யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்
யமுனா ராஜேந்திரன்

என் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை நான் படிக்கிறேன். படிப்பதற்கு இன்னும் அதிக நேரம் கிடைக்கவில்லையே என்றுதான் எனக்கு மனசு வலிக்கிறது. எல்லா வகையான இலக்கியங்களையும் நான் படிக்கிறேன். எனது காப்பியங்களில் பைபிளும் அடங்கும். எனது வார்த்தைப் பிரயோகங்களை அலசுகிற எவரும் பல பைபிள் வார்த்தைகளைக் கண்டு பிடிக்க முடியும்.

நான் 12 வருடங்கள் மத பாடசாலைகளில் பயின்றேன். அதிகமாக ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகளுடன் பயின்றேன். எனக்குப் படிக்க அதிகநேரம் கிடைத்தது நான் சிறையில் கழித்த 1953 மற்றும் 1955 ஆகிய இரண்டுவருடங்களில்தான். நான் எப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன். உதாரணமாக பொலிவர் சம்பந்தமாக மிகப்பெரிய புத்தகத்தொகுதிகளைச் சேர்த்திருக்கிறேன். நான் பொலிவர் மீது எல்லையற்ற ஈர்ப்பு கொண்டிருக்கிறேன். மார்ட்சையை அந்த அளவு நான் சொல்லமாட்டேன். என்னை குறுங்குழுவாதி என்னும் பிறர் சொல்லக் கூடும்.

நேற்றிரவு பாட்ரிக் சுஸ்கிந் எழுதிய பர்ப்யூம் நாவல் படித்துக் கொண்டிருந்தேன். தனிநபர் நட்பு அல்லாது கேபிரியல் கார்ஸியா மார்க்யூஸேயின் அனைத்துப் புத்தகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. அதன் கருத்துக்காக அதன் உள்ளடக்க அழகுக்காக செர்வான்டிசின் டான் குவிக்ஸாட்டை குறைந்த பட்சம் ஐந்து ஆறுமுறை படித்திருக்கிறேன். நெருதாவை நான் மிக விரும்புகிறேன் என்று சொல்ல வேண்டும். அவர் கவிதைகள்தான் நான் அதிகம் படித்த கவிதைகள். ஆயினும் நான் நிக்கலஸ் கில்லனுக்கு முன்னுரிமை தருவேன்.

– ஃபிடல் காஸ்ட்ரோ

வரலாறு முழுதும் கியூப அரசை அழிக்க முயன்ற அமெரிக்க அரசு ஆதரிக்கும் எதனையும் கியூபா ஆதரிக்க முடியாது. அமெரிக்க அரசு உலக அரசியலில் மனித உரிமை என்பதைத் தனது அதிகாரத்தை நிலைநாட்டும்-தலையிடும் தந்திரமாகவே பாவிக்கிறது. அமெரிக்கா மகிந்த அரசு இருந்த போது கொண்டிருந்த நிலைபாட்டையும் இன்றைய நிலைபாட்டையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

கியூபா பாரம்பர்யமாகவே இந்திய அரசின் நண்பன். இந்தியப் பிரதமர் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பை அதனது நட்பு நாடு ஆதரிக்க முடியாது. ஃபிடல் தனிமனிதன் அல்ல, ஒரு நாட்டின் தலைவன். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பு உலகின் இடதுசாரி விடுதலை அமைப்புக்களுடனோ அல்லது கலைஞர்கள்-சிந்தனையாளர்களுடனோ ஒரு போதும் தோழமையைப் பேணியிருக்கவில்லை.

கியூபா திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகவோ அல்லது இனக்கொலைக்கு ஆதரவாகவோ சுயாதீனமாக முடிவெடுக்கவில்லை. பாரம்பர்யமாக அமெரிக்க எதிர்ப்பைக் கொண்டிருந்த முழு இலத்தீனமெரிக்க நாடுகளும் அமெரிக்கக் கொள்கையை-அதனது மனித உரிமை மற்றும் தலையீட்டுக் கொள்கைகளை எதிர்த்தே வந்திருக்கின்றன.

