ஜனவரியில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவுக்காக புத்தகங்கள் வேகமாக தயாராகி வருகின்றன. பொதுவாக வெளியிட்டு விழாக்களில் தொடங்கும் இலக்கிய சர்ச்சைகள், இந்த ஆண்டு  புத்தக தயாரிப்பின்போதே தொடங்கியிருக்கின்றன. சர்ச்சையில் மையமாக உயிர்மை பதிப்பகம்.

உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட தகவலே சர்ச்சையின் தொடக்கம்:

“எனது மற்ற இரு கவிதைத் தொகுப்புகளுக்குமான அட்டைப்படங்கள் தயாராகிகொண்டுக்கின்றன. சந்தோஷ் நாராயணினிடம் சற்று முன் பேசினேன். ” ‘ தித்திக்காதே’ தொகுப்பு காதல், ஆண் – பெண் உறவுகள், ரொமாண்டிஸம் , உறவுச் சிக்கல்கள் சார்ந்த கவிதைகள் கொண்டவை..அதற்கேற்ற மூடில் கவர் இருந்தால்..”

இடைமறித்த சந்தோஷ் ” அவ்வளவு விளக்கம் எல்லாம் வேணாம் அண்ணா…உங்கள் காதலிகளுக்கும் சிநேகிதிகளுக்கும் புடிச்ச மாதிரி கவர் இருக்கணும்..அதானே சொல்ல வறீங்க..?” ஆண்டவா..இந்த உலகத்திற்கு நான் நல்லவன் என்று எப்படி நிரூபிப்பதென்றே தெரியவில்லை.” என்ற மனுஷ்யபுத்திரனின் நிலைத்தகவலுக்கு எழுத்தாளர் போகன் சங்கர்,

“உயிர்மை தன்னுடைய அட்டைப் பட வடிவமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். செயற்கைத் தனம்(பிளாஸ்டிக் தன்மை) அதிகமாக இருக்கிறது. நீருக்குள் இருந்து சில குரல்கள் என்றால் நீருக்குள் ஒரு ஆள் இருப்பது போல் காண்பிக்க வேண்டுமா?இருளில் நகரும் யானை என்றால் இருட்டைக் காண்பிக்க வேண்டுமா?” என கருத்து சொல்கிறார்.
மனுஷ்யபுத்திரனின் எதிர்வினை:

“தலைப்புகளை கவிதையின் பொதுவான தளம் சார்ந்து தேர்வு செய்கிறேன். சில சமயம் அட்டை அதை பிரதிநித்துவம் செய்யும். மேலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எல்லாம் அப்படி நேரடியாக பிரதிநித்துவம் செய்வதல்ல. பொருத்தமாக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே அது பயன்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் விட எந்த ஒரு அட்டைப்படமும் எதையும் முழுமையாக பிரதிநித்துவப்படுத்தாது. உயிர்மை நூல் வடிவமைப்புகள் பிளாஸ்டிக் தன்மையுடன் இருக்கின்றன என்பதெல்லாம் சற்று அவசரமான பொதுமைப்படுத்தல்”

போகன் சங்கர்: கவனித்து விட்டுதான் சொல்கிறேன்.மற்றபடி உங்கள் விருப்பம் சுதந்திரம்.கலை என்பது நேரடியாக சொல்வதல்ல என்ற நிலையில் இது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து.முன்பு ராஜேந்தர் படங்களில்’இதயம் துடிக்குது பாரம்மா’என்றால் பின்னால் ராட்சதமாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருப்பதைக் காண்பிப்பார்.சமீப காலமாக உயிர்மையின் அட்டைப்படங்கள் அப்படித்தான் இருக்கின்றன”

மனுஷ்யபுத்திரன்: “கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்களுக்கு அந்தப் பெயர்களை எழுதவில்லையே”

போகன் சங்கர்:  “தடித்த கண்ணாடி போட்ட பூனையின் அட்டையில் ஒரு தடித்த பூனை கண்ணாடி போட்டுக்கொண்டு இருந்ததே

மனுஷ்யபுத்திரன்: அதை நீங்கள் அப்போதே மறுத்திருக்கலாம். அதற்கான சுதந்திரம் உங்களுக்கு இருந்தது. பொதுமைப்படுத்த வேண்டாம் என்பதான் என் கோரிக்கை. மற்றபடி இதை விவாதிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை

