டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை காங்கிரஸ் குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘காவிரி டெல்டா பகுதியில் ஏற்கெனவே குறுவை பொய்த்து போனது, தற்போது சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயிர்கள் கருகுவதைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எனவே, தமிழக அரசுமும், மத்திய அரசுமும் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து, தொடரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய காங்கிரஸ் குழு அமைக்கப்படவுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதேபோல, பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் பார்வையிட வேண்டும்’ என்றார் திருநாவுக்கரசர்.