பத்தி

மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு முன்பே தெரியும்: மோடியின் முன்னாள் கூட்டாளி யதின் ஓசா

விஜயசங்கர் ராமச்சந்திரன்

விஜயசங்கர் ராமச்சந்திரன்
விஜயசங்கர் ராமச்சந்திரன்

யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை, குஜராத்தில் பிஜேபிக்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலிருந்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன என்றும் குற்றம்சாட்டுகிறார். நவம்பர் 8 இரவிலிருந்தே பிஜேபியின் தேசியத்தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்கள் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறும் இவர், அதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறதென்கிறார்.

தான் கூறுவது தவறென்று நிருபிக்கும்படி பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறார். முகநூலில் ஓசா எழுதிய கடிதத்தை எடுத்து இந்தியா சாம்வாத் என்கிற இணைய இதழ் வெளியிட்டுள்ளது.

இதோ அந்தக் கடிதம்:

பெறுநர்
ஸ்ரீ நரேந்திர மோடி
மதிப்பிற்குரிய இந்தியப் பிரதமர்
7, லோக் கல்யாண் மார்க்,
நியூ டெல்லி

அன்புள்ள நரேந்திரபாய்

இந்தக் கடிதம் கிடைக்கும் வேளையில் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நவம்பர் 8, 2016 அன்று ரூபாய் நோட்டுகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தீரச்செயலுக்காக என் இதயத்திலிருந்து உங்களை வாழ்த்தினேன். துரதிருஷ்டவசமாக என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சொன்ன செய்தி இது: நவம்பர் 8 நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத் நகரத்தின் பெரிய தொழிலதிபரின் மனைவி அங்கிருந்த முன்னணி நகைக்கடைக்கு வந்து முன்பே பதிவு செய்து வைத்திருந்த 20 கோடி ரூபாய மதிப்புள்ள தங்கத்தை வாங்கினார். அவர் வரும்போது தங்கம் பெட்டியில் தயாராக இருந்தது. இரண்டு நிமிடங்களில் பணம் செலுத்தப்பட்டு வியாபாரம் முடிந்தது. அவர் அந்த கடைக்கு வந்தது முன்பே பதிவு செய்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கத்தான் எதேச்சையாகக் கடைக்கு வந்தார். அவர் ஒரு மிகவும் பிரபலமான மருத்துவர்.

உங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி ஒரு காலத்தில் உங்கள் கிச்சன் காபினெட்டில் இருந்தவன் என்ற முறையில் எனக்கு உடனே பொறி தட்டியது. நாட்டின் 50 சதவீதக் கருப்புப்பணம் வைத்திருக்கும் உங்களுக்கு நெருக்கமான அன்பான அந்த தொழிலதிபரருக்கு உங்களது ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்த தகவல் நீங்கள் அறிவிப்பதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றியே ஒரு நாள் முழுவதும் சிந்தித்து, விசாரணைகள் நடத்திய பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. இந்த வெகுஜன நோக்கிலான நடவடிக்கையின் மூலமாக இந்த நாட்டு மக்களை நீங்கள் முட்டாள்களாக்கி விட்டீர்கள்.

உண்மையில், தேச நலனுக்காக என்று சொல்லி நீங்கள் எடுத்த நடவடிக்கை உங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்புக்குரியவர்களையும், உங்கள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் மேலும் பணக்காரர்களாக்குவதற்காகத்தான். அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட் வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அவர்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் முன்னால் 37 சதவீதக் கமிஷனுக்கு கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக ஒரு பெரிய வரிசை இருக்கிறது. தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்களை எடுத்துச் சென்றால் அங்கிருக்கும் ஊழியர்கள் அதை எண்ணி 63 லட்ச ரூபாய்களைக் கொண்ட ஒரு பையைக் கொடுப்பார்கள். இந்த வீடியோவை வெளியிட்டு விடலாம். ஆனால் நீங்கள் அமித் ஷாவின் சகாக்களை விட்டுவிட்டு வீடியோவில் இருப்பவர்களைத் தண்டிப்பீர்கள். ஆயினும் நான் அந்த வீடியோவை இரண்டு அல்லது மூன்று மூத்த ஊடகவியலாளர்களுக்குக் காட்டிவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புவேன். ஒன்றுக்கு இரண்டு முறை அந்த வீடியோவைச் சோதித்து விட்டு நான் சொல்வது உண்மைதானா என்று அவர்களிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

