சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி அதன் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இத்தகைய முடிவு ஏற்கதக்கதல்ல. இந்திய உருக்காலை ஆணையத்தின் (செயில்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பிலாய், பொகாரோ, ராஞ்சி உள்ளிட்ட உருக்காலைகள் திறம்பட செயல்படுவது போலவே, சேலம் உருக்காலையும் தொழிற்நுட்ப வல்லுநர்களால் திறம்பட செயல்பட்டு வருகிறது.

சேலம் உருக்காலைகளில் 4.4 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் நட்டம் என்பது யாரால்? எதனால்? என்பதனை அரசு அறிவிக்க வேண்டும்.
சேலம் உருக்காலையை நவீனப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும், நவீனங்கள் குறித்தும் முழு விபரங்களை அரசு வெளிப்படுத்த வேண்டும். பொதுத்துறைகளையும் அதன் பங்குகளையும் விற்க சென்றமுறை பாஜக அரசு தனி அமைச்சகம் உருவாக்க ஆர்வம்காட்டியது போல் இம்முறையும் பொதுத்துறைகளை விற்க துடிப்பது கண்டிக்கத்தக்கது.

நாட்டின் பொருளாதாரம் நீடித்த, நிலைத்த தன்மைக்கு பெரும் பங்காற்றும் பொதுத்துறைகளை மத்திய அரசு விற்பது என்று முடிவு செய்வது ஏற்க இயலாது என்றும், அரசு இம்முடிவை திரும்பபெற வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. அத்துடன் சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து போராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.