இந்த விவாதத்தில் ஒளிப்படக் கலைஞர் பிரபு காளிதாஸ் தன்னுடைய கருத்தைச் சொல்கிறார்:

“நீருக்கடியில் சில குரல்கள்” என்றவுடன் எல்லாருமே நீல நிறம் தான் தேர்வு செய்வார்கள். அதை சந்தோஷ் செய்யவில்லை. மேலும் அவர் நாவலைப் படிக்காமல் காமா சோமா என்று டிசைன் செய்யும் ஆள் இல்லை. நாவலில் வரும் mood-ஐ நிறங்களில் தேர்வு செய்திருக்கிறார். மிகவும் depressing tones-ஐ படு ரகளையாகச் செய்திருக்கிறார். மேலும் நாவலில் வரும் கதா பாத்திரங்களை விஷுவலாக அற்புதமாக blend செய்திருக்கிறார். நாவலைப் படித்தபின் அட்டை புரியும்.

“இருளில் நகரும் யானை”-க்கு அவர் செய்திருக்கும் டிசைன் இந்த வருடத்தின் வெளியீடுகளில் வரும் முதன்மையானதாக இருக்கிறது என்று தோன்றுகிறது. அந்த அட்டையைப் பார்க்கும்பொழுது யானை நம் கற்பனையில் விரிகிறது. //it is too plastic// என்று சொல்வதெல்லாம் காமெடியாக இருக்கிறது.

வடிவேல் ஒரு காமெடியில் சொல்வார். “யோவ், பஞ்சு அருணாச்சலம்ன்னு ஒருத்தர் இருக்கார். அவர் என்ன பஞ்சா விக்கிறார், படம் எடுக்குறாருய்யா… பறவை முனியமான்னு ஒரு கெளவி சுத்திக்கிட்டு இருக்கே…அது என்ன பரந்துக்கிட்டா இருக்கு. பாட்டுப் பாடுதுய்யா …” என்று வரும் ஜோக் மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்வது.

போகன் சங்கர்: நீங்க சேம் சைட் கோல் போடறீங்க..என்னுடைய குற்றச்சாட்டே பஞ்சு அருணாசலத்துக்கு அருணாசலம் தலையில் பஞ்சு இருப்பது போல் படம் போடுகிறீர்கள் என்பதே. so the joke is on you

பிரபு காளிதாஸ்: //so the joke is on you// உங்கள் ஐடி-ய யாராவது ஸ்கூல் பையன் hack செய்துவிட்டானா…? கொஞ்சம் சின்ன புள்ளைத் தனமா இருக்கே…?

மனுஷ்யபுத்திரன் பக்கத்தில் முற்றுப் பெற்ற விவாதம், அட்டை பட வடிவமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பக்கத்தில் தொடர்கிறது..

“கலை என்ன திருட்டு தம்மா?’ என்ற தலைப்பில் நீண்ட பதிவொன்றை எழுதுகிறார் சந்தோஷ் நாராயணன்…

“கவிஞர் மனுஷ்ய புத்திரனின் கவிதைத்தொகுப்பு இது. அரசியல் கவிதைகள் என்றும் சொல்லலாம். நேற்று போகன் ஷங்கர் மனுஷ்யபுத்திரனின் டைம்லைலின் வந்து அட்டைகளின் அழகியல் பற்றி ஒரு பொத்தாம் பொதுவான “குற்றம் குற்றமே” டைப் விமர்சனத்தை வைத்திருந்தார். 🙂

கடந்த வாரம் பனுவல் புத்தகக்கடையில் நான் பேசியதின் வீடியோ பதிவு யூட்யூபிள் உள்ளது. 

போகன் நேரமிருந்தால் அதை பார்க்கலாம். இண்டெர்நெட்டில் கிடைக்கும் ”அப்ஸ்ட்ராக்ட்” படங்களை எடுத்து போட்டு சும்மா டகால்டியாக அட்டைகள் பண்ணுவது பற்றி சொன்னேன். மாஸ்டர்களின் பெயிண்ட்டிங்குகள், புரியாத மாதிரி இருக்கும் புகைப்படங்கள் இப்படி. நானும் பண்ணி இருக்கிறேன். அட்டை எதுவுமே சொல்லாது, சும்மா ஒரு அழகியல் தன்மையுடன் மட்டுமே இருக்கும். அது ஒரு வகை.

