கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

கியூபாவின் விடுதலைக்கு புரட்சியின் வாயிலாக வித்திட்டவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் மரணச் செய்தி, விடுதலை உணர்வு கொண்ட அனைத்து இனத்திற்கும் பேரிழப்பாகும். வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று கியூபாவை கல்வி – மருத்துவம் – பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிறுத்திய சமரசமற்ற போராளியாக காஸ்ட்ரோ விளங்கினார்.

நமது தலைவர் கலைஞர் அவர்களின் இதயங்கவர்ந்த இருபதாம் நூற்றாண்டு தலைவர்களில் காஸ்ட்ரோவுக்கு முக்கிய இடம் உண்டு. தான் சந்திக்க விரும்பும் தலைவர் என்று ஃபிடல் காஸ்ட்ரோ பெயரைக் குறிப்பிட்டு தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை பேட்டி அளித்து இருப்பதுடன், காஸ்ட்ரோ பற்றிய அவரது கவிதையும் உணர்ச்சிப்பூர்வமானதாகும்.

உலகில் அதிக முறை கொலை முயற்சிகளுக்கு ஆளாகியும், தன்னைத் தற்காத்துக் கொண்டு, தாய்நாட்டை மீட்ட மாபெரும் தலைவரான மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.