அறிவியல்

நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் குறித்த தனது காத்திரமான அறிவியல் பூர்வ விமர்சனத்தால், அத்திட்டம் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தவர் மக்கள் அறிவியலாளர் விடி பத்மபநாபன். அடிப்படையில் அவர் ஓர் ஜனநாயகவாதி, நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்கள் அனைத்தும் அறிவியலை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானவை. நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்களின் மொழியாக்க தொகுப்பு ‘நியூட்ரினோ அறிவிப்புகளும் உண்மைகளும்’. இந்நூலை நாணல் நண்பர்களும் பூவுலகின் நண்பர்களும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

நூல் வெளியீட்டில் விடி பத்மநாபன், மருத்துவர் புகழேந்தி, அருண் நெடுஞ்செழியன், பிரபலன் மற்றும் சீனு தமிழ்மணி..

நூல் வெளியீட்டில் விடி பத்மநாபன், மருத்துவர் புகழேந்தி, அருண் நெடுஞ்செழியன், பிரபலன் மற்றும் சீனு தமிழ்மணி..

விடி பத்மநாபன் கட்டுரைகளை தமிழில் தந்திருக்கிறார் அருண் நெடுஞ்செழியன். நூலிலிருந்து ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: நிலவியல், கதிரியக்க மற்றும் சூழல் விளைவுகள்’ என்ற கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது.

தமிழகக் கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி, தேனி மாவட்டங்களில், நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மலைக்கடியில் அறிவியல் ஆய்வு மையத்தை அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. புவியின் அடி ஆழத்தில் அமையவுள்ள இவ்வாய்வு மையத்தின் மேல் உத்திரங்கள் மற்றும் சுவர்கள் அனைத்தும் காஸ்மிக் கதிர்களின் ஊடுருவலைத் தடுப்பதற்கு ஏற்ப குறைந்தபட்சம் ஆயிரம் மீட்டர் அகலத்தில் கட்டப்படவிருக்கிறது. 32.5 மீட்டர் உயரத்தில் 3432 சதுர மீட்டர் பரப்பளவில் ஓர் பெரிய ஆய்வக அறையும் ,10 மீட்டர் உயரத்தில் 1600 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று சிறிய ஆய்வக அறைகளும் கட்டப்படவிருக்கிறது.புவியின் ஆழத்தில் அமையவுள்ள இவ்வாய்வகத்தை அடைய 2491 மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை தோண்டப்படவிருக்கிறது. இச்சுரங்கத்தின் நுழைவு வாயில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமையப்பெறும். இவ்வாய்வுத்திட்டத்தின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்பெரும் அறிவியல் ஆய்வுத்திட்டத்தின் மொத்த செலவு 1,300 கோடி ருபாய் ஆகும். இத்திட்டத்திற்கு தனது பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய அரசு அனுமதியளித்தது. சுரங்கபாதைத் தோண்டும் பணி விரைவில் தொடங்குவதாகத் தெரிகிறது. அதிக சக்தியுள்ள நியூட்ரினோவை, அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் உள்ள நியூட்ரினோ தொழிற்சாலையில் உற்பத்தி செய்து தேனிக்கு அனுப்ப உள்ளார்கள். அமெரிக்காவிலிருந்து தேனியில் உள்ள ஆய்வகத்திற்குப் பயணப்படுகிற நியூட்ரினோ கதிர்களில் ஏற்படுகிற மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

இயற்கை நியூட்ரினோக்கள்:

