அறிவழகன் கைவல்யம்

அறிவழகன் கைவல்யம்
அறிவழகன் கைவல்யம்

கடந்த வாரத்தில் இரண்டு பழைய திரைப்படங்களைப் பார்த்தேன், ஒன்று “Mulholland Drive”, இன்னொன்று “Saving Private Ryan”. இரண்டுமே மிக நீண்ட காலமாகப் பார்க்க வேண்டும் என்று பட்டியலில் இட்டிருந்த படங்கள், பல்வேறு திரைப்படங்கள் சார்ந்த நூல்களில் இந்த இரண்டு படங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தது, பல்வேறு இணையதளங்களிலும் சிறந்த பத்துப் படங்களின் பட்டியலில் இந்த இரண்டு படங்களும் இருந்தன.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் “Saving Private Ryan” குறித்து அவ்வப்போது நினைவு கொள்வேன், ஆனால், சிறந்த காணொளிப் பதிப்பு கிடைத்தபாடில்லை, “Mulholland Drive” குறித்துப் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் தானிருந்தேன். ஆனால், இந்தக் கணத்தில் ஸ்பீல்பெர்கின் “Saving Private Ryan” கொடுத்த ஆகச் சிறந்த காட்சி அனுபவத்துக்கு நிகரான உளவியல் அனுபவத்தைக் கொடுத்த படமாக Mulholland Drive ஜக் குறிப்பிட வேண்டும்.

ஒரு நிகழ்வின் முடிவில் இருந்து துவங்கும் கனவுகள், அல்லது ஒரு கனவின் முடிவில் இருந்து துவங்கும் நிகழ்வுகள் என்று கலந்து கட்டி காட்சி அனுபவத்தை மூளையின் நியூரான்களின் பதியவைத்து அற்புதமான ஒரு உளவியல் அனுபவத்தைக் கொடுக்கிறார் இயக்குனர் “David Lynch”, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் என்று நம்பவே முடியாத அளவுக்கு இப்போதும் சுவை குன்றாத காட்சி அமைப்புகள், மெல்லிய உறுத்தல் இல்லாத இசை.

Neo – Noir வரிசையில் வியப்பான முடிச்சுகளை கற்பனையில் உருவாக்கிப் பிறகு அந்தக் கற்பனையைத் தவிடு பொடியாக்கும் திரைக்கதை அமைப்பு, கதையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் கூட நீங்கள் குழப்பம் அடையத்தான் வேண்டும், ஒரு விபத்தில் இருந்து தப்பிய பெண்ணின் கதையா?, தன்னுடைய கொலையில் இருந்து வெளியேறிய அதே பெண்ணின் நினைவா?, ஒரு இளம் நடிகையின் தீராத காதலா? எப்படி வேண்டுமானாலும் உங்கள் கற்பனையில் இருந்து பிறகு அசை போடலாம்.

கதை உங்களை ஒரு திசையில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இழுத்துச் சென்று தொடர்பே இல்லாத இன்னொரு திசை தான் உண்மை என்று காட்சிகளால் உறைய வைக்கிற கணங்கள் நிறைய உண்டு இந்தப் படத்தில், வெவ்வேறு அடுக்குகள் (Layers) ஆனால் அதே கதாபாத்திரங்கள், வெவ்வேறு படிமங்கள் (Illusions) ஆனால், அதே திரைக்கதை என்று ஏறக்குறைய Neo – Noir வகைத் திரைப்படங்களைக் கற்றுக் கொள்கிற புதிய இளம் இயக்குனர்களின் அரிச்சுவடி போல இருக்கிறது படம்.

இரண்டு பெண்களின் உணர்வுகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் தொடர்ச்சியை தனது அலாதியான யூகங்களின் “intuition” மூலம் செதுக்கி இருக்கிறார் இயக்குனர். “Naomi Watts” மற்றும் “Laura Elina Harring” இருவருமே தங்கள் பாத்திரங்களை உயிர்ப்போடு உள்வாங்கி வாழ்ந்திருக்கிறார்கள். உண்மையில் இந்தப் படத்தின் சுருக்கமான கதையை என்னால் எழுத இயலாது ஏனென்றால் அது இந்தப் படத்துக்குச் செய்யும் மிகப்பெரிய அவமானம்.

