கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை நலிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ (90) காலமானார். இதை கியூப அரசு தொலைக் காட்சி அறிவித்துள்ளது.

பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஹவானாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இறந்ததாக கியூப ஊடகம் தெரிவித்துள்ளது.  பிடலின் இறப்பை அவருடைய சகோதரரும் தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ உறுதிப் படுத்தியுள்ளார்.

மாணவராக இருந்தபோது அரசியல் செயல்பாட்டில் இறங்கிய பிடல், அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். பிப்ரவரி 1959-ஆம் ஆண்டு நடந்த கியூப புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த பிடல், 1959-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரை கியூபாவை வழிநடத்தியவர். பிடலின் இறப்பு மூலம் முதல் தலைமுறை கம்யூனிஸ்ட் தலைவர்களின் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் பிடல். அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ 600 மேற்பட்ட முறை பிடலை கொல்ல முயற்சித்ததாக கியூப அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபர் ஆனபோதும், கியூபாவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைவராக பிடல் இருந்தார்.