ஒரு விளையாட்டு வீரனை, அவன் காயமற்று இருக்கிற காலத்தில் களத்திற்கு அனுப்பாமல் இருக்கிற நிலை துயரமானது. அந்தத் துயரத்தைப் பல முறை அனுபவித்திருக்கிறேன். எனவே வாய்ப்புக் கிடைக்கிற போது முழுமையாக ஆடிப் பார்க்க நினைக்கிறேன். இப்போது நல்ல உடல் தகுதியோடு இருப்பதாகவும் கருதுகிறேன். எனக்கு ஏற்கனவே பழக்கமான களம்தான் இது. இங்கிருந்துதான் என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இடையில் கொஞ்ச வருடங்கள் பிழைப்புத் தேடி வேறு வேறு நிலங்களில் சுற்றினேன். அது அனுபவங்களைக் கொட்டிக் கொடுத்தது.

அந்த அனுபவங்களைத் தோளில் சுமந்து கொண்டு ஒரு நாடோடி போல, முறையான பயிற்சிகள் இல்லாமல், போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் திரும்பவும் நான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தேன். பிழைப்பில் கிடைத்த அனுபவங்களின் காரணமாக மனம் திருந்திய மைந்தனாகவும் வந்தேன். குடுகுடுப்பைக்காரனைப் போல எல்லாவற்றையும் கொட்டி விடலாம் என்கிற மனநிலையில் வந்தேன். எங்கள் ஊர் குடுகுடுப்பைக்காரனின் கதைகளை இன்னொரு குடுவைக்குள் அடைத்துச் சொல்கிறேன். குடுவையில் இருக்கிற மருந்தின் வேர் தேடினால், அது மஞ்சணத்திச் செடியாகத்தான் இருக்கும். கருவேல முட்களின் கதையை உலகளாவிய அனுபவங்கள் வழியாக கருவேலத்தின் குணம் கொண்ட டிராகன் பழத்தில் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.

டிராகனும் கருவேலமும் வேறு வேறல்ல. ஆனாலும் ஒன்று வளர்ச்சியின் குறியீடு. இன்னொன்று அழிவின் குறியீடு. அதேசமயம் இந்த இரண்டும் சேர்ந்ததுதான் நான் என்னுடைய நாவல்களின் வழியாக வடிவமைக்கிற வாழ்க்கை. இந்த வாழ்க்கையை அருளிய பாண்டி முனி அய்யாவை என் சக்திக்குத் தகுந்த மாதிரி ஏர் ஏசியா விமானத்தின் எகனாமிக் கிளாஸில் அழைத்துச் செல்லப் ப்ரியப்படுகிறேன். பாண்டி முனி அய்யாவாக இருப்பவர்களெல்லாம் இதை விரும்பத்தான் செய்வார்கள்.

பாண்டி முனி அய்யாவும் எத்தனை காலம்தான் அந்தக் கருவேலங் காட்டிற்குள் நின்று வெந்து கிடப்பார்? அவர் விரும்புகிறாரோ இல்லையோ, ஆட்டு எலும்புகளை மென்று கொண்டு இருப்பவருக்கு ஒரு இளைப்பாறுதலுக்காக மெக்சிகன் சிஸிலரை தர விரும்புகிறேன். எனக்கு இந்தப் படையல்தான் தெரியும். இந்தப் படையலுக்கான வாழ்க்கையைத்தான் அவர் எனக்கு அருளியிருக்கிறார். அதையே நான் நன்றியுடன் திருப்பித் தர விழைகிறேன். அதை அவர் விரும்பவும் செய்வார் என்கிற உறுதி என்னிடமுண்டு.

தெரிந்ததையெல்லாம் கொட்டுகிற அந்த முதல் தலைமுறை குடுகுடுப்பைக்காரனை முற்றத்தில் அமர வைத்து அகத்திக் கீரையும் நீச்சத் தண்ணீரும் தந்து உபசரித்தவர் மனுஷ்ய புத்திரன் சார். அவர்தான் அந்தக் குடுகுடுப்பைக்காரன் தன்னுடைய கதையை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தார். அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். என்னுடைய ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை  நாவல்களை ‘போஸ்ட்மார்டன் கிளாசிக்ஸ்’ என்று சொல்லி என் மீது ஒளி பாய்ச்சியவர் சாரு நிவேதிதா. ஒரு துறையில் புதிதாக நுழையும் ஒருவனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தத் தயங்காதவர் என்கிற வகையில் அவர் மீது பெருமதிப்பு கொண்டிருக்கிறேன். அவருக்கு இந்த நாவலைச் சமர்ப்பணம் செய்கிறேன். சென்னையில் என்னுடைய தொழில் வாழ்க்கையைத் துவக்கி வைத்தவர் அப்பணசாமி சார். அவர் இந்த நாவலுக்கு முன்னுரை எழுதித் தந்ததை உணர்ச்சிகள் மேலிடும் ஒரு அனுபவமாகத்தான் கருதுகிறேன்.

