முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங், மோடி அரசின் கருப்புப் பண அழிப்பு நடவடிக்கை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்த சில கருத்துகளின் தொகுப்பு இங்கே…

Rajarajan RJ: வருங்காலம் அவரை கனிவுடன் பார்க்கும் என்றார். நிகழ்காலமே அவரை கனிவுடனும் மரியாதையுடனும் பார்க்கிறது
#ManmohanSingh

Senthil Kumar: நீங்க இந்த மாதிரி நல்லா கேள்வி கேட்கிறவருன்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா இந்த நன்னாரி பயலுக கிட்ட நாங்க மாட்டி இருக்க மாட்டோம்.

Kani Oviya: மோடி செய்த ஒரே ஒரு சாதனை மன்மோகன்சிங்கை பேச வைத்தது தான்…

பாவெல் சக்தி: “இந்த நீண்ட பயணத்தில் நாம் இறந்து போவோம்”
இன்று #மன்மோகன்சிங் பேசியதில் என்னை மிகவும் கவர்ந்த மேற்கோள்..

Rabeek Raja: ஆளும் மக்கள் விரோத பாஜக அரசை விமரிசிக்காமல்,மோடியை விமரிசனம், மட்டமான வார்த்தைகளால் வசை என்று வரிசைகட்டியதன் விளைவு,மன்மோகன் சிங் மீட்பராக வந்துவிட்டார். மோடியோ, மன்மோகன் சிங்கோ இங்கு பிரச்சனை இல்லை.நிலவுகிற இந்திய அரசு முறைமை தான் பிரச்சனை. தேவை அரசியல் மாற்றில்லை; மாற்றரசியல்.

Arivazhagan Kaivalyam: பாரதீய ஜனதாக் கட்சி ஒரு நவீனப் பார்ப்பனீயக் கட்சி என்றால், காங்கிரஸ் ஒரு ஆர்தடாக்ஸ் பார்ப்பனீயக் கட்சி, மோடிக்கள் ஒளிவு மறைவின்றி உழைக்கும் எளிய மக்களைக் கொல்வார்கள் என்றால் காங்கிரஸ் கனவான்கள் மறைமுகமாக அதையே தான் செய்தார்கள், காவிகள் சிங்களவனை நேரடியாக எங்கள் மூதாதையர் என்று சொல்லி அணைத்துக் கொள்வார்கள், கதராடைக் கண்ணியவான்கள் எதிர்ப்போம், எதிர்ப்போம் என்று சொல்லிக் கொண்டே திரைமறைவில் ஆயுதம் வழங்கி எம்மை அழித்தார்கள். இன்றைக்கு நாடாளுமன்றத்திலே எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன், வரவேற்போம், மகிழ்ச்சி.

அதற்காகக் காங்கிரஸ் கட்சி எளிய மக்களுக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன கட்சி என்றோ, இந்தக் காவி பயங்கரவாதிகளை அரியணை ஏற்றியதில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கில்லை என்றோ ஒப்புக் கொள்ள முடியாது, என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் இன்றைக்கும் கோலோச்சும் பார்ப்பனீயச் சிந்தனை கொண்ட லாபியின் செயலாக்கத் தோல்வியில் தான் பாரதீய ஜனதாவின் காவி அரசியல் கனவுகள் நனவாக்கப்பட்டது. அங்கிருந்து நேரடியாக வர்ணக் கோட்பாடுகளை உயிர்ப்பிக்க இயலாதவர்களால் தான் பாரதீய ஜனதாவின் அரசியல் செயல்திட்டங்கள் முழுமையாக்கப்பட்டன.

சிக்கல் உண்மையில் கட்சிகளின் பெயரிலோ, செயல்திட்டங்களிலோ இல்லை, அது உண்மையில் உறைவிடம் கொண்டிருப்பது இந்த தேசத்தின் உயர் பதவிகளிலும், அதிகார மையங்களிலும் அமர்ந்திருக்கும் பார்ப்பனீய, பனியாக் கூட்டத்தின் உழைப்புச் சுரண்டலிலும், இயற்கை வளச் சுரண்டலிலும் இருக்கிறது. இந்திய மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்த ஆங்கிலேயனுக்கு அடிமைச் சேவகம் புரிந்த அதே கூட்டத்தின் அடுத்த தலைமுறைதான் இங்கு கட்சிகளும், ஆட்சியும், அதிகாரமும்.