நாடுகள் விடுதலை அமைப்புகளை ஆதரித்து வந்த காலம் சோவியத் யூனியனின் வீழ்ந்த நாளில் முடிவுக்கு வந்தது. முன்னாள் சோசலிச நாடுகள் கருத்தியல் ரீதியில் முடிவெடுப்பது என்பது முடிந்து தமது நாட்டைப் பாதுகாப்பது எனும் வெளிவிவகாரக் கொள்கையைத் தேர்ந்த காலமும் அதுதான். கியூபாவும் இந்த உலக நிலைமையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் முடிவுகளையே எடுக்க நேர்ந்தது.

ஈழவிடுதலைப் போராட்டத்தை உள்ளார்ந்து உணர்ந்த நண்பர்கள் கியூபத் தோழமை அமைப்புகள் மூலம் கியூப அரசைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ரான் ரைட்னர் சர்வதேச அளவில் பயணம் செய்து நூலையும் எழுதி வெளியிட்டார்.

பிரச்சினைகளை எப்போதுமே தனிநபர்களுக்கு இடையிலானதாகக் குறுக்கிக் காணும் எவரும் அரசியல் யதார்த்தங்களை பகுப்பாய்வு செய்வது கிடையாது. ஃபிடல் சொல்வது போல ‘கியூபா ஒரு நாளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு-புரட்சியைப் பாதுகாத்தல் என்பதில் மூலோபாயத் தவறுகள் செய்ததில்லை. ஒரு நாடு எனும் அளவில் தந்திரோபாயத் தவறுகளை அது செய்திருக்கிறது’. இந்தப் பரிதலுடன் வரலாற்றில் ஃபிடல் எனும் ஆளுமை வகித்த பாத்திரத்தை மறுப்பவர்களை, மிகுந்த அகவய உணர்வுடன் வசைபாடுபவர்களை வரலாறு கடந்து செல்லும்..

ஃபிடல் எதிர்கொண்ட இன்னொரு பிரச்சினை இது. ஃபிடலும் சேவும் முழு இலத்தீனமெரிக்க நாடுகளின் விடுதலையைக் கனவு கண்டவர்கள். கியூபப் புரட்சியின் பின் குவேரா அந்த லட்சியத்தின் பொருட்டு ஆப்ரிக்காவுக்கும் பொலிவியாவுக்கும் செல்கிறார். ஃபிடல் கியூபாவில் தங்கி ஆட்சியதிகாரம் ஏற்கிறார். சே குவேரா கொல்லப்பட்ட பின்னால் ஃபிடல் தனது நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கவிழ்க்கச் சதி செய்தார் என பொலிவிய அரசு குற்றம் சாட்டியது. சர்வதேசியச் சட்டங்களின் படி ஃபிடல் சதியாளர்தான். அதனை அவர் மீறினார். குவேராவுடன் ஒப்பிடுகிறபோது அவர் சர்வதேசியப் புரடசியாளனாக அல்ல, ஒரு நாட்டின் தலைவனாகத் தான் ஆனார்.

ஃபிடலை எவ்வாறு மதிப்பிடலாம்? *மாவோ ஃபிடலை விடவும் சர்வதேசியவாதி எனும் கருத்து பொருத்தமற்றது. ஃபிடல் போலவே மாவோவும் தேசியவாதிதான். அதிலும் பெருந்தேசியவாதி. தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரும் கூடக்குறைய தேசியவாதிகள்தான். இவர்கள் தமது தேசிய எல்லைகளை மீறிய தருணங்களும், தமது தேசிய நலன்களின் பொருட்டு சர்வதேசியக் கடமை என ஒருவர் கருதுவதை மீறிய சந்தர்ப்பங்களும் உண்டு. சோவியத் யூனியன் வீழ்ச்சி வரை கியூபா சர்வதேசியத்தைக் கடைப்பிடித்தது.

