இரா. ஜவஹர்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்துவிட்டார்
“நல்ல நோக்கத்துக்கான நடவடிக்கை இது. எனவே கொஞ்சம் கஷ்டப்படலாம்“ என்று சிலர் கூறுகிறார்கள். ” நோக்கம் நல்லதுதான். ஆனால் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யாததுதான் தப்பு “ என்று சிலர் கூறுகிறார்கள்.

சரி. அந்த நோக்கங்கள் என்ன ? அவை இந்தத் தடை மூலம் நிறைவேறுமா ? நான்கு நோக்கங்களை மோடி தெரிவித்தார். ஒவ்வொன்றையும் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

  1. கறுப்புப் பணத்தை ஒழிப்பது. இது முடியுமா ? கருப்புப் பணத்தில் 90 சதவிகிதம் வெளி நாட்டு வங்கிகளில் உள்ளது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி கூறினார். இவ்வாறு பெரும்பகுதி வெளிநாட்டிலும், உள்நாட்டில் நிலம், கட்டிடம், தங்கம் ஆகியவற்றிலும் போடப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தில் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ரூபாய் நோட்டுகளாக உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது. எனவே 94 சதவிகிதத்தை விட்டுவிட்டு 6 சதவிகிதத்துக்குக் குறிவைப்பதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.

  2. கள்ள நோட்டுகளை ஒழிப்பது. இது முடியுமா ? நாட்டில் புழக்கத்தில் இருப்பது 17 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள். இதில் கள்ள நோட்டுகள் வெறும் 400 கோடி ரூபாய் மதிப்புள்ளவை மட்டுமே. இதில் கணிசமான பணத்தை மாற்றுவதற்குள் ஒழித்துவிட முடியும்தான். ஆனால் மிக விரைவில் புதிய நோட்டுகளின் கள்ள நோட்டுகள் வந்துவிடும்.

  3. பயங்கரவாதிகளின் பணப்பரிமாற்றம் ஒழிக்கப்படும். இது முடியுமா ? பயங்கரவாதிகளின் பணப்பரிமாற்றம் மிகப் பெரும்பாலும் இணைய வழிப் பரிமாற்றமே.

  4. ஊழலை ஒழிப்பது. இது முடியுமா ? கார்ப்பொரேட் என்னும் பெரு நிறுவனங்கள் சேவைக் கட்டணம் என்ற பெயரில் சட்டப்படியே பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் அளித்துவருகின்றன. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் செலவிடும் கோடானு கோடி ரூபாய்க்கு சட்டப்படி எந்த வரம்பும் கிடையாது. பெரும்பாலான கட்சிகள் இப்படிப் பணக்கார்களிடம் பணம் வாங்கித்தான் ஆட்சி அமைக்கின்றன. பணக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. அரசு வங்களில் லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் திருப்பித் தராதவர்களின் கடன்கள் ரத்துச் செய்யப்படுகின்றன. எல்லாமே சட்டப்படி ! சட்ட விரோதமான ஊழல் தனிக் கதை ! எப்படி ஊழல் ஒழியும் ?!

எனவே மோடியின் அறிவிப்பு மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பதைப் போன்றது. எலி போன்ற சில கறுப்புப் பணப் பேர்வழிகள் பாதிக்கப்படலாம். ஆனால் இந்த அற்பமான பலனுக்காக, மலையளவு துன்பத்தை மக்களை சுமக்கச் செய்யும் கொடூரம் இது. எலிகள் பாதிக்கப்படும்போது கறுப்புப் பணப் புலிகளும், டைனோசார்களும் மோடியின் தோள் மீது கை போட்டுச் சிரித்தபடி உலாவி வருகின்றன.

சரிந்துவரும் தனது செல்வாக்கைச் சரி செய்வதற்காகவும், சமீபத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் சவடால் பிரச்சாரம் செய்வதற்காகவும் மோடி அடித்துள்ள குரூரமான ஸ்டண்ட்தான் இது.

(நாடாளுமன்ற மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மற்றும் அரசு நிறுவனங்களின் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது. )

இரா. ஜவஹர், மூத்த பத்திரிகையாளர்.