பொதுவாக அட்டைகள் என்பது லேசாக திறந்திருக்கும் கதவு மட்டுமே. உள்ளடக்கத்தை மொத்தமாக அட்டைகளில் கொண்டு வர இயலாது. அதனால் சில நேரங்களில் அப்ஸ்ட்ராக்டாக எதையாவது போட்டு விட்டு விடுகிறார்கள். நானும் அப்படி பலதடவை ஈயம் பூசி இருக்கிறேன்.

ஆனால் அப்படி சும்மா அப்ஸ்ட்ராக்ட் போட்டு ஏமாற்றி அலுத்து விட்டதால் இப்போது நான் மிகவும் தேர்ந்தெடுத்து மட்டுமே செய்யும் அட்டைகளை கொஞ்சமாவது Conceptual ஆக பண்ண முயல்கிறேன். suggestiveஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது ஒரு வகை.

சமீப காலங்களில் நான் செய்யும் அட்டைகளை நிறைய மனக்கெட்டு Visual ஆக கொஞ்சம் Narrate பண்ண முயற்சி செய்கிறேன். அது கூட முடிந்த அளவுக்கு நேரடியாக இருக்காது. Layerகளாகத்தான் அந்த கான்செப்டுகள் இருக்கும். எல்லாவற்றையும் விட அதை கம்போஸ் செய்வது வண்ணத்தை தேர்ந்தெடுப்பது எழுத்துருக்களை தேர்ந்தெடுப்பது என்று சுவராஸ்யமான வேலை.

ஒளிச்சும் பதுங்கியும் தலையில் துண்டை போட்டு முக்காடு போட்டபடியும் செய்தால் தான் கலை, கலை நேரடியாக இறங்கி அடிக்கக்கூடாது என்பது போல போகன் சொல்கிறார்.ஒளிச்சும் பதுங்கியும் அடிக்க கலை என்ன திருட்டு தம்மா? பூனை என்றால் பூனையும் யானை என்றால் யானையும் போடக்கூடாது என்கிறார். பூனை என்றால் யானையும் யானை என்றால் பூனையும் போட்டால் சரியாகி விடுமா. இது ரொம்ப பழைய கான்செப்ட். பூனையோ யானையோ அதை எப்படி விஷுவலைஸ் பண்ணுகிறோம் என்பது தான் முக்கியமானது. தலை நிறைய வார்த்தைகள் மட்டுமே நிறைந்திருந்த போன நுற்றாண்டின் தத்துவம் இது.

விஷுவலைஸ் பண்ணுவதில் ஒரு காட்சி கலைஞனுக்கு பழைய பாறை ஓவியங்கள் முதல் இன்றைய அட்வெர்ட்சிங் யுக்திகள் வரை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. சொல்லாமல் சொல்வது, மறைத்து சொல்வது எல்லாம் சுவராஸ்யமானது தான். நானும் எனது அட்டைகளில் அதைத்தான் செய்கிறேன். எனது மினிமலிசம் ஆர்ட் சில நிறைய பேருக்கு புரியவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனது கலைடாஸ்கோப் தொடரில் கூட கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேல் contemporary artistகளை பற்றி எழுதி இருக்கிறேன். இதெல்லாம் தெரியாமல் நான் வேலை செய்ய வில்லை. ஆனால் போகன் அதே பழைய மேட்டிமை வாதிகளைப்போல ஒசரமான திண்ணையில் உட்கார்ந்துகோண்டு தரநிர்ணயம் செய்கிறார். உண்மையான நவீன ஓவியம், கலை சார்ந்த தெளிவு இல்லாதவர்கள் ஒளிந்து கொள்ளும் கோழிக்கூடை தான் “அப்ஸ்ட்ராக்ட்” 🙂

