இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என தீடீரென அறிவித்தார்.  செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார். செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக வங்கிகளில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் தங்களது பணத்தை பெறுவதற்கும் பணத்தைமாற்றிக் கொள்வதற்கும்  மக்கள் கூடுவதால் கூட்ட நெரிசலிலும், கடும் வெயிலிலும் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது என்கிறது தீக்கதிர் நாளிதழ்.

நவம்பர் 22ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நஜஃப்கர்கில் உள்ள ஓரியண்டல் வங்கி கிளையில் சதீஸ் குமார் (49) என்ற காய்கறி வியாபாரி வரிசையில் காத்திருந்தார். காலை11.30 மணிக்கு வங்கிக்கு சென்றவர் செல் போன் மூலம் மதியம் 2 மணிக்குள் பணத்தை டெபாசிட் செய்துவிடுவேன் என்று மனைவியிடம் கூறியுள்ளார். பின்னர் 2.30 மணியளவில் வெயில் தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரது உடையில் ரூ.50,000 பணம்இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதேபோன்று பழைய டெல்லியில் உள்ள வங்கி முன்பு 8 மணி நேரம் காத்து நின்ற 70 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மேலும் உத்தரப்பிரதேசம் மாநிலம் டியோரியாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் 65 வயதான ராம்நாத் குஷ்வாகா கூட்டநெரிசலில் மிதிப்பட்டு இறந்தார். குல்ரிகா கிராமத்தைச் சேர்ந்தவரான ராம்நாத் குஷ்வாகா தனது மகளின் பிரசவத்திற்காக பணம் எடுக்க வரிசையில் நின்றுள்ளார்.

தமிழகத்தில் ரூபாய் நோட்டு பிரச்னையால் குறித்த நேரத்தில் பணம் கட்ட முடியாமல் கோவையைச் சேர்ந்த குழந்தை ஒன்று இறந்துவிட்டது.

வங்கியில் வரிசையில் நின்றவர்கள் மட்டுமல்லாது, கடுமையான பணிச்சுமை காரணமாக வங்கி ஊழியர் 11 பேர் இறந்துள்ளதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.