“Saving Private Ryan” பார்த்துக் கொண்டிருந்த போது, முதல் அரை மணி நேரத்தில் ஒரு வழக்கமான அமெரிக்கப் புராணம் பாடும் போர்ப் படம் என்று நினைத்து நிறுத்தி விட்டுப் படுக்கலாமா என்று கூட யோசித்தேன், அப்படி நிகழ்ந்திருந்தால் உலகின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றைப் இவ்வளவு தாமதமாகவேணும் பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

“ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்” மானுடத்தின் கற்பனைகளை, மனித மனங்களின் கட்டுக்கடங்காத தேடலை காட்சிப் படுத்துகிற ஒரு கலைஞன் என்பது அறிவியல் மற்றும் வரலாற்றுச் சிந்தனைகளால் உருவாக்க முடியாத ஜுராசிக் காலத்தைக் “Jurassic Era” கட்டமைத்து சம காலத்தின் காட்சிகளைப் போல இயல்பாக உலவ விட்ட அந்தக் கணத்திலேயே என்னால் உணர முடிந்தது, இப்போதும் ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் கழுத்து நீண்ட டைனோசர் கூட்டம் ஒன்று நடந்து போவதைப் பார்த்த அந்தக் காட்சியைத்தான் காட்சியனுபவத்தின் உச்சம் என்று தயங்காமல் சொல்வேன்.

“Saving Private Ryan” இரண்டாம் உலகப் போர் காலத்தை கண்கள் முழுவதும் பொங்கிப் பெருகப் பெருக வழிய விடும் ஒரு அற்புதம், போரின் ஊடாக “Francis Ryan” என்கிற சகோதரர்களை இழந்த ஒரு போர் வீரனைத் தேடித் கண்டடையும் ஒரு கிளைக் கதையாய் நகர்கிறது படம், ஜான் எச் மில்லர் “John H Miller” என்கிற கேப்டனின் தலைமையில் முன்னேறும் அணி சந்திக்கும் இழப்புகள், நிலப்பரப்புகள், மானுட உணர்வுகள் என்று எல்லாப் பக்கங்களிலும் தனது நுட்பமான கலைத்திறனால் வியப்பின் எல்லைக்கே அழைத்துப் போகிறார் ஸ்பீல்பெர்க்.

மஞ்சள் நிற மாலைப் பொழுதொன்றில் சிதைந்த கட்டிடங்களுக்கு நடுவே அமர்ந்து ஆட்களற்ற ஒரு வீட்டின் கிராமபோனைக் கேட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களைப் பார்க்கும் பொது 1944 ஆம் ஆண்டுக்கு அப்படியே அலேக்காகத் தூக்கிப் போய் நிறுத்தி விடுகிறார், அந்தக் காட்சியும் கட்டிடங்களும் மனதைப் பிசைந்து போரின் அவலங்களையும், வலியையும் காட்சிகளால் உணர்த்திப் போகிறது. மனித மனம் எல்லாவற்றையும் தாண்டி மென்மையானதாய் அன்புக்கு ஏங்கும் ஒரு பேரண்டத் துண்டமாய் மிதக்கும் தக்கையாய் கண்களில் தட்டுப் படுகிறது.

போரில் சிதைந்த ஒரு நகரத்தின் தெருவையும், அதனூடாக நிகழும் ஒரு போர்க் கதையையும் இனி யாரும் சொல்லி விடக் கூடாது என்கிற தீராத வெறியோடு பணியாற்றி இருப்பார் ஸ்பீல்பெர்க் என்று நினைக்கிறேன். படத்தின் மிகப்பெரிய பலம் ஜான் எச் மில்லராக நடிக்கும் டாம் ஹாங்க்ஸ் “Tom Hanks”, துல்லியமான முக அசைவுகள், மெல்லிய அதிர வைக்கும் புன்னகை, உறுதியோடு வழிநடத்தும் கம்பீரம், போரை எதிரொலிக்கும் ஒளிரும் கண்கள் என்று அசர வைக்கிறார் மனிதர். ஒரு போர்ச் சூழலில் நிகழும் நாடகப் படத்தில் இவ்வளவு ஆழமான கலைத்திறனை வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிற நடிப்பு.

“Saving Private Ryan” போர் குறித்த மனித மனதின் படிமங்களையும், நிஜங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கலைப்படைப்பு.

அறிவழகன் கைவல்யம், பதிவர்; சமூக-அரசியல் விமர்சகர்.