2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இது தொடர்பாக மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கான நூல்களை மணப் பாறையிலிருந்து இயங்கி வரும் செந்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. இதன்படி, விருதுகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வரும் 25-ம் தேதி(இன்றூ) நடக்கவுள்ளது. சிறுகதை நூலுக்கான விருதை ரமேஷ் ரக்சன் எழுதிய ‘ரகசியம் இருப்பதாய்’ நூலும், நாடகத்துக்கான விருதை பேராசிரியர் அ. ராமசாமி எழுதிய ‘தொடரும் ஒத்திகைகள்’ நூலும், நாவலுக்கான விருதினை குணா கந்தசாமியின் ‘உலகில் ஒருவன்’ நாவலும் பெறுகின்றன.

கட்டுரைகளுக்கான விருது அஜயன் பாலாவின் ‘சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்’ என்ற தொகுப்புக்கும், கார்ட்டூனிஸ்ட் பாலாவின் ‘நமக்கு எதுக்கு வம்பு.’ என்ற நூலுக்கும் வழங்கப்படுகிறது. கவிதை தொகுப்புக்கான விருது ‘எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’ தொகுப்புக்காக சூரிய தாஸுக்கும், ‘ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம்’ தொகுப்புக்காக பிருந்தா சாரதிக்கும், ‘எந்தி ரங்களோடு பயணிப்பவன்’ தொகுப்புக்காக சொர்ணபாரதிக் கும், ‘ஒரு சவரக் காரனின் கவிதை மயிருகள்’ தொகுப்புக்காக இ.எம்.எஸ். கலைவாணனுக்கும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது, மறைந்த எழுத்தாளர் ஜெயந்தனின் ‘எண்ணம்’ கட்டுரை தொகுப்பும், ‘வால் நீண்ட கருங்குருவி’ சிறு கதைத் தொகுப்பும் வெளியிடப் படும். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்கள் திருப்பூர் கிருஷ்ணன், சா. கந்தசாமி, திரைப்பட இயக்குநர் என். லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.