கேரளாவின் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் மோதல் சாவு என பெயரிடப்பட்டு அரச படைகளால் கொல்லப்பட்ட குப்புராஜ் மற்றும் அஜிதா, மற்றொருவர் சாவுகளுக்கு உரிய நீதி விசாரணை தேவை. கண்டிக்கத்தக்கது என பியூசிஎல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“ஒவ்வொரு முறை போலி மோதல் சாவுகள் நிகழும் போதெல்லாம் நீதிமன்றத்தின் நீதி வழங்கும் முறையை பலகீனப்படுத்தும் செயலாகவே உள்ளது.

நக்சல்பாரி இயக்கத்தவர் எழுப்பும் சமூக பொருளாதார, மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை சனநாயகப்பூர்வமாக தீர்த்து, அரசியல்ரீதியில் அந்த இயக்கத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக காட்டி அந்த இயக்க தலைவர்களை, உறுப்பினர்களை கொன்றொழிப்பது சட்டவிரோதமானது, அரச பயங்கரவாதம்.

இந்த அரச பயங்கரவாத கலாச்சாரம் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை சாகடிப்பதேயாகும்.

அதிரடிப்படை என்ற பெயரில் சிறப்பு ஆயுதப்படைகளால் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிறப்பு அதிரடிப்படைகள் தங்களுக்கு எவரையும் கொலை செய்யும் அதிகாரமுள்ளதாக கருதுகின்றது.

கொலை, சித்தரவதை, பாலியல் வன்முறை என நீளும் அதன் பட்டியல்கள் பொது சமூகத்தின் முன் வெளிப்படுவதில்லை. வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்த அதிரடிப்படை எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ? என நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு கேள்வி எழுப்பியது.

இந்த அதிரடிப்படைகள் உள்ளூர் காவல்நிலையத்தின் தொடர்பின்றி செயல்படுகின்றன.இது போன்ற சிறப்புப்படைகள் செய்யும் செலவுகள் அரசு தனிக்கைக்கு அப்பால்பட்டது. இந்த அரச வன்முறையை பாதுகாக்கவே ஆயுதப்படை சிறப்பு பிரிவு சட்டம் போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் நிகழ்ந்த இந்த படுகொலையை ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தோழர் கானம் ராஜேந்திரன் கண்டித்துள்ளார். “இந்த மோடியின் செயல்களுக்காக கேரள மக்கள் நமக்கு வாக்களிக்கவில்லை” என எச்சரித்துள்ளார்.

சிறப்பு ஆயுத படைகள் சட்டத்தின் நிறுத்த வேண்டியவர்களை தண்டிக்க நீதிபதியாக அவதாரமும் எடுக்கின்றன. மொத்தத்தில் சட்டமில்லாத நிலையை உருவாக்குகின்றது. சொந்த குடி மக்கள் மீது போரை நடத்தும் வன்முறை நிகழும் போதெல்லாம் மனித உரிமைக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது”.