அடிப்படைத் துகள்கள் தொகுதியைச் சேர்ந்த நியூட்ரினோக்கள், லெப்டான் என்று அழைக்கப்படுகின்றன. அடிப்படைத் துகள்கள் மொத்தம் 12 ஆகும். இதில் 6 லெப்டான்கள், 6 குவார்க்ஸ் அடங்கும். நமது அண்டத்திலிலுள்ள பொருட்கள் யாவும் இவ்வடிப்படைத் துகள்களால் உருவாக்கப்பட்டதென நம்பப்படுகின்றன*. நியூட்ரினோக்களை உற்பத்தி செய்வதில் சூரியனே முக்கியப் பங்கு வகிக்கிறது. அண்டங்களில் உள்ள பிற நட்சத்திரங்களும் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்கின்றன. ஒளியின் வேகத்தை ஒத்து, நேர்க்கோட்டில் பயணம் செய்து நமது புவிக்குள் நுழைகிற இந்நியூட்ரினோக்கள் நமது உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஊடுருவுகின்றன. நட்சத்திரங்களிலிருந்து வெளிவருகிற இந்நியூட்ரினோக்கள் ஒரே அளவுடைய ஆற்றல்களைக் கொண்டிருப்பதில்லை. சில எலக்ட்ரான் வோல்ட்டில் தொடங்கி ட்ரில்லியன் வோல்ட்டுக்கும் அதிகமான ஆற்றல் கொண்டதாக வெவ்வேறு அளவுகளில் நியூட்ரினோக்களின் ஆற்றல் வேறுபடுகின்றன. நமது உடலினுள் ஊடுருவுகின்ற ஆறு மில்லியனுக்கும் அதிகமான நியூட்ரினோக்கள் மிக மிகக் குறைவான ஆற்றல் கொண்டதாக உள்ளன. அதாவது மில்லி வோல்ட் என்ற அளவில் மட்டுமே நமது உடலில் நியூட்ரினோக்கள் ஊடுருவுகின்றன. சூரியனிலிருந்து வெளிவருகின்ற நியூட்ரினோக்களால் நமக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. விதிவிலக்காக,சில நேரத்தில், அதிக ஆற்றலுடைய பிற துகள்களுடன் வினைபுரிந்து கதிரியக்கத்தன்மைகொண்ட துகள்களாக மாற்றமடைகின்றன.ஆனால் இது அரிதினும் அரிதாவே நிகழ்கின்றன.

செயற்கை(அ)தொழிற்சாலை நியூட்ரினோக்கள்:

இங்கு நான் விவாதிக்க இருக்கிற நியூட்ரினோக்கள், மனிதனால் செயற்கையாகத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிற நியூட்ரினோக்கள் குறித்ததாகும்.செயற்கையாக நியூட்ரினோக்களை உற்பத்தி செய்வதற்கு, மோதல் முறைகளிலும் ஆலையில் உற்பத்தி செய்யும் வகையிலான பிற ஆய்வுகளும் தற்போது வடிவமைப்பு நிலையில் மட்டுமே உள்ளன. 2020 அல்லது 2022ஆம் ஆண்டில் இந்த ஆய்வுகள் செயல்பாட்டிற்கு வருமெனத் தெரிகிறது.

  1. ஆற்றல் அளவு: CERN ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிற மியோன் நியூட்ரினோக்கள் அதிகபட்சமாக ஐந்து பில்லியன் எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் கொண்டதாக உள்ளன. NFநியூட்ரினோக்கள் 500ஜிகா வோல்ட் ஆற்றல் கொண்டதாகவும்,MCமியோன் நியூட்ரினோக்கள் கிட்டத்தட்ட 1500ஜிகா வோல்ட் ஆற்றல் கொண்டதாக இருக்குமெனவும் அனுமானிக்கப்படுகிறது.

  2. பருமன் அளவு: அனைத்து இயற்கை நியூட்ரினோக்களும் உதிரிக்களாக தனித்தனி துகள்களாக பயணிக்கின்றன. ஆனால் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிற நியூட்ரினோக்கள் நேர்வதிசையாக்கலின் மூலமாக (collimated)அதிக ஆற்றலுடையதாக மாற்றப்படுகிறது.

  3. நியூட்ரினோக்களை அதன் ஆற்றல் அளவைப் பொருத்து பலவகைகளாகப் பிரிப்பது.

