மாதவராஜ்

நேற்று விருதுநகரில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த , ‘கறுப்புப்பண மீட்பு – மக்களோடு கலந்துரையாடல் நிகழ்வு, மிகச் சிறு அசைவே என்றாலும், முக்கியமான நிகழ்வு என்றே கருதுகிறேன்.

முத்துகிருஷ்ணன் முயற்சியால் உருவாக்கப்பட்ட, கறுப்புப்பணம் குறித்த படங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

புதுகை பூபாளம் கலைக்குழு- பிரகதீஸ்வரன் மோடியின் செல்லாத அறிவிப்பையும், கள்ளப்பணத்தையும், மக்களின் மொழியில் கதாகாலேட்சேபம் பாணியில், நையாண்டியாக சொன்னது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு நின்று, நாட்டின் முக்கியப் பிரச்சினை குறித்து கேட்க ஆரம்பித்தனர்.

தொடர்ந்து நடந்த மக்களோடு நடந்த கலந்துரையாடலில், கறுப்புப்பணம் என்றால் என்ன, மோடியின் அறிவிப்பின் நோக்கம் என்ன, விளைவுகள் என்ன, மக்கள் ஆதரிக்கிறார்கள் என மோடி எப்படி சொல்கிறார், திட்டமிடப்பட்ட அறிவிப்பு ஏன் இவ்வளவு குளறுபடிகள், ஊடகங்கள் பங்களிப்பு, சிறு தொழில்களின் எதிர்காலம், cash less countryயின் சாத்தியங்கள், இந்த அறிவிப்பில் சட்டரீதியான பிரச்சினைகள் பற்றிய பல்வேறு கேள்விகளை பார்வையாளர்கள் எழுப்ப முத்துக்கிருஷ்ணன், நரேன் ராஜகோபால் விரிவாகவும் , எளிமையாகவும் விளக்கினர்.

பேராசிரியர் பொன்ராஜ், மோடியின் அறிவிப்பினால் எந்த பலன்களும் இல்லையென்பதையும், பெரும் பாதங்கள்தான் நேர இருக்கிறது என்பதையும் புள்ளி விபரங்களோடு எடுத்துரைத்தார். மோடி இதுவரை அறிவித்த கிளின் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா போன்ற அறிவிப்புகள் பெரும் விளம்பரங்கள் செய்யப்பட்டும், ஒரு பிரயோஜனமும் இல்லாமல் வந்த வழி தெரியாமல் போய்விட்டன, அதற்குப் பிறகும் அவரை எப்படி நம்ப முடியும், ஆதரிக்க முடியும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மதுரை பாலன் குழுவினரின் . 50 நாட்கள்’ நிஜ நாடகம், மோடியின் தேர்தல் வாக்குறுதியான ‘கறுப்புப்பணத்தை கைப்பற்றி அனைவருக்கும் 15 லட்சம்’ என்பதை கிண்டல் செய்ததோடு கோபத்தையும் ஊட்டியது.

பார்வையாளர்கள் பலரும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும், கலையாமல் நின்று பேசி, இந்த அறிவிப்புக்க்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டோம் என்றனர். இயக்கத் தோழர்கள் இதுபோன்ற நிகழ்வை பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் என ஆர்வமும், அக்கறையும் கொண்டனர்.

இவ்விஷயத்தை மக்களோடு தைரியமாக பேச முடியும் என்பதையும், மவுனத்தை கலைத்து சாதாரண மக்களை பேச வைக்கும்போது அவர்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

கேள்விகள் கேட்கப்படும் பாராளுமன்றத்தில் பேச வேண்டாம், யாரும் கேள்வியே கேட்க முடியாத மாபெரும் கூட்டத்தின் முன்பு கைகால்களை விரித்து அளக்க வேண்டாம், விருதுநகரில் இதுபோன்ற ஒரு சிறு கூட்டத்தில் எளிய மனிதர்களின் மிக எளிய கேள்விகளுக்குக் கூட பதிலளிக்கும் திராணியும், நேர்மையும் மோடிக்கு இருக்கப் போவதில்லை.

நன்றி: முத்துகிருஷ்ணன், நரேன் ராஜகோபாலன், மதுரை பாலன், பிரகதீஸ்வரன், சுரேஷ் பாபு.

மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.