சூழலின் பாதிப்பால் தாக்குண்ட மனிதனின் பேராசைக்கு பூமியின் சாட்சியாக நிற்கும் கிரானைட் குவாரிகளுக்கு அருகாமையிலான ஒரு கிராமம்.

காந்தியின் வழியில் எண்ணற்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து எளிய மக்களுக்கான கல்வியை முன்னெடுத்த அதற்காக பள்ளியை அமைத்து காந்தியின் பெயரில் துவங்கி பயணிக்கும் வாடிப்பட்டியில் ஒரு பள்ளி.

என நம் பயணம் செய்த பாதைகள் நமக்கு எண்ணற்ற படிப்பினைகளையும் அனுபவங்களையும் தந்தன. வெவ்வேறு நிலத்தில் விதவிதமான பெயர்களுடன் அன்பு நிறைந்த குழந்தைகளின் ஸ்பரிசங்களுடனும்.

கடந்த நாட்களில் மதுரையிலும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலும் கண்டடைந்த குழந்தைகளின் உலகம் எண்ணற்ற அற்புதங்களை காட்டியது. கிராமங்களிலும்,நகரங்களிலும் அதுவரை குப்பை கூழங்களை இடமாக்கியிருந்த பொருட்கள் குழந்தைகளின் பொம்மைகளாய் அந்த உலகை அன்புணர்வால் நிரப்பியிருந்தது.

நம்முடன் வாழூம் நமக்கு மூத்த மரங்களின் பெயரை கூட அறிந்துகொள்ள நேரமற்ற நிலையுள்ள உலகில் எண்ணற்ற மரங்களின்,பறவைகளின்,செடிகளின் பெயர்களை கண்டறிந்து கேட்டு அதன் பயனை அறிந்த தருணத்தில் நாம் இன்னமும் குழந்தைகளிடமிருந்து உள்வாங்கிக்கொள்ள கற்றுக்கொள்ள எண்ணற்ற இடங்கள் உண்டு.

சேவாப்பூர் இன்ப சேவா சங்க பயணம் குறித்தும் அந்த அனுபவங்களையும் தனியொரு கட்டுரையாகவே பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

அடுத்த கட்டமாக இந்த வார பயணங்களில், மாஞ்சோலை, காரையாறு, போன்ற மலைக்கிராமங்களை நோக்கியும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிவகாசியிலும் குழந்தைகளை நோக்கிச் செல்கிறோம்.

விலைமதிப்பற்ற பூவரச மரத்தின் முதிர்இலை ஒரு குழந்தையின் கைகளில் ஓசையெழுப்புகிறது. அந்த ஓசைகளால் நிரம்பிய குழந்தைமை நோக்கி பயணிக்கிறோம்.

வாய்ப்புள்ள நண்பர்கள் விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளவும்.

சிவராஜ், குக்கூ குழந்தைகள் வெளி இயக்கத்தின் நிறுவனர்; தும்பி சிறுவர் இதழின் ஆசிரியர்.

தொடர்புக்கு: Siva Raj