அதிக ஆற்றலும் அதிக பருமனுடைய நியூட்ரினோக்களை அமெரிக்காவின் பெர்மிலாப் ஆய்வகத்திலிருந்து தேனியை நோக்கி அனுப்புவதற்கும் இயற்கையாக வானிலிருந்து பொழிகிற நியூட்ரினோவிற்கும் பல வேறுபாடுகள் உள்ளது.

ஆய்வகம் அமையவுள்ள இடம்:

“இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கான புதிய இடமானது புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள பொட்டிபுரம் கிராமப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்ட இடத்தின் மேற்குப்பகுதியானது உயரமான மேற்குத்தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து 18 கி.மீ வடக்கில் போடியும் 35கி.மீ வடமேற்கில் சின்னமன்னூரும் 21 கி.மீ தெற்கில் கம்பமும் அமைந்துள்ளது. இந்நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக பொட்டிபுரம் கிராமத்தை அடையலாம்..

பொட்டிபுரம் வீராசாமி கோவிலுக்கு அருகில் தொடங்குகிற சுரங்கப்பாதையின் நுழைவுவாயிலானது ஒரு கி.மீ வரை மலையின் அடி ஆழத்தில் நீளவாக்கில் நீண்டு அம்பரசக்கரடுவில் முடிகிறது. ஆய்வகத்தின் சுரங்க அறைகளும் சுரங்கப்பாதைகளும் மேற்கு போடியின் பாதுகாக்கப்பட்ட வனச்சரகத்தில் அமையவுள்ளது.கிட்டத்தட்ட 1.75 கி.மீ நீளத்திற்கான சுரங்கப்பாதையானது, சார்னோக்கைட்டு பாறையைக் குடைந்து நீளவாக்கில் சென்று பின்பு சிறிது பக்கவாட்டில் 1:13.5 சாய்ந்து கேரள எல்லையிலுள்ள ஆய்வகத்தை சென்றடைகிறது. சுரங்க அறைகள் தமிழக எல்லையில் வருகின்றன.

வரைபடத்தின்படி மொத்தம் 2,491 மீட்டர் நீளத்திற்கான ஐந்து சுரங்கப்பாதைகளும் நான்கு சுரங்க அறைகளும் வருவதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூழல் தாக்க மதீப்பீட்டு அறிக்கையில் மூன்று சுரங்க அறைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மைய சுரங்கப்பாதையிலிருந்து ஆயிரம் மீட்டர் ஆழத்தில் சுரங்க அறை நான்கு அமையவுள்ளது.இச்சுரங்கமானது முதல் 1960 மீட்டர் தூரம் தென்கிழக்கிலிருந்து வடமேற்கு திசையில் சென்று பின்பு வலதுபக்கமாக வடக்கு நோக்கித் திரும்பிச்செல்லுகிறது. 1960 ஆவது மீட்டரில் மீண்டும் வலதுபக்கமாகத் திரும்பி தென் மேற்கிலிருந்து வடகிழக்காகச் செல்கிறது. சுரங்கப்பாதையின் இறுதி 224 மீட்டர்தொலைவிலான பாதை இணை சுரங்கப்பாதை என அழைக்கப்படுகிறது.

சுரங்கப்பாதையின் நுழைவாயிலிலிருந்து 1750 மீட்டர் தொலைவில் கேரள எல்லை வருமானால்,சுரங்க அறைகள் முறையே ஒன்று, இரண்டு, மூன்றும்,740மீட்டர் தொலைவிலான சுரங்கப்பாதையும்(260 மீட்டர் நீள, மைய சுரங்கபாதையும் உள்ளடக்கிய) கேரளப்பகுதியில் அமையும். அதாவது இ.ஆ.திட்டத்திற்காக அகழ்ந்தெடுக்கப்படவுள்ள 236,000 கன மீட்டர் பரப்பளவில் 159007 கன மீட்டர் அளவிலான இடம் கேரளப் பகுதியில் வருகிறது. மீதமுள்ள 77,310 கன மீட்டர் அளவிலான இடம் தமிழகப் பகுதியில் வருகிறது.வேறுவகையில் சொல்வதென்றால் இ.ஆ.திட்டத்திற்கான 67 விழுக்காட்டு நிலம் கேரள எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமையவுள்ளது.