உதாரணத்திற்கு இந்த அட்டையை Decode செய்து பார்ப்போம். காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன் என்பது தலைப்பு. புத்தகத்தில் வெவ்வேறு கவிதைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அட்டையில் கொண்டு வரமுடியாது. புத்தகத்தின் ஒட்டு மொத்த Moodஐ அட்டையில் கொண்டு வர வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். ஒரு வசதிக்காக புத்தகத்தின் தலைப்புக்கவிதையை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அந்த கவிதை ஒரு வகையான Political Satirical கவிதை. காந்தி, எலெக்ட்ரானிக் ராட்டை, கோவணம், ஆட்டுப்பால், இரவு விருந்து என்று நிறைய imageகள் . சமகாலத்தை பகடியுடன் அணுகும் ஒரு கவிதை. இதை எப்படி விஷுவலைஸ் பண்ணுவது. எதிரெதிர் இருக்கும் இரண்டு கோப்பை பால் கிளாஸுகள். அது சுவராஸ்யமாக காந்தியின் கண்ணாடியாக மாறும் விஷுவல் மேஜிக். absurdity. satire. இதில் நேரடியாக நான் எதையும் சொல்ல வரவில்லை. எனக்கு முக்கியமானது விஷுவலாக சுவராஸ்யமாக இருக்கிறதா என்பதே.

இது போலத்தான் அஜ்வா, நீருக்கடியில் சில குரல்கள், இருளில் நகரும் யானை எல்லாவற்றிலும் அந்த Conceptual விஷுவல் மேஜிக் இருக்கும். இதை நானே சொல்ல வேண்டி இருப்பது தான் கொடுமை. ஆனால் மனதில் எந்த முன்முடிவுகளும் இல்லாமல் திறந்த மனதுடன் இவற்றை பார்க்கும் வாசக நண்பர்கள் இந்த அட்டைகளை கொண்டாடுகிறார்கள். போகன் போன்றவர்களுக்குத்தான் (என்ன) பிரச்சனையோ?

நான் சொல்ல வந்த நிறைய விஷயங்கள் விடுபட்டிருக்கலாம். எனது அட்டை வடிவமைப்பு பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லலாம். விஷுவல் சார்ந்தும் கொஞ்சம் ’உரை’யாடலாமே.

எழுத்தாளர் போகன் சங்கர் இந்தப் பதிவில் சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டு சொல்லவில்லை. உயிர்மையின் அட்டைப் படங்கள் குறித்த கருத்தையே சொன்னேன் என்கிறார்…

சந்தோஷ் நாராயணன் நான் உங்களைக் குறிப்பிட்டு சொல்லவில்லை உங்களுக்கு முன்பிருந்தே அப்படித்தான் உயிர்மையில் அட்டைப்படங்கள் இருக்கின்றன. suggestive ஆகா இருக்கலாம். தலைப்பின் literary translation in picture என்ற மாதிரி இருக்கக் கூடாது வேண்டுமானால் உங்களுக்கு முன்பான அட்டைப்படங்களை பாருங்கள் .பெரும்பாலும் ஆர்ட்டிஸ்ட் இல்லாது இணையத்திலிருந்து இறக்கப்பட்டவை .”

போகன் சங்கருக்கு சந்தோஷ் நாராயணன் தந்த பதில்: நீங்கள் இருளில் நகரும் யானை மற்றும் நீருக்கடியில் சில குரல்களை தெளிவாக குறிப்பிட்டிருந்தீர்கள். பொத்தாம் பொதுவாக அப்படி சொன்னது தான் இதை எழுத காரணம். இது போன்ற பதிவுகளை இதற்கு முன்பு நான் எழுதியதில்லை.

போகன் சங்கர்: நடுநடுவில் உங்களது மேட்டிமை வாதம் போன்ற மானே தேனே க்களுக்கு என்னிடம் பதில் இல்லை.அதற்கு விசில் அடிப்பவர்களுக்கும்

சந்தோஷ் நாராயணன்: நேற்று நடந்த உரையாடலில் உங்கள் தோரணை அப்படித்தானே இருந்தது போகன். I dont ignore criticism always. that is good for any art. But criticism ஆர்ட்டை மேம்படுத்த உதவலாம் அப்படியே தூக்கி கடாசுவது எந்த வகை நியாயம். அவ்வளவு தான். டாட்.

போகன் சங்கர்: அது ஒரு பார்வை .அவ்வளவுதான் .எழுதுகிறவனுக்கு புத்தகங்களின் அட்டைப்படங்கள் குறித்து அக்கறை கொள்ள உரிமை உண்டு .ஆனால் அதற்கு நீங்கள் பதில் சொல்லும் முறை மயிராண்டி மங்கூஸ் மண்டையன் மேட்டிமை வாதம் …ம்ம் நன்று உங்கள் நாகரிகம்

சந்தோஷ் நாராயணன்: உங்கள் தடித்த கண்ணாடி போட்ட பூனை (அதற்கு நான் வடிவமைப்பாளர் அல்ல) நூல் அட்டை படத்தின் மீது நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் அதை அப்போதே பதிப்பகத்தாரிடம் சொல்லி இருக்கலாம். தவறே இல்லை. பொத்தாம் பொதுவாக பிற நூல்களின் அட்டைபடங்களையும் போகிற போக்கில் ஒரு சவுட்டு சவுட்டு தள்ளினீர்களே அதை என்னவென்று சொல்வது.

