கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடுசெய்து வெற்றிபெற்றதாகவும் எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. புதனன்று (நவ. 23) 4வது முறையாக மு.க.ஸ்டாலின் நீதிமன் றத்தில் நேரில் ஆஜாராகி மனுதாரரின் வழக்கறிஞர் ராமானுஜத்தின் குறுக்கு விசாரணைக்கு பதில் அளித்தார். அப்போது, திருமங்கலம் பார்முலா போல் கொளத்தூர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப் பட்டதா என்ற கேள்விக்கு,

“திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன ? எனக்கு புரியவில்லை, எனக்கு தெரியவில்லை. நான் பணப்பட்டுவாடா செய்ததாக கூறுவதை மறுக்கிறேன்’’ என்றும் பதிலளித்தார். மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எதிர் தரப்பு வழக்கறிஞரின் 30க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு முக.ஸ்டாலின் பதிலளித்தார்.இதனையடுத்து ஸ்டாலினிடம் சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணை நிறைவடைந்தது. இருதரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதங்களுக்காக டிசம்பர் 8 தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீக்கதிர் செய்தி