நேர்வதிசையாக்கலுடன்(collimated) அதிக ஆற்றலுடைய நியூட்ரினோ கதிர்களைக்கொண்டு, நீர்மூழ்கிக் கப்பலில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள அணுகுண்டைக்கூடத் தாக்கி அழிக்கலாம். அதிக ஆற்றலுடைய நியூட்ரினோ கதிர்களை செலுத்தி அரசியல் தலைவர்களையும் சிறு குழுக்களையும் கொல்லும் வகையிலான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும். அதிகார மாற்றத்திற்கோ தீவிரவாதிகளுக்கு எதிரான போரிலோ இவ்வாயுதம் உபயோகப்படலாம். நியூட்ரினோ கதிர்களை எந்தப் பொருளாலும் தடுக்கவியலாததால் இவ்வாயுதத்திலிருந்து யவரும் தற்காத்துக் கொள்ளமுடியாது.அதற்கான கால அவகாசத்தையும் அது வழங்காது.!

நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்திற்கான இடத்தைத் தேர்வு செய்ததில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை. திட்டம் வர இருக்கிற பகுதியில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு குறித்தும் அப்பகுதியின் சூழலியல் முக்கியத்துவம் குறித்தும் தீவிரமாக விவாதிக்க வேண்டியத் தேவை உள்ளது. அதில் முக்கியமானவை:

மீறல்கள்:
நியூட்ரினோ ஆய்வகமானது தமிழகப் பகுதியிலும், இவ்வாய்வுக்கூடத்தை அடைவதற்கான சுரங்கப்பாதையானது கேரள எல்லையோரத்திலும் அமையவிருப்பதாக அணுசக்தி ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், இத்திட்டம் தொடர்பான ஆவணங்களையும் திட்ட வரைபடங்களையும் பார்க்கும்போது, கிட்டத்தட்ட 700 மீட்டர் நீளத்திற்கான சுரங்கப்பாதையும் இரு சிறிய சுரங்க அறைகளும் கேரளப் பகுதிக்குள் வருகிறது. ஆனால், தமிழக அரசிடம் மட்டுமே இத்திட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. மாறாக கேரள அரசிடம் இதுதொடர்பான எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

ஆயிரம் மீட்டர் அகலமுடைய ஆய்வகச் சுவர்களில் மயிரளவிலான விரிசல் ஏற்பட்டாலோ, ஆய்வகக் கருவிகள் மீது மேல்சுவர் இடிந்து விழுந்தாலோ,ஆய்வகத்தை ஒட்டிய ஒரு கிலோமீட்டர் சுற்றுப்பரப்பளவில் எந்தவொரு சுரங்கத்திட்டங்களுக்கும் ஆழ் கிணறு தோண்டும் பணிகளுக்கும் தடை விதிக்கப்படும்.

கதிர்வீச்சுக் கழிவு:

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலுமுள்ள சுகாதார மருத்துவர்கள் பெர்மிலாப் மற்றும் நியூட்ரினோ ஆய்வகத்தின் கதிரியக்க விளைவுகள் குறித்தான ஆய்வுகளில் ஈடுபட்டு அம்முடிவுகளை வெளியிட்டனர். ஆய்வகத்திலிருந்து நூறு கிலோமீட்டர் வரை அதிக ஆற்றலுடைய கதிர் வீச்சை வெளியிடுகிற சாத்தியத்தை ஆய்வு முடிவுகளில் அறிவித்துள்ளனர்.இ.நி.ஆய்வகத்திற்காக நியூட்ரினோக்களை அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் தயாரிக்கப்படுகின்றன.இவை ஆய்வக அறையிலிருந்து வெளியேறி ஆய்வகத்தின் மண் தளத்தில் கலக்க வாய்ப்புள்ளது.மேலும் கார்பன் த்ரைடியும் போன்ற கதிரியக்கத் தன்மை கொண்டதாக உருவாகி அவை பல தூரம் பயணித்து நிலத்தடி நீரில் கலக்கும் வாய்ப்பும் உள்ளது.