அங்கோலா-அல்ஜீரியா போன்ற நாடுகளுக்கு புரட்சிகர இயக்கங்களுக்கு அது நேரடியாக உதவி செய்தது. முழு இலத்தினமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்களை அது நேரடியாக ஆதரித்தது. கியூப எதிர்ப்பு இயக்கமான சைனிங் பாத்தை அது ஆதரிக்கவில்லை. பின் சோவியத்- பின் செப்டம்பர் நிலையில் அது உலகின் எந்த ஆயுத விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை. சே எல்லா தேசிய விடுதலை இயக்கச் சமூகங்களுக்கும் பயணம் செய்தார். முழு இலத்தீனமெரிக்காவிலும் அதனது எல்லாப் பொருளிலும் சே மட்டுமே முழுமையான சர்வதேசியவாதி.

வியட்நாம் விடுதலைப் போரை ஆதரித்த மாவோவின் சீனா, சிலி, அங்கோலா போன்ற நாடுகளில் தனது தேசிய நலன்களின் அல்லது வெளியுறவுக் கொள்கையின் பொருட்டு எதிர்ப்புரட்சியாளர்களை ஆதரித்தது. சீனா, வியட்நாம் மீது தாக்குதல் தொடுத்த செயலில் சர்வதேசியம் இல்லை. சீனா திபெத்தில் செய்திருப்பது ஆக்கிரமிப்பு. ஸ்டாலின்-இட்லர் ஒப்பந்தத்தில் சர்வதேசியம் இல்லை. பொலிவியப் புரட்சி விஷயத்தில் சோவியத் யூனியன் சர்வதேசியத்தைக் கடைப்பிடிக்கவில்லை.

ஃபிடலை இன்று எப்படி மதிப்பிடலாம்? 500 ஆண்டுககளிலான காலனியம், அதன் பின் சர்வாதிகாரிகள், நிலப்பிரபுத்துவம் கொண்ட ஒரு நாட்டில் கல்வி-மருத்துவம் இரண்டிலும் அவன் சாதித்தவை தன்னேரில்லாதவை. 60 ஆண்டுகள் புறக்கணிப்பின் பின்னும் அவன் கியூப தேசியப் பெருமிதத்தை உயர்த்திப் பிடித்தவன். இன-நிற உறவுகளில் சமத்துவத்தைப் பேணியவன். இலத்தீனமெரிக்கப் புரட்சிகளைக் காத்தவன். இத்தனைக்கும் மேலாக கெரில்லா யுத்த காலத்திலும் ஐக்கிய முன்னணி, புரட்சிகர இயக்கங்களினிடையில் ஒற்றுமை போன்றவற்றைச் சாதித்த அவன் புரட்சிகர ஒழுக்க-அறவியல் முன்னோடி. இவற்றையும் தாண்டி அவன் இசையின்-கலைகளின்-கலைஞர்களின் காதலன். யுகபுருஷன் எனும் சொல்லால் விளிக்கத்தகும் மனிதன். ரொபேஷ்பியர், லெனின், மாவோ போன்று ஃபிடல் உலகின் அரசியல் வரைபடத்தை மாற்றினான். உலகப் புரட்சிகளின் ஆதர்ஷமானவன். அவன் காலத்திலேயே வரலாறு அவனை விடுவித்து உலகின் உச்சிக்குக் கொண்டு சென்றது. விம்மி அழவில்லை தோழனே, நெஞ்சு நிமிர்த்திப் பெருமிதம் கொள்கிறோம். சந்திப்போம்..

யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர். இவருடைய எழுத்தில் வெளிவரவிருக்கும் நூல்கள் இடது பக்கம் திரும்புவோம்-உலக எதிர்ப்பு இலக்கியம், ஜோரிஸ் இவான்ஸ் தேடிய காற்று- உலகை மாற்றிய ஆவணப்படங்கள், புத்தனின் பெயரால்-திரைப்பட சாட்சியம்.

பதிவு 28-11-2016 அன்று மேம்படுத்தப்பட்டது.