அறிவழகன் கைவல்யம்

பாலமுரளிகிருஷ்ணா கர்நாடக இசை வரலாற்றில் அவருடைய நீண்ட ஆலாபனைகளுக்காகப் புகழ் பெற்றவர், கட்டுப்பாடுகளும், எல்லைகளும் அற்ற ஒரு இசை அனுபவத்தை வழங்குவதில் அவரை அடிக்க ஆளே கிடையாது, தொண்டைக் குழியில் இருந்து வெளியேறி விட்ட ஒரு சங்கதியை எங்கே முடிப்பார் அல்லது எப்போது முடிப்பார் என்பதை அவராலேயே கணிக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

அவருடைய நிரவல்கள் முடிவுறாதவை, வெவ்வேறு மேடைகளில் நிரவல்களை அவர் இன்னும் சிறப்பாக முயற்சி செய்து கொண்டே தான் இருந்தார், அதைப் போலவே கல்பனாஸ்வரம் என்று சொல்லப்படக் கூடிய ஸ்வரங்கள் மீதான கற்பனையேற்றங்களில் அவர் ஒரு “ஸ்பெசலிஸ்ட்”.
ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி அவரை ஒரு பாடகராக அறிய முடிந்தது “திருவிளையாடல்” திரைப்படத்தில் வருகிற ஒருநாள் “போதுமா, இன்றொரு நாள் போதுமா” என்று டி.எஸ். பாலையா நடிக்கும் காட்சிகளின் மூலம் தான், தமிழ் மக்களின் மனதில் அந்தப் பாடல் மறக்க முடியாத தாக்கத்தை உருவாக்கிய பாடல், அந்தக் குரல் தீமையின் குறியீட்டை அழிக்க ஈசனுக்கு அழைப்பு விடுத்த குரல் என்று இன்றும் ஊரகப் பகுதிகளில் நம்பி பாலையாவைக் கரித்துக் கொட்டும் மக்கள் இருக்கிறார்கள்.

“சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடலைக் கேட்கும் போதெல்லாம் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிற காலத்தின் வேலியைத் தாண்டிக் குதித்து ஓடுகிற ஒரு மனதைப் பிசையும் உணர்வை இப்போதும் உணர முடிகிறது. எனக்கென்னவோ அவருடைய சிறப்புப் பாடலான “நகுமோமு”வை விட “மிலே சுர் மேரா தும்ஹாரா” என்று குழைகிற அந்த ஆல்பம் அற்புதமான இசை அனுபவத்தைக் கொடுத்தது.

நான்கு வரிகள் என்றாலும் அது ஒரு சகாப்தம் போல நிலைத்திருக்கிறது. குரலின் கற்றைகளில் இருந்து வெளியேறும் வரலாற்று உணர்வைத் தரக்கூடியது அந்தப் பாடல், வரலாற்றின் பழைய கட்டிடங்களில் உலாவுகிற போதோ, ஆட்களற்ற கடற்கரைகளில் தனியாக நடக்கிற போதோ உருவாகிற தனிமையின் குரலைப் போல எப்போதும் காற்றில் உடலற்ற பாலமுரளிகிருஷ்ணாவின் குரல் நிலைத்திருக்கும்.