ம.செந்தமிழன்

ம. செந்தமிழன்
ம. செந்தமிழன்

எனது சட்டையின் விலை 10 இலட்சம் ரூபாய் அல்ல. என் வயதான தாயை நான் வங்கி வரிசையில் நிற்க வைக்கவும் இல்லை. அதைப் படம் பிடித்துக் காட்டி நாடகம் நடத்தவும் இல்லை. நேரடியாகச் சொல்வதானால், பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டையை அணிந்துகொண்டு, தன் தாயை வெறும் 2000 ரூபாய்க்காக வங்கியில் காக்க வைக்கும் ‘சாமானியன்’ அல்ல நான்.

நீங்களும் இவ்வாறான ‘சாமானியர்கள்’ அல்ல என நினைக்கிறேன். நாம் உண்மையான சாமானியர்கள். இந்த நாடு, போலித்தனமான சாமானியர்களால் ஆளப்படுகிறது, உண்மையான சாமானியர்களால்தான் உயிரோடு இருக்கிறது.

நாட்டில் வருமான வரி ஏய்ப்பு நடப்பதாகவும், இப்போது நடத்தப்படும் நாடகம் அந்த வரி ஏய்ப்பை ஒழிக்கும் எனவும் ஒரு பொய்யைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். இந்த நாடகத்தை முதன் முதலில் அரங்கேற்றியபோது இதையெல்லாம் அவர்கள் கூறவில்லை. ‘கருப்புப் பண முதலைகளை’ ஒழிக்கும் நாடகம் இது என்றார்கள். இப்போது, ‘வருமான வரி செலுத்துவோராக அனைவரையும் மாற்றுவதுதான் நோக்கம்’ என்கிறார்கள். இந்த நாடகத்தை தயாரித்து இயக்குபவர்களின் முழு நேரத்தொழிலே பொய் பேசுவதுதான் என்பதால், வசனத்தை மாற்றிப் பேசுவதைப் பற்றிய வெட்கம், கூச்சம் அவர்களுக்கு இருக்காது.

ஆனால், மானம் மரியாதை உள்ள நமக்கு இந்த வசனங்கள் முக்கியமானவை. நாம் உண்மையை நாடுவதற்காகப் பிறவி எடுத்துள்ளோம் என நான் உறுதியாக நம்புகிறேன். சில உண்மைகளை உங்கள் கைகளில் ஒப்படைக்க விரும்புகிறேன்.

நாட்டின் வரி வருவாய், பொதுவாக இரு வகைப்படும். நேரடி வரி, மறைமுக வரி ஆகியன அவை. வருமான வரி என்பது நேரடி வரிப் பிரிவில் உள்ளது. உங்களது வருவாயிலிருந்து அரசு வரியைப் பிடித்துக்கொள்ளும். இப்போது நியாயவான் வேடம் போட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர்தான் இத்திட்டத்தை அறிமுகம் செய்தார். சம்பளம் கொடுக்கும்போதே, ஏறத்தாழ 20 சதவீதம் வரை வரிப் பிடித்தம் செய்யப்படும். சராசரியாக, 10 சதவீதம் வரிப் பிடித்தம் நடக்கிறது.

வணிகம் மற்றும் தொழில் செய்வோர் தங்கள் வருமானத்தைக் கணக்கில் காட்டி அதற்கேற்றவாறு ஒவ்வோர் ஆண்டும் வரி செலுத்த வேண்டும். சம்பளம் வாங்குவோர், வணிகம், தொழில் செய்வோர் தவிர வேறு பிரிவினர் பொதுவாக வருமான வரியில் வருவதில்லை.
விவசாயக் கூலிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், மீனவர்கள், வேளாண் பொருள் சிறு விற்பனையாளர்கள் மற்றும் இதர கூலித் தொழிலாளர்கள் மேற்கண்ட இரு வகைகளிலும் வருவதில்லை. அவர்களது வருவாய் எவ்வளவு எனக் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இது இந்த நாடகம் துவங்கும் முன் இருந்த நிலை.

இப்போது வரிசையில் நிற்கும் மக்களில் மிகப் பெரும்பகுதியினர்,
சம்பளம் வாங்குவோர், வணிகம் மற்றும் தொழில் செய்வோர், கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர்தான் என்பதை நீங்கள் நேரடியாகவே காணலாம். இவர்களில் மூன்றாவது பிரிவான அடித்தட்டு மக்களை ஒதுக்கிவிடுங்கள். முதல் இரு பிரிவினராகிய சம்பளம் பெறுவோர் மற்றும் தொழில் வணிகர்கள் அனைவரும் ஏற்கெனவே, வருமான வரி செலுத்திக்கொண்டுள்ளவர்கள்தான்.