நிலவியலின் அடிப்படையில் இடுக்கியானது நிலநடுக்கவாய்ப்புள்ள மாவட்டமாகும். ஒரு டசனுக்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களைக் கொண்டுள்ள இப்பகுதியானது நான்கு பில்லியன் கண மீட்டர் அளவிலான நீரைத் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மூன்று மாவட்ட மக்களுக்கும் வழங்குகிறது. திட்டத்தால் இரண்டு விதமான பாதிப்புகளை அணைகள் எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஒன்று,நிலநடுகக்தைத் தூண்டுகிற வெடிவைப்பு. திட்டத்திற்கான சுரங்கம் தோண்டும் பணிக்கு அதிகளவில் வெடி மருந்தைப் பயன்படுத்த நேரிடும். அதாவது நாளுக்கு மூன்று முறை வீதம் நான்காண்டுகளில், 8 லட்சம் டன் அளவிலான கடினப் பாறைகளை கிட்டத்தட்ட 5 முதல் 10 லட்சம் கிலோ வெடிமருந்துகளைப் பயன்படுத்தி அகற்றியாக வேண்டும். இது நிலநடுக்கத்திற்கான சாத்தியப்பாட்டை அதிகமாக்கும்.

இரண்டாவதாக, கதிர்வீச்சுக் கழிவால் பாதிப்பிற்குள்ளாகும் நீராதாரம்.ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால் அணையிலுள்ள நீரனைத்தையும் அகற்றியாக வேண்டும்!.வேளாண் பொருட்கள் கதிர்வீச்சுக்கழிவால் நாசமடைந்து வேளாண் பொருளாதாரமும் சுற்றுலாவும் பாதிப்பிற்குள்ளாகும்.

கதிர்க் கற்றை இடப்பெயர்வால் ஏற்படும் விபத்து:

திடீர் மின்சாரத் தடை போன்ற விபத்துக்காலத்தில், கதிர்க்கற்றையானது திட்டமிட்ட பாதையை விட்டு விலக வாய்ப்புள்ளது.ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அருகிலுள்ள பள்ளி மாணவர்களும்,வீடுகளில் வசிப்போரும் கடும் கதிர்வீச்சு விளைவுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டமானது அமெரிக்காவின் பெர்மிலாப் திட்டத்தின் ஓர் பகுதியாகும்.இ.நி.ஆய்வகத்தில் சோதிப்பதற்காக அமெரிக்க ஆய்வகம் வழங்குகிற நியூட்ரினோக்களின் பண்புகள் தொடர்பான விவரங்களை வழங்குவது கட்டாயமாகும்.அதாவது, ஓரு மருத்துவமனை, மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளும்போது செய்யவேண்டிய கட்டாய நடைமுறையை ஒத்தது. இத்திட்டத்தை அமெரிக்காவின் பெர்மிலாப் அறிவியலாளர்கள் இந்தியத் திட்டக்குழுவிடம் 2006 ஆம் ஆண்டில் பரிந்துரைத்தார்கள். ஆனால், ஆயுத உற்பத்தித் தொடர்பாக எந்தவொரு தகவல்களையும் இதுவரை இந்தியாவிடம் அமெரிக்கா பகிர்ந்து கொள்ளவில்லை.மேலும்,இத்திட்டமானது, அமெரிக்காவோடு இணைந்து மேற்கொள்ளுவது குறித்து எந்தவொரு குறிப்புகள்கூட இ.நி.ஆ திட்ட ஆவணங்களிலோ அதன் அலுவல் வலைத்தளத்திலோ தென்படவில்லை.!