போகன் சங்கர்: அங்கேயே சொல்லியிருக்கிறேனே it seems to be an recurring trend என்று அது எனது அட்டைப்படம் பற்றியது மட்டுமானதல்ல .அல்லது நீங்கள் வடிவமைத்த நூல்கள் பற்றியது மட்டுமானதுமல்ல .அதில் உங்கள் பெயரையும் சொல்லவில்லை .அந்த நூல்களின் பெயர்களை அப்படியே காட்சிப்படுத்தக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தினேன் .அதில் தவறெதுவும் எனக்குத் தோன்றவில்லை.

சந்தோஷ் நாராயணன்: போகன் அப்ஸ்ட்ராக்டாக எதையாவது அட்டையில் போட்டு வைப்பது தான் நல்ல அட்டை வடிவம் என்றால் உங்கள் அடுத்த புத்தகத்திற்கு நான் அப்படியும் ஒரு அட்டை பண்ண தயாராக இருக்கிறேன். ஏற்கனவே அப்படி பண்ணியும் இருக்கிறேன். அது ஒரு வகை. கொஞ்சம் conceptulஆக Narrative ஆகவும் பண்ண முடியும் என்பது இன்னொரு வகை. அதே நேரம் அப்படி பண்ணும் போது கூட ஒரு மாதிரி Subtle ஆகத்தான் பண்ணி இருக்கிறேன். இருளில் நகரும் யானைக்கு கூட இது பொருந்தும். இதுவும் ஒரு வகையான காட்சி அழகியல் தான். நீருக்கடியில் அட்டையைக்கூட பாருங்கள் அதில் ஒருவன் நீருக்கடியில் மட்டும் இருக்க வில்லை. நாவல் படித்தால் அதில் இருக்கும் விஷுவல் விளையாட்டு உங்களுக்கு புரியலாம். ஒரு ஆர்ட்டை பற்றி ஆர்டிஸ்ட் இவ்வளவு விளக்கங்கள் கொடுப்பதே கூச்சமாக இருக்கிறது. காமெடியாக இருக்கிறது.

போகன் சங்கர்: வேண்டாம் வேண்டாம் எழுதுகிறவன் பற்றி மங்கூஸ் மண்டையன் மயிராண்டி எதையாவது கிறுக்கி விட்டு வருவான் போன்ற கருத்தாளர்களுக்கு எனது தரப்பை எடுத்துச் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் படம் எழுதுங்கள்

சந்தோஷ் நாராயணன்: போகன் எனது வீட்டில் கூட கேட்டார்கள். யார் இந்த போகன் ஷங்கர் என்று. நான் கூறினேன்.”உண்மையில் எனக்கு பிடித்த கவி. போகனின் எழுத்துகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்”. எனக்கு உங்களை போன்ற கலைஞர்களிடம் எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு.

கலை இலக்கியத்தில் கடை பிடிக்க வேண்டிய கறார் தன்மை இன்று பெரும்பாலும் இல்லாமலாகி விட்டது. ஆனால் அதை வலியுறுத்துகிற, எஞ்சியிருக்கிற ஆட்களில் நீங்களும் ஒருத்தர். உங்களுடைய ஃஃபேஸ்புக் எழுத்துகளில் இருக்கும் இருக்கும் ’தத்துவார்த்தமான’ நக்கல் நையாண்டி எல்லாம் எப்போதும் நான் ரசிக்கும் ஒன்று. (சம்பந்த பட்டவர்கள் ரசிப்பார்களோ என்னமோ).
உண்மையில் உங்களுடன் சண்டை இடுவதோ மொக்கையாக விவாதங்கள் செய்வதோ என் நோக்கம் அல்ல. என்னுடைய கலை முழுமையானது என்றோ அதை விமர்சிக்கவோ கூடாது என்கிற மனநிலை எனக்கு இல்லை. ஏதோ என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதில் சில நன்றாக வரலாம் சில மொக்கையாகவும் இருக்கலாம்.