இவர்கள் ஒழுங்காக வருமான வரி செலுத்தவில்லை என்று அரசு நினைத்தால், வருமான வரித்துறையின் வழியாக மட்டுமே, நடவடிக்கை எடுக்க முடியும். ’உங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் செல்லுபடியாகாது’ என்ற குலை நடுக்க வசனத்தை உச்சரித்து மிரட்டத் தேவையில்லை. இப்போது விரலில் மை வைத்துக்கொள்வோரில் கணிசமானோர், ஏற்கெனவே தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை வரியாகச் செலுத்திவிட்டவர்கள்தான் என்பது இந்த நாடகத்தின் இழிவான காட்சி.

வணிகம், தொழில் செய்வோர் முறையாகக் கணக்கு காட்டவில்லை என்றால், அவர்களது நிறுவனங்களை வருமான வரித்துறையால் எந்த நேரத்திலும் சோதிக்க முடியும். அமுலாக்கத் துறை என்ற தனிப் பிரிவு இப்பணியைச் செய்து முடிக்கக் கூடும்.
சம்பளம் வாங்குவோரும், வணிகம், தொழில் செய்வோரும் வங்கிகளில்தான் பணத்தைப் போட்டு வைக்க வேண்டும். வீடுகளில் வைத்திருக்கக் கூடாது என்று நெருக்கடி தர வேண்டிய அவசியம் என்ன?

இவர்களிடம் உள்ள பணத்தை வைத்து, நிலம் வாங்குகிறார்கள் என்றால் அதற்கும் வரி செலுத்தித்தான் தீர வேண்டும். நகைவாங்கினால், அதற்கும் வரி செலுத்துகிறார்கள். வாகனங்கள் வாங்கினாலும் வரி செலுத்துகிறார்கள். வீடு வாங்கினாலும் வரி செலுத்துகிறார்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு மிட்டாய் வாங்கினாலும் அந்த ஒரு ரூபாயில் விற்பனை வரியும் இருக்கத்தான் செய்கிறது.

பணத்தை வெளியே எடுத்துச் செலவு செய்தால் அரசாங்கம் விதிக்கும் மறைமுக வரிவிதிப்பு இருக்கத்தான் செய்யும். வரியே செலுத்தாமல் விற்பனை செய்யப்படும் பொருட்களைக் கண்காணிக்கத்தான் விற்பனை வரித்துறையும் அத்துறையில் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

ஆக, பணத்தைக் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் மனநோயாளிகள் இவர்கள் அல்லர். அந்த மனநோயாளிகள் எல்லோரும் அரசியல் கட்சிகளில், திரைத்துறையில், இயற்கைவளக் கொள்ளைத் துறைகளில் இருக்கிறார்கள். அவ்வாறான மனநோயாளிக் கூட்டத்தினரின் ஒரே ஒரு உறுப்பினரைக் கூட வங்கி வரிசையில் காணவில்லை.

வங்கிகளிலும் ஆட்சி பீடத்திலும் உள்ள சக மனநோயாளிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, 40% வரை கழிவு கொடுத்து தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிவிட்டார்கள் அவர்கள். வங்கிகள் எல்லாம் புனிதத் தலங்கள் போலவும், அதன் உயர்மட்டத்தினர் எல்லோரும் தேவதூதர்கள் போலவும் இந்த நாடகம் சித்தரிக்கிறது.

சென்னையின் எல்லாச் சாக்கடைகளும் கூவத்தில் கலப்பதுபோல, நாட்டின் எல்லா ஊழல்களும் வங்கியில்தான் கலக்கின்றன.

’வங்கிக் கணக்கில் பணத்தைக் கொண்டு வருவதில் உங்களுக்கு என்ன சிக்கல்?’ எனக் கேட்கிறார்கள் நாடகத்தின் கோமாளி வேடம் அணிந்த தலைவர்கள். என்ன சிக்கல் எனச் சொன்னால் நீங்கள் திருந்திவிடுவீர்களா அல்லது இதுவரை செய்த பாவங்களைக் கழுவிவிடுவீர்களா?

’அதானி குழுமம் மட்டும் நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடன் ரூ.72,000 கோடி. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இந்திய பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகையும் ரூ.72,000 கோடி’
-இல்லை என்று மறுக்க முடியுமா நாடகக்காரர்களே!

