இரா.முருகவேள்
இரா.முருகவேள்

புத்தகத் திருவிழா அறிவிக்கப்பட்டதும் பட்டியல்கள் வரும். எப்படியோ நண்பர்களின் அன்பால் ஏதாவது ஒரு பட்டியலில் எனது நூல்களுக்கு ஒரு மூலையில் சிறிய இடம் கிடைத்து விடுகிறது.

ஆனால் எந்தப் பட்டியலிலும் இடம் பெறாத எந்த விருதும் கிடைக்கப் பெறாத எனது நூல் ஒன்று இருக்கிறது.

எரியும் பனிக்காடுதான் அது. இதுவரை மூல ஆசிரியர் பி.எச். டேனியலுக்கோ மொழிபெயர்ப்பாளனான எனக்கோ அந்த நூலுக்காக எந்த விருதும் கிடைத்ததில்லை.

தொடக்கத்திலிருந்தே எரியும் பனிக்காடு விசித்திரமான பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. அதன் முதல் மூன்று பதிப்புகளை விடியல் பதிப்பகம் வெளியிட்டது.

விடியல் சிவாவுக்கு எரியும் பனிக்காட்டில் ஏதோ பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. எனது மொழிபெயர்ப்பு குறித்து விடியல் தோழர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தது. மொழிபெயர்ப்பாளனுக்கான எல்லைகளை நான் மீறுகிறேன் என்று ஒரு கருத்து. இன்னொன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தலித்துகளுக்கு கொஞ்சம் நன்மை செய்தது. ஒருவிதத்தில் விடுதலை கொடுத்தது என்று கருத்து தலித் இயக்கத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தது.

எனவே தீவிர தேசியவாதியும், காந்தியவாதியுமான டேனியல் ஏகாதிபத்தியம் சாதி ஒடுக்கு முறையில் ஏற்படுத்திய மாறுதல்களை புறக்கணிக்கிறார் என்று ஒரு கருத்து இருந்தது. தோழர். எஸ்.வி.ராஜதுரை நூலுக்கு ஒரு நல்ல மதிப்புரை உயிரெழுத்து இதழில் எழுதியபோது இந்த அம்சத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார்.

என்னைப் பொறுத்தவரை டேனியலோடு முழு உடன்பாடு உண்டு. தலித் மக்களை மலைகளுக்கும் இலங்கை, மலேசியா, தென்னாப்பரிக்காவுக்கு கொண்டு சென்று கொடுமைப் படுத்திய, அணைகளிலும் சுரங்கங்களிலும் வாட்டி வதைத்த ஏகாதிபத்தியம், இந்திய நிலப்பிரபுக்களின் நண்பனான ஏகாதிபத்தியம் ஒரு போதும் தலித்துகளின் நண்பனாக முடியாது என்று நினைக்கிறேன்.

இந்தப் பிரச்சினையால் விடியல் சிவா எரியும் பனிக்காட்டை வெளியிடுவதற்குத் தயக்கம் காட்டினார். வெளியிட்ட பின்பு வெளியீட்டு விழா நடத்த மறுத்துவிட்டார்.

நண்பரும் தோழரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன் ஈரோட்டில் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்தார். த.மு.எ.க.ச தோழர்கள் ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, டாக்டர் ஜீவா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் உதய சந்திரன் போன்றவர்கள் முன்னிலையில் எரியும் பனிக்காடு வெளியானது.

ஆதவன் தீட்சண்யா எரியும் பனிக்காட்டின் இரு அத்தியாயங்களை புது விசையில் வெளியிட்டார். அவர் ஆசிரியாராக இருந்து தயாரித்த புத்தகம் பேசுது இதழில் எரியும் பனிக்காடு குறித்த எனது கட்டுரை வெளியானது.

பின்பு கீழ வெண்மணீ தினத்தில் எரியும் பனிக்காட்டின் ஆக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவரான தோழர் திருப்பூர் குணா திருப்பூரில் ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தினார். தோழர் பின்பு பொன்னுலகம் பதிப்பகம் தொடங்கிய போது முதல் நூலாக எரியும் பனிக்காட்டை வெளியிட்டார்.

அதன் பின்பு நூலுக்கு ஏராளமான விமர்சனங்கள், மதிப்புரைகள் வெளிவந்தன. விமர்சனக் கூட்டங்கள் நடந்தன. இந்தத் தோழர்கள் இல்லாமல் போயிருந்தால் எரியும் பனிக்காடு ஒருவேளை மறைந்து போயிருக்கலாம்.

எரியும் பனிக்காட்டுக்கு பின்பு நேரிட்ட விபத்துகளிலும் இந்தத் தோழர்கள் உற்ற துணைவர்களாக இருந்தனர்.

இன்று எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து. அதே போல ஒரு பதிப்புக்கு ஆயிரம் பிரதிகளாக பத்தாவது பதிப்பு வெளிவந்து தற்போது விற்பனையில் இருக்கிறது.

தோழர்கள் அனைவரையும் அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன்.

இரா. முருகவேள், மொழிபெயர்ப்பாளர்; நாவலாசிரியர். எரியும் பனிகாடு(மொழிபெயர்ப்பாளர்), மிளிர்கல், முகிலினி ஆகிய நாவல்களை பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுருக்கிறது. 

panikaadu

எரியும் பனிகாடு குறிப்பு  : 1920 முதல் 1930 வரை தேயிலைத் தோட்டங்களில் காணப்பட்ட சூழ்நிலையை வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். பெயர் Red Tea. ஆசிரியர் பி.ஹெச். டேனியல். தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் வேலை செய்தவர் டேனியல். தேயிலைத் தோட்டத்தின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இதில் வரும் கதாபாத்திரங்கள் மட்டுமே கற்பனையானவை. சம்பவங்கள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத நிஜம்.

1925-ம் ஆண்டில் திருநெல்வேலி, மயிலோடை கிராமத்தில் வசிக்கும் கருப்பன் – வள்ளி தம்பதியிடமிருந்து இருந்து தொடங்குகிறது கதை. விவசாயமும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கஷ்டப்படும் கருப்பன், மேஸ்திரி சங்கரபாண்டியனைச் சந்திக்க நேர்கிறது. அவர், ’எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுகிறது, நீங்கள் இருவரும் சந்தோஷமாக ஒருவருடம் சம்பாதித்துவிட்டு, கை நிறைய பணத்துடன் ஊர் திரும்பி, பணக்காரனாக வாழலாம்’ என்று சொல்லி, நாற்பது ரூபாயும் கொடுக்கிறார். கருப்பன் – வள்ளியைப் போல பல குடும்பங்கள் வால்பாறைக்கு வந்து சேர்கின்றன. மேஸ்திரி சொன்னபடி இல்லாமல் அங்கிருந்த சூழ்நிலை முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.