தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர்எடுப்பதற்கு பெப்சி மற்றும் கோக் ஆலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு, தென்மாவட்ட மக்களையும், விவசாயிகளையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்கிறது தீக்கதிர்.

வழக்கின் பின்னணி:

கோக்- பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சுவதற்கு தடை விதிக்கக் கோரி, டி.ஏ. பிரபாகர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

‘திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும் மற்றும் குடிநீர்த் தேவைக்கும் தாமிரபரணி ஆற்று நீர்தான் ஆதாரம். அதுமட்டுமின்றி, தாமிரபரணியில் இருந்து கூட்டுக் குடிநீர்திட்டம் மூலம் இராமநாதபுரம், விருதுநகர்மாவட்டங்களுக்கும் தண்ணீர் வழங்கப் படுகிறது. இந்நிலையில், 1996-இல் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் இரண்டு ஆயிரம் ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.

இதில், 45 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 2004-ஆம் ஆண்டு கோகோ கோலா தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு 31.54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் தாமிரபரணியில் இருந்து எடுக்கும் ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ. 37.50 மட்டுமே செலுத்துகிறது. ஆனால், நிறுவனத்தில் தயாரிக்கும் குளிர்பானத்தை பல நூறுமடங்கு அதிக விலைக்கு விற்கின்றனர். தாமிரபரணியில் இருந்து அதிகளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது போதிய தண்ணீர் இல்லை. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் தட்டுப் பாடாக உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் குளிர்பான நிறுவனங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என்று பிரபாகர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, ஏற்கனவே நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தபோது குளிர்பான நிறுவனத்துக்கு தண்ணீர் விநியோகிக்கத் தடை கோரும் மனு தொடர் பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு மீண்டும் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் பிரச்சனை இருக்கும்போது, கோக் – பெப்சி நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை வழங்கக் கூடாது என்று நீதிபதிகள் இடைக்காலத்தடை விதித்தனர்.

கோலா நிறுவனம் வந்தது எப்படி?

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ‘கோகோ கோலா’ நிறுவனம், தனது குளிர்பான கம்பெனியை துவங்கியது. துவக்கத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்ற ‘கோலா’ நிறுவனம் தற்போது ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருகிறது.

இதற்காக கோலா நிறுவனம் அரசுக்குச் செலுத்தும் தொகை ஆயிரம் லிட்டருக்கு வெறும் 37.50 காசுகள் மட்டுமே ஆகும்.கோலா நிறுவனத்தின் இந்த தண்ணீர் கொள்ளையால், தாமிரபரணி ஆற்று நீரையே தங்களின் விவசாயத்திற்கு நம்பியிருக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும், தாமிரபரணி மூலம் குடிநீர் ஆதாரத்தைப் பெற்று வந்த நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பொதுமக்களும், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டது. கடைமடைப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

துணை போன அரசு!

சிறு, குறு தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது. எனவே, கோகோ கோலா நிறுவனம் தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால், அரசு நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குடிநீர் பாட்டில் தயாரிப்பதற்கான ஆலையை துவங்க பெப்சி நிறுவனத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

மேலும் அந்த நிறுவனத்திற்கு, ரூ. 15 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட 36 ஏக்கர் சிப்காட் நிலத்தை, ஆண்டு ஒன்றுக்கு வெறும் 36 ரூபாய்க்கு 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தது. அதாவது 36 ஏக்கர் நிலத்தை 98 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதற்கு, பெப்சி நிறுவனம் அரசுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 செலுத்தினால் போதும். மேலும் பெப்சி நிறுவனம், கங்கை கொண்டானிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரும் எடுத்துக் கொள்ளும். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தங்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி வந்தனர்.

  1.  சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் இயங்கி வந்த கோகோ கோலா கம்பெனி, மக்களின் தொடர் போராட்டம் காரணமாக மூடப்பட்டது.

  2. ருச்சி மாவட்டம், சூரியூரில் இயங்கி வந்த பெப்சி நிறுவனம் மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டது.

3.2015 ஏப்ரல் 21ல் பெருந்துறையில் 71.35 ஏக்கர் பரப்பில் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வந்த கோகோ கோலா அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

நன்றி: தீக்கதிர்.