தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுச்சூழல் முன்னோடிகளில் ஒருவரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியுமான  Y.டேவிட் இன்று காலை மதுரையில் மாரடைப்பால் காலமானார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் தயாளன் எழுதியுள்ள இரங்கல் குறிப்பு:

தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுச்சூழல் முன்னோடிகளில் ஒருவரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியுமான மாமனிதர் Y.டேவிட் அய்யா அவர்கள் இனி நம்முடன் இல்லை. இன்று காலை மதுரையில் 4.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் பொய்கை கரைப்பட்டியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3.0 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

மிக முக்கியமான ஆளுமையை இழந்திருக்கிறோம். அவருடன் பழகிய நாட்கள் இனிமையானவை. மறக்க முடியாதவை. பண்பாளர். தமிழ்நாட்டில் சூழலியல் குறித்த புரிதலை ஏற்படுத்திய முன்னோடிகளில் முக்கியமானவர். தன் முனைப்பும் பாசாங்கும் இல்லாத எளிமையான மனிதர்.
2015 ஆம் ஆண்டு அவரை நீண்ட நேர்காணல் செய்திருந்தேன். இந்திய, தமிழக, அரசியல் சுற்றுச் சூழல் வரலாறு குறித்து தீர்க்கமான பார்வையுடனும் விமர்சனத்துடனும் அவர் உரையாடினார். கூடன்குளத்தின் தொடக்ககால போராட்ட வரலாறு குறித்து விவரித்திருந்தார்.

Global Warming என்ற சொல்லாடலுக்கு எதிராக Warming the global என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இந்த உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தார். அரசியல், பொருளாதாரம் என்று எல்லாவற்றையும் புவி வெப்பமாக்கல் என்ற கோணத்திலேயே பேசி வந்தார். அவருக்கு நிறைய கனவுகள் இருந்தன. திடுதிப்பென்று ஏற்பட்டுள்ள அவரது பிரிவு அவரது மனைவி, பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி இருக்கும் வருத்தத்தையும் ஆற்றாமையையும் காலம் சரி செய்யும் என்று நம்புகிறேன்.