ஆசைத்தம்பி

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை

என ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது தாய்க் கோழியின் தவிப்பாக மகராசனின் மனநிலையை இந்நூல் பேசுகிறது என்று கவிதை பட்டறை பதிப்பகம் எழுதியதை பார்க்கும் பொது மனசுக்குள் சோகம் இழையோடுகிறது.

அடுத்து ” அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனும்டா ” என அப்பாவும் ” “ஒழைக்காம உட்க்கார்ந்து சாப்புட்டா ஒடம்புல ஒட்டாது ” என அம்மா சொன்னதையும் ஆசிரியர் நினைவு கூறும் போது யாரவது ஒரு பையன் வீட்டில் இருக்கலாம்ல ஏன் கஷ்டப்படுறீங்க என்று கேட்ட என்னிடம் என் ஐயாம்மா சொன்னது என் காதுகளில் ஒலித்தது ,” “உண்ணப் பார்த்துக்கிட்டு இருந்தாலும் உழைக்க பார்த்துகிட்டு இருக்க கூடாது ”

தனது எழுத்துக்களைப் பற்றி ஏர் மகராசன் ( ஏர் என்பது எங்கும் இல்லாத நிலையிலும் தனது பெயரில் அதை சேர்த்து நமக்கெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ) கூறுகிறார் இப்படி . “பகட்டும் பூடகங்களும் புனைவுகளும் இல்லாத எளிய மக்களின் வாழ்வியல் கோலங்கள் போலத்தான் எமது எழுத்துக்களும் அழகியல் , கோபம் , திடம் , மானுட வாசிப்பு போன்றே எனது எழுத்துக்களும் எளிமையானவை . எளிய மக்களுக்கானவை ” . ஆனால் கருத்துப் பட்டறையோ ,” நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு கொண்டிருப்பதால்தான் , நிலம் பற்றிய தவிப்பை ஏர் மகராசனால் புலப்படுத்த முடிகிறது அவருடைய பதிவுகளை வாசிக்கும்போது ஒட்டு மொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன ” என்று கூறும் போது இந்நூல் வாசிப்பின் அவசியத்தை உணர்த்திக் செல்கிறது

தனது முதல் கட்டுரையில் ( பெண் ஆண் உடல்கள் சொல்லாடல்களும் பொருள் கோடல்களும் ) பெண்ணைக் குறித்த அறங்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டவை ஆண் நோக்கிலானவை ஆண்களின் நலனுக்கானவை என்பதை அழகாக கூறுகிறார் . இறுதியில் ஆணுடன் வேறு பெண்ணுடல் வேறு . இந்த வேறுபாட்டை இயல்பாய் இயற்கையாய் அமைந்த ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் உண்மையை இருக்க முடியும் . இந்த வேறுபாடுகளின் மீது ஏற்றது தாழ்வு காண்பிக்கும் போதுதான் செயற்கையாகவும் பொய்யாகவும் மாறி போகின்றன . பொய்யானவை நிலைப்பதுமில்லை வென்றதும் இல்லை என்கிறார்

ஏர் மகாராசன்
ஏர் மகாராசன்

பண்டைத் தமிழர்களுக்கான பண்பாடுகளை , இலக்கண மரபுகளை அறிய முடியாமல் நாம் தவிக்கும்போது தொல்காப்பியம் தான் தன்னை தாய் தந்தையாய் நம்மை தோளில் ஏற்றி வேடிக்கை பார்க்க வைக்கிறது என்று கூறும் ஆசிரியர் ஆனால் தொல்காப்பியர் பார்த்தது வேறு ( நம் மரபு ) . அவர்களின் மீதேறி நாம் பார்ப்பது வேறு ( எதையும் மீளாய்வு செய்து பார்க்கிற புதுப் பார்வைகள் ) என்கிறார் . தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றைய வரையில் பெண்ணாடக்கல் என்பது தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது . எல்லா மதங்களும் பெண்ணுக்கு எதிராக பெண்ணுடலைப் சிறுமைப்படுத்துவதிலும் அடிமைப்படுத்துவதிலும் ஒரே புள்ளியில் இணைந்திருக்கின்றன என்று ஆதங்கப்படும் ஆசிரியர் , தொல்காப்பியம் , மனு சாஸ்திரம் , பைபிள் , திருக்குரான் , பௌத்தம் , சமணம் , டார்வின் ,புருத்தோன், சிக்மண்ட் பிராய்டு ஆகியோர் அமைத்த கட்டுமானங்கள் உண்மையானதுமில்லை : உறுதியானதுமில்லை என்பதை சமூக மாற்றங்கள் மெய்ப்பித்து வருகின்றன . வலுவானவை வாழும் .வலுவற்றவை வீழும் என்பதை மேற்குறித்த கட்டுமானத்திற்கு பொருத்திப் பார்க்கலாம் என்கிறார்

