நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கார்க்காலம். அப்போதிருந்த எங்கள் வயலுக்குச் சென்றிருந்தேன். அடைமழைப் பிடித்துக்கொண்டதில் பகலிரவு தெரியவில்லை. கடிகாரமும் இல்லாததால் நேரத்தை அறிய முடியவில்லை. இரவுப்போலவே இருந்தது. அப்போது அங்கிருந்த பெரியவர், ‘தம்பி, பொழுது சாய்ஞ்சிடுச்சே கிளம்பலீயா” என்று கேட்டார். எனக்குத் திகைப்பு. எந்தக் கடிகாரத்தில் இவர் மணி பார்த்தார்? அவரிடமே கேட்டேன். “இது என்ன கம்பசித்திரமா தம்பீ, அதோ பாருங்கள் பீர்க்கம் பூ பூத்திடுச்சு’ என்றார். இதையே வேறு வகையில் சொல்லியிருக்கிறது சங்க இலக்கியத்தின் ஐங்குறுநூறு பாடல் ஒன்று.

‘வான்பிசிர்க் கருவியில் பிடவுமுகை தகைய
கான்பிசிர்க் கற்கக் கார் தொடங்கின்றே’ (461)

வான் மழையால் பிடவத்தின் அரும்புகள் அரும்பின. காடு அம்மழையை ஏற்றுத் துளியைச் சிந்த கார்ப்பருவம் தொடங்கிற்று என விளக்கும் இப்பாடலின் தொடர்ச்சிதான் அப்பெரியவர். பிடவத்திற்குப் பதிலாகப் பீர்க்கம் பூ. இது மாலை நேர கடிகாரம் என்றால் காலை நேரக் கடிகாரம் ஒன்று உண்டு. அதைச் சொல்லியவள் தமிழ் கவிஞர்களின் நிரந்தரத் தோழி ஆண்டாள்.

கீசுகீசு எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின
பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

ஆண்டாள் மார்கழி மாத காலையில் சென்று தம் தோழிகளைப் பாவை நோன்புக்கு அழைக்கிறார். அவ்வாறு அழைக்கும் பாடல்களில் ஒன்றுதான் மேற்கண்ட பாடல். இவ்விடத்தில் எனக்கொரு கேள்வி எழுந்தது. ‘ஆண்டாள் எத்தனை மணிக்கு சென்று தன் தோழிகளை எழுப்பினார்?’ அவரது பாடல்களிலேயே அதற்கான விடை இருக்கிறது. ஆனைச்சாத்தன் என்பது கரிச்சான் குருவி. கரிச்சான் குருவி எப்போது கத்தும் என்று தெரிந்தால் ஆண்டாள் தோழிகளை எழுப்பிய நேரம் தெரிந்துவிடும். நமக்குச் சேவல் கூவுவதே தெரியாது. இதில் மற்ற பறவைகள் கூவும் நேரத்தை எப்படி அறிவது?

இதற்கும் ஓர் உழவுக்குடி பெரியவரிடம்தான் விடைக் கிடைத்தது. ஆனால் அவர் அவ்வளவு எளிதாக விடையைச் சொல்லி விடவில்லை. பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டார். ”ரா முழுக்க ஒரு குருவி கத்திக்கிட்டு இருக்குமே, அது என்ன குருவி சொல் பிறகு உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்’ என்றார். நல்லவேளையாக எனக்கு விடை தெரிந்திருந்தது. ’ஆள்காட்டி’ என்றேன். அவர் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்ல அணியமானார்.

“மார்கழி மாசத்துலே குளிரு மட்டுமல்லாமல் பனி மூட்டமும் அதிகமாக இருக்கும். அதனால கிழக்கு வெளுக்கிறது அவ்வளவு சீக்கிரமா தெரியாது. அந்த நேரத்துலே வீட்டை சுத்தி இருக்கிற காக்க குருவிங்க கத்துறதை வச்சுதான் நாங்க மணியைத் தெரிஞ்சுக்கிட்டு காலங்கார்த்தால வயலுக்குப் போவோம்” என்றார்.

“சேவல் கூவுறதை வைத்தா?” என்று கேட்டேன்.

“இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு இது ஒண்ணுதான் தெரியுது. அதுவும் சேவல் கூவுறதை காதாலே கூடக் கேட்டிருக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் அலாரம்தானே? எங்களுக்கு எந்த அலாரம் இருந்துச்சு? எல்லா நேரத்தையும் குருவிங்கத்தான் சொல்லும்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
அவர் சொன்ன பறவைகள் மணிக் கணக்கை சொல்லத் தொடங்கினார்

கரிச்சான் குருவி மூணு மணிக்கு கத்தும்.

bird-1
குயில் நாலு மணிக்கு கூவும்.

bird-2
சேவல் நாலரை மணிக்கு கூவும்.

bird-3
காக்கா அஞ்சு மணிக்கு கத்தும்.

bird-4
கௌதாரி அஞ்சரை மணிக்கு கத்தும்.

bird-5
மீன்கொத்தி ஆறு மணிக்கு கத்தும்.

bird-6

என் கேள்விக்கு உடனே விடை கிடைத்துவிட்டது. அப்படியானால் ஆண்டாள் தன் தோழிகளைச் சென்று எழுப்பிய நேரம் அதிகாலை மூன்று மணி.

இப்படி ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு கடிகார கணக்கு இருந்திருக்கிறது. இருந்துக்கொண்டும் இருந்திருக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் இதை அறியலாம். ஆனால் இன்று நமக்கும் இயற்கைக்குமான இடைவெளி எத்தனை கிலோ மீட்டர்?

ஒளிப்படங்கள்: ஏ. சண்முகானந்தம்

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.