கூட்டுறவு வங்கிகளில் பெரிய அளவில் நடைபெற்ற முறைகேடுகளையும், சட்டவிரோதச் செயல்களையும் பற்றி விவரம் அறிந்தபின்தான் நேற்று நீங்கள் தடைவிதித்தீர்கள் என்று உங்களை அறிந்த யாரும் நம்பமாட்டார்கள். உங்களுடைய எதிரி கூட உங்களின் செயல்திறனையும், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மதிக்கிறார்கள். அந்த முக்கியாமான அம்சத்தினைக் குறித்து நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம். நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையின் முழு வரைபடத்தையும் மனதில் கொள்ளாமல் நீங்கள் ஒரு செயலில் இறங்க மாட்டீர்கள் என்று உங்களை நன்கு அறிந்த எனக்குத் தெரியும். ஒரு நடவடிக்கையினால் விளையப்போகும் அனைத்து சாதக பாதகங்களும் உங்கள் சிந்தையில் பிரகாசமாக இருக்கும். நான் மிகுந்த மரியாதையுடன் சொல்லவிரும்புவது என்னவென்றால், கூட்டுறவு வங்கிகளின் முறைகேடுகள் அனுமதியுடந்தான் நடந்திருக்கின்றன. ஏனெனில், குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பிஜேபி ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து நவம்பர் 9 அதிகாலை 5 மணி வரை இந்த வங்கிகள் 500 மற்றும் 1000 தாள்களுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகளை மாற்றியிருக்கின்றன. நவம்பர் 8 அன்று நாட்டிலுள்ள எல்லா வங்கிகளிலும் துல்லியமாக எவ்வளவு மதிப்புடைய ரொக்கம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி மூலமாகக் கேட்டிருக்கிறீர்கள். அந்த விவரங்களை வைத்து நான் சொன்னது உண்மைதானா என்று நீங்களே உறுதிசெய்து கொள்ளுங்கள். நான் சொன்னது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பேன்.

சுறாமீன்களும் திமிங்கிலங்களும் தப்பித்து விட்டன, உங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு முன்பே உங்களது நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்று இந்திய மக்களிடையே நிலவும் ஏதாவது சந்தேகத்தைப் போக்குவதற்கு, நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாக அறிவித்தவர்களைப் பற்றி இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட வேண்டும். ஃபோர்ச்சூன் 300 பட்டியலில் இருக்கும் 300 தொழில் நிறுவனங்களின் எந்தவொரு சேர்மனோ, நிர்வாக இயக்குனரோ அல்லது இயக்குனரோ இப்படி அறிவித்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக எனக்குத் தெரியும். அப்படி அறிவிக்க வில்லையென்றால் என்னுடைய குற்றச்சாட்டுகள் உண்மை என்றுதான் பொருள்.

4000 ரூபாய்களுக்காக அல்லது சிறு தொகைகளை வங்கியில் போடுவதற்காக பசியிடனும், தாகத்துடனும் வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்தேன். ஒரு மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ, அவுடி, வோல்வொ, போர்ஷா அல்லது ரேஞ்ச் ரோவர் காரையோ அல்லது அதன் உரிமையாளரையோ வங்கிகளுக்கு வெளியிலிருந்த வரிசையில் பார்க்கவில்லை. ஏடிம் அல்லது வங்கி முன் வரிசையில் நிற்பவர்கள்தான் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், மேற்கூறிய கார்கள் வைத்திருப்பவர்களிடம் அது இல்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். ஃபோர்ச்சூன் பட்டியலிலுள்ள 300 நிறுவன அதிபர்களைத் தவிர, ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், காண்டிராக்டர்கள், குறிப்பாக அராசாங்கத்திடம் காண்டிராக்ட் பெற்றவர்கள், சுரங்க உரிமையாளர்கள், குறிப்பாக இரும்புத் தாது எடுக்கும் நிறுவன உரிமையாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எவ்வளவு பணம் வங்கிகளில் செலுத்தியிருக்கின்றனர் என்று இந்த நாட்டு மக்கள் அறிய ஆவலாயிருக்கின்றனர்.

மேற்கூறியவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவில்லையென்றால், 50 சதவீதம் கருப்புப் பணத்தினை பதுக்கி வைத்திருக்கும் 10 அல்லது 12 தொழிலதிபர்கள் முன்னரே உங்களின் நடவடிக்கை குறித்து உங்களிடமிருந்து தகவல் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள உங்களிடம் பெற்றுக் கொண்டு 7000 பேருக்குக் கூட வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கும் இந்த 10-12 நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் வங்கிகளில் எவ்வளவு தொகை செலுத்தியிருகின்றனர் என்று வங்கி வரிசைகளில் சிறு தொகைகளுக்காகக் காத்திருக்கும் வழியறியா ஏழைகளாவது தெரிந்துகொள்ள ஆர்வமாயிருப்பார்கள். அரசின் இணையதளத்தில் 300 முதல் 400 கோடி வரை செலுத்தியவர்களின் விவரங்களையும், அந்தத் தொகைகள் அவர்களின் வருமான வரித் தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குடனோ அல்லது தெரிந்த மூலாதரங்கள் வழியே வந்த வருமான அளவுடனோ ஒத்துப்போகவில்லையெனில், வருமானவரித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நவம்பர் 8 இரவு எட்டு மணிக்கு முன் எவ்வளவு தங்கத்தையும், வைரத்தையும் யார் வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டுமென்றும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உச்சாணிக் கொம்பில் இருக்கும் வெகு சிலர் பெருமளவு தங்கத்தையும் வைரத்தையும் அந்த நேரத்தில் வாங்கினார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க உதவும்.

உங்களின் நடவடிக்கை நாட்டின் நலனுக்காகவா அல்லது நேரடியாக உங்களுக்கும், உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கும் உங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்மை செய்வதற்காகவா என்று இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தயைகூர்ந்து, கருணை உள்ளத்துடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்களிடம் உண்மையான,
யாதின் ஓசா

விஜயசங்கர் ராமச்சந்திரன், ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.