இரண்டாவது கட்டுரை பெண் கவிஞர் கனிமொழியின் கவிதை பற்றியது

” என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதை தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு “

தேநீர்க்கடை மேசையில்
ஒடுங்கியபடிக் கிடந்த
உன் கைகளை பற்றி
உன்னிடம் ஏதாவது பேசி இருக்கலாம்
ஒரு பிறழ்ந்த தருணத்தின்
தவறிய கணங்களில்
சிதறுண்டு போனது நம் உலகம்
தொலைந்து போன சில கணங்களைத்
தேடிக் கொண்டு இருக்கிறேன்
கறந்து போன நம் காதலை நியாயப்படுத்த “

இருவர் தலைகளும் சிதைக்கப்பட்டன
தலைகள் இருந்த இடத்தில்
கிரீடங்கள் வைக்கப்பட்டன
பீடத்தில் இருந்தவன் அட்சதை தூவினான்

இது போன்ற கவிதைகள் இன்னும் சில

மூன்றாவது கட்டுரை சல்மாவின் கவிதைகளைப் பற்றி

“என்னை மீறித்
தீர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை
தீரவே தீராத
தனிமையுடன் நான்
இங்கேதான் இருந்து வருகிறேன்”

” என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை

பனி படர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்

என்னை எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த எதையுமே “

குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்று தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் அருவருப்பூட்டுவதாய்
சொல்கிறாய்
இன்றும் இனியும் எப்போதும்
மாறுவதில்லை

இது போன்ற கவிதைகள் இன்னும் சில

அடுத்தது நான்காவது கட்டுரை லதாவின் கவிதைகளைப் பற்றி

“வலி ருசிக்கும் அற்புதத்தை
அறிவாயோ என் பூவே
அணுவைத் துளைக்க
தாங்குமா என் சிறு பூ”

“தீயில் விறைத்து
நின்ற காலம்
நீர் தூவலில் வெடித்துச் சிதற
விழிகள் உயிர்பெற்று
விடை பெற்றன”

அடுத்து ஐந்தாவது கட்டுரை உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து

” நான் யார் ? பெரியவளா , சிறியவளா நீயே சொல்
அனு கேட்கையில் மரப்பாச்சி விழிக்கும்
எனக்குன்னு யார் இருக்கா ? நான் தனிதான ?
அனுவின் முறையாடல்களை
அது அக்கறையோடு கேட்கும் “

ஒரேயொரு முறை புரண்டு
விழித்துக் கொள்ளுங்களேன்
உடம்புக்கென்ன என்று
ஒரு வார்த்தை கேளுங்களேன்

ஏகப்பட்ட கவிதைகள் ஆசிரியரின் உரையாடல்களோடு

ஆறாவது பண்பாட்டு மார்க்சிய உரையாடல்

மார்க்சியத்தைப் பற்றி நடந்த ஒரு உரையாடலைப் பற்றி ஒரு உரையாடல்

அடுத்து ஏழாவது தினை மொழி எடுத்துரைப்புகள்

குறுந்தொகை கவிதையுடன் காதலர்களின் சங்கமங்கள் பற்றியது

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

நிகழ் காலத்திய வாழ்க்கையின் வூடே நகர்ந்து செல்வதை பற்றிய ஒரு உரையாடல்

எட்டாவது முல்லைப் பாட்டு பற்றியது

உரையாடல் முல்லைப்பாட்டு கவிதைகளைப் பற்றி

ஒன்பது தற்கொலை செய்து கொண்ட உழவுக்குடிகள்

ஈராக் நாட்டின் பாக்தாத் அருங்காட்சியகம் அமெரிக்க படைகளால் அழிக்கப் பட்டபொழுது
மனிதத்தை நேசிக்கக் கூடிய கலைஞர்களிடையே பெரும் கொதிப்பு இருந்தது . அந்த நாளின் இரவு முழுவதும் தனது அம்மா அக்கா தங்கை உடுத்திய பழைய சேலை தாவணி பாவாடைத் துணிகளைக் கொண்டு நிறைய பொம்மைகளைச் செய்தவர் முருகபூபதி என்னும் கலைஞர் .அவரின் பெரும்பாலான நாடகங்கள் மக்களையும் மண்ணையும் கலைகளையும் நேசித்ததால் வந்ததாகும் .