இந்த நாட்டின் மக்களுக்கு உணவு கொடுக்கும் கோடிக்கணக்கான எளியோருக்கு வழங்கிய தொகையை, ஒரே ஒரு நிறுவனத்திற்கு வாரிக்கொடுத்திருக்கிறீர்களே உங்களை நம்பி எப்படி எங்கள் பணத்தைக்கொண்டு வந்து கொட்டுவது?

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியும் 10 இலட்சம் ரூபாய்க்கு சட்டை போடும் சாமானியரும் நெருங்கிய நண்பர்கள். சாமானியர் பயணிக்கும் எல்லா நாடுகளுக்கும் அவரது நண்பரும் பயணிக்கிறார். நீங்கள் எங்களிடம் கூறுகிறீர்கள், ‘அரசுக்கு வரி செலுத்துங்கள்’ என்று.

கூலித் தொழிலாளிகளும் சிறு வணிகர்களுமாகிய அந்த மூன்றாம் வகையினர்தான் என்னைப் போன்ற உண்மையான சாமானியர்களுடன் வாழ்பவர்கள். எங்கள் வருமானத்தை அவர்களுக்குச் சம்பளமாகத் தருகிறோம். அவர்களிடம்தான் காய்கறி வாங்கிக்கொள்கிறோம். அவர்களது கூரைக் கடைகளில்தான் சாப்பிடுகிறோம்.

இனி அவர்களும் தங்கள் சேலை முடிச்சுகளில் உள்ள பணத்தை வங்கிகளில் கொட்ட வேண்டும். அவர்களது வருவாயும் கேள்விகளுக்குள்ளாக்கப்படும். அவர்களும் வரி செலுத்த வேண்டும். ‘காயகறிக்காரராக இருந்தாலும் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்’ எனக் கூச்சலிடும் தேசபக்திக் கோமாளிகளிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்கள், ரிலையன்ஸ் மார்ட்டின் காய்களையே வாங்கட்டும், பகட்டுத்தனமான உணவகங்களிலேயே சாப்பிடட்டும், ’உயர்தர’ மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் திருந்துவார்கள் என நினைக்காதீர்கள்.

தீமைக்கு முட்டுக்கொடுப்போரது முதுகெலும்புகள் தீமைகளின் வலிமையாலேயே முறிக்கப்படும். அவர்கள் எந்த தீயில் எண்ணெய் வார்க்கிறார்களோ அந்தத் தீயே அவர்களை அழிக்கும்.

நாம் உண்மையான சாமானியர்கள் அல்லவா. அதனால் ஒரு சில புள்ளி விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 2014 – 15 நிதியாண்டில் இந்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிய வரிச் சலுகைகளின் மதிப்பு: ரூ. 65, 067 கோடி.

அதே நிதியாண்டில் இந்திய அரசு விவசாயத்துறைக்கு ஒதுக்கிய தொகை: ரூ. 35, 984 கோடி.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை: ரூ. 38,500 கோடி.

உணவு கொடுப்போருக்கும் கூலி வேலை பார்ப்போருக்கும் ஒதுக்குவதை விட இரு மடங்கு அதிகமாக கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக அளித்துள்ள நாடு இது.

இந்த நாட்டில்தான் சாமானியர்கள் வங்கிகளில் காத்துக் கிடக்கின்றனர். காய்கறிக் கடைகளில் உள்ள தாத்தா பாட்டிகள் கையில் புத்தம் புதிதாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் தாள் இருக்கிறது. அவர்களிடம் வாங்குவோரிடமும் அதேதான் இருக்கிறது.
‘எதற்காக எங்களை வதைக்கிறீர்கள்?’ எனக் கேட்டால் அவர்கள் கூறுகிறார்கள், ‘நீங்கள் வரி செலுத்தாமல் ஏமாற்றுகிறீர்கள். உங்களை எல்லாம் வரி செலுத்த வைக்கத்தான் இந்தத் திட்டம்’ என்று.

போலிச் சாமானியர்களே,
இந்த நாடு உண்மையான சாமானியர்களின் வியர்வையில்தான் உயிர் வாழ்கிறது. அவர்களது கையிருப்பையும் வங்கிகளின் வாய்க்குள் திணிக்க வைக்கிறீர்கள். சத்தியமாகச் சொல்கிறேன். இந்தப் பணத்தை வைத்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவும் உங்களை நாசமாக்கும்!

ம. செந்தமிழன், பத்திரிகையாளர்; செம்மை அமைப்பின் நிறுவனர்.

ம. செந்தமிழனின் படத்தை எடுத்தவர் ஒளிப்பதிவாளர் பால் கிரிகோரி