ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கியூபா நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் பணியாற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

புரட்சித் தலைவர், மார்க்சீய, லெனினியவாதி என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ. கியூபா நாட்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், அவர் ஒருபோதும் பணக்காரராக வாழவில்லை; பணக்காரர்களுக்காகவும் வாழவில்லை. மாறாக பாட்டாளி மக்களுக்காக பாட்டாளியாகவே வாழ்ந்தவர். கியூபாவில் கொடுங்கோலர் பாடிஸ்டாவுக்கு எதிராக 8 ஆண்டுகளாக உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் போராடிய காஸ்ட்ரோ, அம்முயற்சியில் சில தோல்விகளை சந்தித்தபோதும் பின்வாங்கவில்லை. தமது சகோதரர் ரால் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோருடன் இணைந்து 1959 ஆம் ஆண்டில் பாடிஸ்டா சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி தமது ஆட்சியை அமைத்தார்.

கியூபாவின் பிரதமராகவும், அதிபராகவும் 1959 முதல் 50 ஆண்டுகளுக்கும், 1961 முதல் 50 ஆண்டுகளுக்கு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் ஃபிடல் காஸ்ட்ரோ பணியாற்றிய காலத்தில் தான் கியூபா அதிவேக வளர்ச்சியை அடைந்தது. மருத்துவம், கல்வி மற்றும் விவசாயத்தில் கியூபா அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. காஸ்ட்ரோவின் முயற்சியால் கியூபா அதிவேக வளர்ச்சி அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, அவருக்கு எதிராக கொலை முயற்சி, பொருளாதாரத் தடை, போலிப்புரட்சிகள், கூலி ராணுவப்படைகளை ஏவுதல் என ஏற்றுக் கொள்ள முடியாத அனைத்து முயற்சிகளையும் செய்தது. ஆனால், அனைத்தையும் முறியடித்தவர் காஸ்ட்ரோ.

கியூபாவில் ஒற்றை ஆட்சி முறையை அறிமுகம் செய்ததற்காக காஸ்ட்ரோவை சர்வாதிகாரி என்று சிலர் விமர்சித்தாலும் அவர் எப்போதுமே மக்களின் குரல்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்தவர். இல்லாவிட்டால் இறப்புக்கு பிறகும் மக்களால் போற்றப்படும் தலைவராக திகழ்ந்திருக்க முடியாது.

பொதுவுடமைவாதத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த காஸ்ட்ரோவின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பல்வேறு வழிகளிலும் முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த காஸ்ட்ரோவுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் கியூப மக்களுக்கும் பொதுவுடைமைவாதிகளுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.