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை
எனப் பாடியபடி ஒருவர்
முன் செல்ல மற்றவர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள் . வேளாண்மைத்தொழிலால் மோசமாக்கப்பட்ட உழவர்களின் அழுகையும் ஒப்பாரியும் தான் நாடகத்தின் உயிர் என்பதை அந்த ஒப்பாரி பாடல் உணர்த்தியது

நிலத்தை நினைத்தும் மனைவி மக்களை நினைத்தும் செத்துப் போன சம்சாரிகளின் ஆன்மாக்கள் அழுது புலம்புகின்றன . உள்ளத்தை உருக்கும் உரையாடல்கள்

பத்தாவது கோமாளிக்கூத்து

ஈழம் பற்றிய உணர்வுபூர்வமான உரையாடல்

போர் என்றால் வன்முறை . அழிக்கப்படுவது அநேகமாக பெண் உடல்களாக தான் இருக்கும். அதிக விதவைகள் வாழும் இடமாக ஈழம் போனது ஏன் ? விதைகளை விருட்சங்கள் ஆக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப் போனது மிகப் பெரிய சோகம் . எம் தொப்பூள்க் கொடி உறவுகள் எம்மைக் காப்பாற்றுவார்கள் என மரண விளிம்பிலும் நம்பிக்கை வைத்திருந்த அவர்களின் நம்பிக்கையை மண்ணோடு மண்ணாய் ஆக்கியது நாமல்லவா ? நம்மை ஆண்ட அரசுகள் அல்லவா? ஈழத் தமிழினத்தின் துயர் நிறைந்த கதையாடல்களை மிருக விதூஷகம் நடக்கமாய் ஆக்கியிருக்கிறார் முருக பூபதி .

எங்கள் வூரில் மலர்கள் இல்லை . பறவைகள் இல்லை வண்ணத்துப் பூச்சிகள் இல்லை . வண்டினங்களின் பாடல்கள் இல்லை பாதைகள் குழம்பிய பிரதேசத்திலிருந்து அவை திரும்பவே இல்லை . வூர் வூராய் தேடி வருகிறோம் . என அழுகிறார்கள் . மரணித்தவர்களுக்காகவும் மரணித்தவைகளுக்காகவும் அழுகிறார்கள் .

நாடற்ற மனித வாழ்வை நிலமிழந்த உயினங்களின் வாழ்வை, காடிழந்த மரங்களின் வாழ்வை ,வீடிழந்த மக்கள் வாழ்வை, கூடிழந்த பறவைகள் வாழ்வை, புதர் இழந்த பூச்சிகள் வாழ்வை ,கடல் இழந்த நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை ஆமை உருக்கோலம் பூண்ட கோமாளிகள் அரங்கேற்றுகின்றார்கள்

11- ஆவது கட்டுரை புதைகுழி மேட்டிலிருந்து வேளாண்குடிகளின் ஒப்பாரி

அறமும் அதிகாரமும் ஆதிக்க சக்திகளின் உடைமை அன்றும் . இன்றும் என்றும் . தலைப்புக்கேற்ப வேளாண்குடிகளின் பாதிப்புகளை விரிவாக பேசுகிறார் ஆசிரியர் . சிந்திக்க வேண்டியவை . வேளாண்குடிகளுக்கான கோரிக்கையையும் வைக்கிறார் . எல்லோரும் இணைந்து போராட வேண்டிய விஷயம் உரைக்க வேண்டிய விஷயம் , உறைக்கும்மா நமக்கு ?
இறுதிக்கு கட்டுரை 12 – ஆவது புதைக்காட்டில் மறைந்திருக்கும் தொல்லியல் தடயங்கள்

பழங்கால பண்பாட்டு அடையாளப் பதிவுகளை மக்கள் தமிழ் ஆய்வரண் நிறுவனர் முனைவர் மகராசன் கண்டறிந்து விளக்கி இருக்கிறார் . எல்லோரும் அறிய வேண்டிய விஷயங்கள் இவை

“மொழியில் நிமிரும் வரலாறு” படித்தேன். இவர் மொழியால் நிமிர்ந்தது என் உணர்வு . வாழ்த்துக்கள்….. மகாராசனுக்கு.. இல்லை இல்லை ஏர் மகாராசனுக்கு ..

மொழியில் நிமிரும் வரலாறு , ஆசிரியர் – ஏர் மகாராசன். பக்175 , விலை ரூ150 கருத்து பட்டறை வெளியீடு , மதுரை.

பேச : 9842265884