தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் விவசாய நிலங்களை மனைகளாக பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி வருகின்றனர், இந்நிலை தொடர்ந் தால் அடுத்த மூன்றாண்டுகளில் 20 விழுக்காடு விவசாய நிலங்கள் மட்டுமே மீதமிருக்கும்.

எனவே தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் விளைநிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் கடற்கரையோரங்களில் 500 மீட்டர் தொலைவுக்கு கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று தடை உள்ள நிலையிலும் அதை மீறி கட்டுமான பணிகள் அதிகரித்து வருவதால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை அறிந்தோம். எனவே, மத்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் 2016 ஐ பின்பற்றி புதிய சட்டம் கொண்டு வரவுள்ளோம். மேலும் அதன் வரைவைத் தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று புதுச்சேரி அரசு வழக்கறிஞர் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரண்டு வாரத்தில் புதுச்சேரி அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.