விநாயக முருகன்

விநாயக முருகன்
விநாயக முருகன்

ஒருகாலத்தில் சென்னையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. செங்கல்பட்டை (அப்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஒன்றாக இருந்தன) லேக் மாவட்டம் என்றே சொல்வார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் வீராணம் ஏரியை சுற்றி அறுபத்துநான்கு மதகுகள் இருந்தன என்ற தகவல் வரும். மாம்பலத்தில் மாம்பலம் கால்வாய் இருந்தது. கொளத்தூர், பெரியார் நகர் எல்லாம் ஒரு காலத்தில் குளம், குட்டை நிறைந்த கிராமங்கள். நிலத்தடி நீர் சுவையாக இருந்தது. இப்போது சென்னையில் எங்கு எங்கு ‘போர்’ போட்டாலும் உப்பு நீரும்தான், இரும்புகலந்த பழுப்பு நிற நீரும்தான் வருகிறது. சில பகுதிகளில் குடிநீருடன், சாக்கடை நீர் கலந்துவிடுகிறது. சென்னையின் நான்கு நதிகள் அடையாறு, கூவம், கொசஸ்தலை மற்றும் பாலாறு. முக்கிய கால்வாய் பக்கிங்காம் கால்வாய். இன்று இவை எல்லாம் நகரின் பிரதான சாக்கடைகள்.

தற்போது சென்னையில் 419 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 1261, திருவள்ளூரில் 920, என மொத்தம் 2,600 ஏரிகள் மட்டும் இருப்பதாக பொதுப்பணித்துறை ஆவணப்பதிவேடு தெரிவிக்கிறது. மீதமுள்ள 2400 ஏரிகள் மறைந்துவிட்டன. நகரம் விரிவடையும்போது ஏரிகள் காணாமல்போகின்றன. காலம் மாறும்போது ஒரு பிரதேசத்தின் நிலவமைப்பு மாறுவது இயல்புதான். என்னதான் காலம் மாறினாலும் சில அடிப்படை விதிகளை மட்டும் மாற்றக்கூடாது என்பதில் சமூகம் எப்போதும் தெளிவாகவே வந்துள்ளது.

எல்லா காலங்களிலும் உழைக்கும் மக்கள், விளிம்புநிலை மக்கள், வறியவர்கள் பள்ளத்திலும், உயர்வர்க்கம் மேடுகளிலுமே வசித்துவந்துள்ளார்கள். பள்ளர்கள், மேட்டுக்குடிசமூகம் போன்ற வார்த்தைகளின் பின்னால் உள்ள அரசியலை நாம் கவனிக்க வேண்டும். பிரிட்டிஷ் காலத்திலும் அதேதான் நடந்தது. சென்னையின் பூர்வகுடிகள் மீனவர்களும், தலித்களுமே. பிரிட்டிஷ் ஆட்சியின்போது சென்னையின் முதல் மாபெரும்குடியேற்றம் நடந்தது. நரிமேட்டை ஒட்டியிருந்த மேட்டை அழித்து பிரிட்டிஷார் வெள்ளையர் நகரத்தை உருவாக்கியதும் கூவம், அடையாறு ஆற்றின் கரையோரங்களை கறுப்பர் நகரங்களாக, சேரிகளாக உருவாக்கினார்கள்.

சுதந்திர இந்தியாவுக்கு பிறகும் சேரிகளின் நிலைமை மாறவில்லை. உலகமயமாக்கலுக்கு பிறகு சென்னையின் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. பன்னாட்டு நிறுவனங்கள் வந்தபிறகு சென்னையை நோக்கி படையெடுத்து வந்த மக்கள் தொகை அதிகரித்தது. சென்னையின் இரண்டாம் குடியேற்றம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மீண்டும் நடந்தது. பெருகும் மக்கள் தொகையை சமாளிக்க வேண்டுமே. ரியல் எஸ்டேட் வணிகர்கள் சென்னையை சுற்றியிருந்த விவசாய நிலங்களை, ஏரிகளை அரசின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்தார்கள். நடுத்தர மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை கொட்டி தனக்கென ஓர் இடத்தை வாங்கிபோட்டார்கள். அதற்கு இணையாக அரசும் ஏரிகளை தனியார் மென்பொருள் நிறுவனங்களுக்கும். பன்னாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து கொடுத்தது. முறையான திட்டமிடல் இல்லாத இந்த மாநகரம் இப்போது சிறுமழைக்கே நரகமாகிவிடுகிறது. இருக்கும் சொற்ப ஏரிகளையும் சரியாக பரமாரிக்க முடியாததால் கோடைகாலத்தில் குடிநீர் பஞ்சம். சென்னையின் பிரதான பிரச்சினை நீர்தான்.

2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையின் சராசரி நிலத்தடி நீர் மட்டம் 4.94 மீட்டர் இருந்தது. 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 5.06 மீட்டர் ஆழத்திற்கு சென்றது. 2015ம் ஆண்டு 7.34 மீட்டர் ஆழத்துக்கு சென்றுள்ளது. ஒரே ஆண்டில் 1.65 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் சென்னையில் 400 அடிக்கு கீழ் தான் போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. நிலத்தடிநீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரில் கலக்கிறது. புதுவண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், இந்திரா நகர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புநீர் கலப்பது அதிகரிகிறது. அது மட்டுமல்லாமல் கடற்கரை ஓரம் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளிலும் நீர்வளம் வெகுவாக குறைந்து விட்டது. அதாவது கடல் மெல்ல மெல்ல நமது கால்களுக்கு கீழே பரவுகிறது. சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இந்த குறுநாவலின் மையபுள்ளி வேறு என்றாலும் இந்த பிரச்சினைகளை புரிந்துக்கொள்வதன் மூலம் வரபோகும் ஆபத்தை உணர்ந்து நம்மை திருத்திக்கொள்ளவோ, தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கவோ உதவும்.

விநாயக முருகன், எழுத்தாளர். சென்னைக்கு மிக அருகில்ராஜீவ்காந்தி சாலைவலம் ஆகிய நாவல்களின் ஆசிரியர்.  விரைவில் வரவிருக்கும் ‘நீர்’ நாவலின் முன்னுரையின் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.

நீர் நாவலில் அட்டை வடிவமைப்பு சந்தோஷ் நாராயணன்.