காவிகளோ, கதரோ இங்கிருக்கும் உழைக்கும் எளிய மக்களின் துயரங்களைக் கண்டு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்பதற்கான ஏராளமான சான்றுகளில், நிகழ்வுகளில் இந்த பணத்தை இல்லாதொழித்த முடிவால் நிகழ்கிற எல்லாத் துயரமும் அடங்கும், இது காவிகளின் முட்டாள்தனமான திட்டமிடப்படாத முடிவு என்று சொல்லி முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கும் தேசபக்தர்கள், காவிகள் செய்த திட்டமிட்ட குற்றங்களில் இருந்து அவர்களைத் தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் இன்றைய அவரது பேச்சால் மட்டும் புனிதராகி விட மாட்டார், தன்னால் தடுத்து நிறுத்த முடியும் என்கிற உயர் நிலையில் இருந்தபோதும் பல்லாயிரம் மனித உயிர்கள் கொன்றழிக்கப்பட்டபோது கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு கிடக்கிறது என்று சொன்னவர் தான் இதே மன்மோகன் சிங், வெளியுறவுக் கொள்கை என்கிற முகமூடியைப் போட்டுக் கொண்டு அன்றைக்கு எமது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடித்த ஒரு கொலையாளியின் கூட்டாளியை ஒருபோதும் எளிய மக்களின் தலைவன், அவர்களுக்காகக் குரல் கொடுத்த மகான் என்று சொல்வதற்கு ஏனோ நாக்கூசுகிறது.

விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று விவசாயிகளால் உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் மக்களை நோக்கிச் சொன்ன மன்மோகன் சிங்கின் முதலாளித்துவ முட்டுக் கொடுத்தலை அவரது இன்றைய “திட்டமிடப்பட்ட கொள்ளை, சட்டப்படியான குற்றம்” போன்ற சொற்களால் வீழ்த்தி விட முடியாது.

# # காங்கிரஸ் ஆட்சியில் விதைக்கப்பட்ட பொருளாதார விதைகளைத் தான் இப்போது மோடி உரமேற்றிக் கொண்டிருக்கிறார், மன்மோகன் மரத்தில் பழுக்கவைத்திருப்பார், மோடி மூட்டம் போட்டு நாளையே பழுக்க வைக்க முயற்சி செய்து பார்த்திருக்கிறார், மற்றபடி மோடிக்கும், மன்மோகனுக்கும் தலைப்பாகை மட்டும்தான் வேறுபாடு # #

Vaa Manikandan: நம் நாட்டில் மட்டும் ஒரே ஒரு பேச்சில் ஹீரோ ஆகிவிடலாம். மோடி ஆனார். பிறகு கன்னையா குமார் ஆனார். இப்பொழுது மன்மோகன் சிங்கையும் ஆக்கிவிட்டார்கள். எமோஷனலைக் குறைக்கவே மாட்டோம் போலிருக்கு 🙂

Yamuna Rajendran: மன்மோகன் சிங்கின் உரையை இரு விதங்களில் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். மோடியின பொருளாதாரக் கொள்கைகளின் ஆதாரபுருஷனாக அவரைப் பார்ப்பது ஒன்று. மோடியின் கள்ளப் பணக் கொள்கையின் உடனடி மனித அவலத்தையும் அதற்கு அவர்கள் கொடுத்த உயிர்விலை எனும் உணர்ச்சிகரமான பிரச்சினைகளையும் பார்ப்பது பிறிதொன்று. மன்மாகன் சிங் மோடியின் கொள்கைகளின் நடைமுறையாக்கத்தில் இருக்கிற மனித அவலத்தைத் துல்லியமான சொற்களில் விவரித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் மோடியின் மனம் உறைந்த வன்மனம். மன்மோகன் சிங்கிடம் இன்னும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது. இன்றைய நிலைமையில் அதனை ஒப்புவதில் என்ன பிழை இருக்க முடியும்?