என்னைத் தூக்கிச் சீராட்டிய எனக்கு முன் எழுத வந்த முன்னோடிகளான விநாயகமுருகன், அபிலாஷ் சந்திரன், கே.என்.சிவராமன், யுவகிருஷ்ணா, ஜி.கார்ல் மார்க்ஸ், எஸ்.செந்தில்குமார், லக்ஷ்மி சரவணக்குமார், தம்பி கார்த்திக் புகழேந்தி ஆகியோரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். ஏற்கனவே எழுதியவற்றைப் படித்துவிட்டு வார்த்தைகளின் வழியாக வழிநடத்தும் என் மூத்த முன்னோடிகளான எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்மகன், டி.ஐ.அரவிந்தன், இரா.முருகவேள், ந. முருகேச பாண்டியன், இமையம், அ.ராமசாமி, உதயசங்கர், நெல்லை க்ருஷி, பாலநந்தகுமார், மதுரை அருணாசலம் ஆகியோரை எப்போதும் நினைவில் நிறுத்துவேன். என்னை எல்லா வகைகளிலும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் என்னுடைய நண்பர்களான செல்வி ராமச்சந்திரன், சந்தோஷ் நாராயணன், பிரபுகாளிதாஸ், ஆனந்த் செல்லையா, கலாநிதி, கட்டுமரம் கண்ணன், திருமகன் ஈ.வே.ரா, ராஜா குள்ளப்பன், டைட்டஸ், சஞ்சீவி குமார், கவிதா முரளிதரன், குணசேகரன், பாரதித்தம்பி, செல்லையா முத்துச்சாமி, லோகேஸ், ஏ.எம்.கணேஷ், ஜெயா, பிரவீண், எட்வர்ட், ஆவுடையப்பன், ஸ்ரீரங்கன், அஜய், வழக்கறிஞர் கோவை எம்.சரவணன், ஜார்ஜ் ஆண்டனி, வழக்கறிஞர் அழகர்சாமி, இளங்கோவன் முத்தையா, கடங்கநேரியான், ஜி.பச்சையப்பன் ஆகியோரை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். என்னுடைய புத்தகங்களைப் படித்துவிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் முகநூலில் விமர்சனம் செய்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அவர்களின் கருவி நான். சிலர் விடுபட்டிருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன். வழக்கம் போலவே பவித்ராவை முன்னிறுத்திய இந்த வாழ்க்கையைக் கொடுத்ததற்காக அந்தப் பேருண்மைக்கு நன்றி சொல்கிறேன். ஒரு குடுகுடுப்பைக்காரனுடன் வாழ்வது சாதாரணமான காரியமா என்ன? ஆயுள் முழுவதும் பவித்ராவிற்குக் கடன்பட்டிருக்கிறேன்.

நாடோடியான இந்தக் குடுகுடுப்பைக்காரன் உங்களுடைய கதைகளைத்தான் சொல்கிறான். ஒருநாள் அவன் நள்ளிரவில் நகர்வலம் போனபோது, இறப்பில்லாத வீடொன்றில் கடுகு தேடிப் போன தாயொருத்தியைப் பார்த்தான். அந்தத் தாயாகத்தான் அஜ்வா என்கிற பேரிச்சம் பழத்தைப் பார்க்கிறேன். என்னுடைய சகோதரர்கள் பிறந்தார்கள். வாழ்வென்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே வீழ்ந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் இருந்து அவர்களது ஆசியுடன் ஒருத்தன் பிழைத்து மேலேறி வந்தான். அப்படி பிழைத்து வந்த ஒருவனின் கதைதான் அஜ்வா. அவன்தான் ஐந்து முதலைகளின் கதை நாவலில் இருந்தான். அவன்தான் ரோலக்ஸ் வாட்ச் நாவலில் இருந்தான். அவன்தான் வெண்ணிற ஆடையிலும் இருந்தான். இப்போது அஜ்வாவிலும் இருக்கிறான்.

ஏனெனில் நான்தான் அது. நான் என்பது நானல்ல இங்கே. இது என் தலைமுறையின் கதை. என் முன்னோர்களின் முன்பு அமர்ந்து, அவர்களிடமிருந்து அவர்கள் அறியாமலேயே எடுத்துக் கொண்ட அவர்களது வாழ்க்கையைத் திரும்பவும் எனக்குத் தோதான வடிவத்தில் சொல்கிறேன். கரிசல் நிலத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நாவலை அடையாளப்படுத்த விரும்புகிறேன். புரிந்து விரும்பி, என் முன்னோர்கள் எனக்கு அகத்திக் கீரையும் நீச்சத் தண்ணீரும் வழங்குவார்களாக; என் சகோதரர்கள் வழக்கம் போல என்னைத் தாங்கிப் பிடிப்பார்களாக; இங்கே வந்து என்னைச் சேர்த்த பேருண்மை, அங்கேயும் என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்கிற நம்பிக்கை நிறைய இருக்கிறது. அதுவரைக்கும் பொறுப்பதற்கான மனமும் இருக்கிறது.

  •  சரவணன் சந்திரன்

சென்னை

எழுத்தாளர் சரவணன் சந்திரனின் வரவிருக்கும் நாவலான ‘அஜ்வா’வின்  முன்னுரை.