நமது சூழலில் Fake intellectual தன்மையுடன் “அனைத்தும் யாம் அறிவோம்” என்கிற மேட்டிமையுடன் எல்லாவற்றை பற்றியும் கருத்து சொல்வது ஒரு மோஸ்தராக இருக்கிறது. நேற்று நீங்கள் சொன்னவை அப்படிப்பட்ட டோனில் தான் இருந்தது. நீங்கள் உண்மையாக சொல்ல வந்தது என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களை விட ஒரு டிசைனராக அதில் எனக்கு ஒரு படி கூடுதல் அக்கறையும் உண்டு. மற்றபடி நமது சூழலின் இலக்கிய, கலை, ஓவிய விஷயங்களில் நல்லது நடந்தால் ஒரு வாசகனாக, பார்வையாளனாக எனக்கும் மகிழ்ச்சியே.

போகன் சங்கர்: நான் கேட்டது என் பதிப்பாளரிடம்.ஒவியர்களிடம் அல்ல .இது குறித்து ஏற்கனவே எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்துள்ளது. அடுத்த முறை ஒரு ஓவியரைப் பயன்படுத்தி புத்தகங்களை கொண்டு வரலாம் என்று தெரிவித்திருக்கிறார். உங்கள் வடிவமைப்புகளைப் பற்றி நேரடியாக எதையும் சொல்லவில்லை ஒரு உதாரணங்களுக்கு அந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.மனுஷின் அன்னிய நிலத்தின் பெண் அட்டைப்படம் கூட அப்படித்தான் இருந்தது.suggestiveness should be subtle என்பது ஏன் கருத்து.பல படங்களில் மிக நேரடியாக இருக்கிறது.கலையின் நோக்கம் சொல்வதுதான்.ஆனால் நேராக அல்ல.

இந்த விவாத்தில் பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்தை தெரிவிக்கிறார். இந்நிலையில் எழுத்தாளர் போகன் சங்கர், உயிர்மை பதிப்பகத்துடனான தன்னுடைய உறவை முறித்துக்கொள்வதாக அறிவிக்கிறார்.

“well

இதற்கு மேல் அங்கிருப்பது சுய மரியாதையுடைய ஒருவர் செய்யக் கூடிய காரியமல்ல என்று நினைக்கிறேன்.மனிதர்களுடன் உறவு பூண முடியும்.ஆனால் கும்பலுடன் உறவு பேணுவது இயலாத காரியம்.ஆனால் இது இப்படித்தான் நிகழும் என்றும் தோன்றுகிறது .ஒரு கலைஞன் செய்யக் கூடிய ஒரே காரியம் கும்பலிடமிருந்து தள்ளி நிற்பதே.ஆனால் அவனிடம் இயல்பாகவே இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வால் அவன் கும்பலை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் .நெருப்பை மெல்ல குப்பைகள் மூடுகின்றன.ஒரு கட்டத்தில் அவன் குப்பைகளைப் பாதுகாக்கிறவனாக மாறிவிடுகிறான்.

ஒரு பதிப்பாளராக எனக்கு மனுஷ்ய புத்திரன் மீது புகார்கள் எதுவும் இல்லை.அதே நேரம் அவருக்காக அவரது அடிபொடிகளை சகித்துக் கொள்ள இயலாது .அவற்றை அவர் கட்டுப்படுத்த முனையவும் இல்லை என்பதை எப்படி அர்த்தம் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை.என் மீதுள்ள மரியாதையை இழந்துவிட்டு என்னால் எதையும் எழுத முடியாது

ஆகவே உயிர்மைப் பதிப்பகத்துடனுனான என்னுடைய உறவை இன்றுடன் முறித்துக் கொள்கிறேன்.இனி என்னுடைய புத்தகங்கள் உயிர்மை வெளியீடுகளாக வராது

மனுஷ்யபுத்திரனது நட்புக்கும் அன்புக்கும் நன்றி”.

போகனின் அறிவிப்புக்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினை..