2003 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டு அறிவியலாளர்கள்,முதன் முதலாக நியூட்ரினோவை ஆயுதமாக பயன்படுத்தும் கருத்தை முன்வைத்தார்கள். தற்போது உபயோகத்தில் உள்ள ஆய்வகங்களும் வரவிருக்கின்ற ஆராய்ச்சித் திட்டங்களும் ஆயுத உற்பத்திக்கு வழிவகுக்கும்.மேலும், ஐ.நாவின் உலக ஆயுதத் குவிப்பிற்கு எதிரான அமைப்புகளிடமோ அமைதிக்கான அமைப்புகளிடமோ இது குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை. அறம் சார்ந்த சமூகம் தொடர்பான எந்தவொரு உரையாடலும் வெளிப்படையாக நடத்தப்படவில்லை.

சுரங்கம் தோண்டும் பணியின்போது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அளவிலான வண்டல்களை வெளியேற்ற வேண்டும்.அதில் ஒரு லட்சம் டன் அளவில் தூசியாகவும் பத்தாயிரம் டன் அளவில் சிறு துகள்களாகவும் இருக்கும்.இப்பெரும் வண்டல் குப்பைகளானது தமிழகப்பகுதியின் விவசாய நிலத்தையும் நீர் ஆதாரங்களையும் கெட்டழித்துவிடும்.

நியூட்ரினோ ஆய்வு தொடர்பாக அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள சில குறிப்பிட்ட ஆபத்துக்கள் மட்டுமே மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நியூட்ரினோ குறித்த அறிதலானது வரம்பிற்குட்பட்டவையாகவே உள்ளது. நம்மைச் சுற்றி கண்ணுக்கு புலப்படாதவகையில் பல நியூட்ரினோக்கள் பொழிந்துகொண்டிருந்தாலும் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிற நியூட்ரினோக்களை அவை ஒத்திருப்பதில்லை.மேலும், புவியின் பல்வேறு அடுக்குகளில் ஊடுருவிச்செல்கிற இந்நியூட்ரினோக்கள் நிலநடுக்கம் போன்ற கடும் விளைவுகளைக் கூட ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.யாரறிவர்?

இந்தியாவில் உள்ள இருபத்திற்கும் மேற்பட்ட அணுவுலைகளின் கதிரியக்கத்தன்மைக் கொண்ட அணுக்கழிவுகளைச் சேமிக்கக் கூட இந்த ஆய்வுக்கூடத்தை இந்திய அணுசக்தித் துறை பயன்படுத்தலாம். ஏனெனில், புவியின் ஆழத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் யார் கண்காணிப்பிற்கும் ஆட்படாத வகையில் கிடங்கை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம்.!

நியூட்ரினோ ஆய்வானது மிக முக்கியமான பௌதீக மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாகும்.வானவியல் துறை, துகள் அறிவியல் துறைக்கும் இவ்வாராய்ச்சி முடிவுகள் முக்கியத்துவம் கொண்டவையாகவே உள்ளன. அண்டத்தின் தோற்றம் மற்றும் நட்சத்திரங்களின் ஆற்றல் உற்பத்தி தொடர்பான மிக அடிப்படைக் கேள்விக்கான விடையானது நியூட்ரினோவை மையப்படுத்தியே உள்ளது. நமது உடலை முழுவதுமாக சோதனை செய்யவும் புவியை முழுவதுமாக படம் பிடிக்கவும் நியூட்ரினோவை பயன்படுத்தலாம். X -ரேவை விட நியூட்ரினோக்கள் ஆபத்து குறைவானவை. கறுப்பு ஆற்றல் மற்றும் கருப்புப் பொருட்கள் குறித்த ஆய்வுக்கு முக்கியப் பங்களிப்பு செய்பவை.

ஆனாலும், இத்திட்டம் வர இருக்கிற இடத்தில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆயுதமாக்கல் தொடர்பான ஆபத்து மிக்க அம்சங்களை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். மேலும் திட்டத்தை மக்களின் பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

ஆங்கில கட்டுரை: India Based Neutrino Observatory: Potential Geological, Radiological
And Biological Impacts.27 December, 2012,Countercurrents.org

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s