கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை தடை செய்தார் இந்திய பிரதமர் மோடி. இந்த திடீர் அறிவிப்பால் பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் காத்திருக்கின்றனர். அறிவிப்பு வந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் கூட்டம் குறையவில்லை. வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பணிச்சுமை தாங்காமல் 11 பேர் இறந்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள பேங்க் ஆஃப் பரோடோ வங்கி கிளையில் பணியாற்றும் 45 வயதான காசாளர் வர்ஷா, 17 மணி நேர பணிச்சுமையால் பணி இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார்.  மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டு காப்பாற்றப் பட்டிருக்கிறார் வர்ஷா. மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போதிய ஊழியர்களை வங்கிகளுக்கு நியமித்து, நிலைமை சீராக்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்த போதும், வங்கி ஊழியர் தொடர்ந்து பணிச்சுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.