“உயிர்மையுடன் உறவை முறித்துக்கொள்ளும் பிரகடனத்தை கவிஞர் போகன் சங்கர் வெளியிட்டிருக்கிறார். இது நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே எதிர்பார்த்ததுதான். இப்போது அவருக்கு ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். உயிர்மை இதுவரை 700 நூல்களை பதிப்பித்திருக்கிறது. அதன் அட்டைப்படங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. தனிக்கவனம் பெற்றவை. விமர்சனத்திற்குரிய சில அம்சங்கள் அதில் இருக்கலாம். அது எல்லா பதிப்பகங்களுக்கும் பொதுவான பிரச்சினை. ஆனால் எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்து மட்டையடி அடித்தபோதுதான் மெலிதாக அதை மறுத்தேன். அத்தோடு என்னை பொறுத்தவரை அந்த விவகாரம் முடிந்துவிட்டது. அந்த விவாதத்தை மற்றவர்கள் தொடர்ந்தால் அது போகன் சங்கருக்கும் அவர்களுக்கும் உள்ள பிரச்சினை. மேலும் இதில் இன்று என்ன நடந்தது என்று எனக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாது. இன்றைய மனித சங்கிலி போராட்ட பணிகளிலும் உயிர்மை பணிகளிலும் இருந்தேன். நான் ஃபேஸ்புக்கில் குடியிருப்பவன் அல்ல.

ஆனால் நான் ஏதோ ரசிகக் கும்பலின் தலைவன் போன்றும் அந்தக்கும்பலுக்கு நான் தலைமை தாங்கி அவர்மீது தாக்குதல் நடத்துவதுபோன்றும் புரிந்துகொண்டு அந்தக்கும்பலை கட்டுப்படுத்த தவறிவிட்டேன் என்று எழுதுகிறார். அவர் என்னை அவரது ஆசான் போல நினைத்துவிட்டார் போலும். நான் யாரையாவது எதிர்க்கவேண்டும் என்றால் நானே எதிர்ப்பேன். ஜெயலலிதாவையும் நரேந்திரமோடியையும் தினமும் இலட்சம்பேர் பார்க்க ஊடகங்களில் எதிர்ப்பவன் நான். ஒரு இளம் கவிஞரை எதிர்க்க கும்பலாக ஆள் கூட்டிக்கொண்டு வருவேனா என்ன? நான் ‘ டான்’ ஆசைபடுகிறவன்தான். ஆனால் இப்படி காமெடியாக அல்ல.

அவருடன் யார் இப்போது இந்தப்பிரச்சினையில் முரண்படுகிறார்களோ அவர்கள் தனித்த பார்வைகளையும் உலகங்களையும் கொண்டவர்கள். என்னை அவர்களோ அவர்கள் என்னையோ எந்த விதத்திலும் பிரநிநித்துவப்படுத்தவில்லை. அவர்கள் என்னோடு நிறைய முரண்பாடுகள் கொண்டவர்களும் கூட.

ஒருமுறை சாரு உயிர்மை கூட்டத்தில் ஜெயமோகனின் புத்தகத்தைக் கிழித்தபோது அதை என் தூண்டுதலின் பெயரால்தான் செய்தார் என்று நம்பிய ஜெயமோகன் உயிர்மையுடனான உறவை ஒரு தலைப்பட்சமாக முறித்துக்கொண்டார். போகனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையிலான ஒற்றுமை அயரவைக்கிறது.

போகனுடைய கவிதைகளின் எளிய வாசகன் நான். நானாகத்தான் விரும்பிக்கேட்டு அவர் நூல்களை பதிப்பித்தேன். உயிர்மையோடு இருப்பதில் அவருக்கு சங்கடங்களோ அல்லது உயிர்மையைவிட சிறந்த தேர்வுகளோ இருக்கலாம். அவருக்கு என்றும் என் நல்வாழ்த்துக்கள்.

என் படைப்பு வாழ்வின் உச்சக்கட்டத்தில் நின்று நான் எழுதியவை இந்த ஆண்டின் கவிதைகள். அந்த தொகுப்புகள் ஒரு கனவைப்போல இருந்தன. ஆனால் அதன் அட்டைப்பட அளவிலேயே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் அந்தக் கனவை கலைத்துவிட்டன.

இவ்வளவு கசப்பும் வன்மமும் நிறைந்த, ஒரு உறவை டிஷ்யூ பேப்பர் போல உபயோகக்கிற அகங்காரம் மிகுந்த ஒரு சூழலில் யாருக்காக எழுதவேண்டும்?”