ஒடிசா மாநிலத்தில் பழங்குடிகள் அதிகமாக வாழும் மல்கன்கிரி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்  உயிரிழந்துள்ளனர். Japenese Encephelitis என்ற ஒருவகை வைரஸ் தொற்று நோய் காரணமாக இறந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சத்து குறைபாடும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது. இந்தச் செய்தி பெரும்பாலான ஊடகங்களில் பதிவாகவில்லை. இங்கே முழு விவரத்தையும் படிக்கலாம்.

இந்நிலையில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. நவீன் பட்நாயக் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leenus Roffun தனது முகநூலில் பகிர்ந்த கருத்து:

ஓடிசா மல்கன்கிரியில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் ஒடிசா அரசின் அலட்சியத்தினாலும் உதாசீனத்தாலும் இறந்துள்ளனர். எதற்காக? மல்கன்கிரியில் உள்ள கனிம வளத்திற்காகவும் நிலத்திற்காகவும்.300 குழந்தைகள் இறந்த பின்பும் கூட ஓடிசா ஊடகங்களிலோ தேசிய ஊடகங்களிலோ பெரிய சலனம் ஏதும் இல்லை. மிகவும் கால தாமதமாக அரசின் சார்பாக அனுப்பபட்டஆய்வு குழுவோ ஆதிவாசி குழந்தைகள் விஷ விதைகளை உண்டது தான் காரணம் என்று ஆதிவாசிகள் மீது தவறை திருப்பி அரசை காக்க முயல்கிறது . அங்குள்ள அடிப்படை சுகாதார வசதிகளின் நிலையினை பற்றியோ அங்கன்வாடிகளின் நிலையினை பற்றியோ குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு பற்றியோ இந்த நோய்க்கு மருத்துவம் பார்க்க போதுமான திறன் அங்குள்ள மருத்துவர்களுக்கு உள்ளதா என்பதை பற்றியோ அந்த ஆய்வறிக்கை பேசவில்லை. ஒரு புறம் போலி மோதல்கள் மூலமாகவும் மற்றொரு புறம் உயிருக்கு போராடும் குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை கூட மறுப்பதன் மூலமாகவும் சப்தமே இல்லாமல் ஒரு இன படுகொலையையே நிகழ்த்தி வருகிறது நவீன் பட்நாயக் அரசு ..