“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,

“தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுச் செய்தி அதிமுக ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்யத் திட்டம் கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள தாலிக்கு தங்கம் கொள்முதல் என்பது ஒவ்வொரு முறையும் சர்வதேச மதிப்பை விட அதிக விலை கொடுத்தே வாங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு தங்க நாணயத்திற்கு சந்தை மதிப்பை விட 506.25 ரூபாயில் துவங்கி, 3467.89 ரூபாய் வரை அதிகம் கொடுத்திருப்பது ஜு.வி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அந்த பத்திரிக்கையின் புலனாய்வு செய்தி என்பதையும் தாண்டி, அத்தனை விவரங்களும் “தகவல் உரிமை விவரச் சட்டப்படி” பெறப்பட்டிருக்கிறது என்பது “தாலிக்கு தங்கம்” வாங்குவதில் அரசு பணம் 111 கோடி ரூபாய் எப்படி ஊதாரித்தனமாக செலவிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 2.1.2012 அன்று ஒரு வங்கியிடமிருந்து 30 ஆயிரம் தங்க நாணயங்கள் வாங்கப்பட்டுள்ளன. 4 கிராம் தங்க நாணயம் ரூபாய் 11 ஆயிரத்து 97 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் 4 கிராம் தங்க நாணயத்தின் சர்வதேச விலை வெறும் 8 ஆயிரத்து 624 ரூபாய் தான். 27.11.2013 அன்று ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கொடுக்கப்பட்டுள்ள விலை 4கிராம் தங்க நாணயத்திற்கு ரூபாய் 10 ஆயிரத்து 462. ஆனால் அன்றைய தினம் 4 கிராம் தங்க நாணயத்தின் சர்வதேச மதிப்பு வெறும் 9 ஆயிரத்து 159 ரூபாய் மட்டுமே!

இப்படி அதிமுக அரசு 17.5.2011 அன்று அறிவித்த இந்த “தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஐந்து வருடங்களில் தங்க நாணயங்கள் கொள்முதலில் அதிக விலை கொடுத்து, அரசு பணத்தை அள்ளிக் கொடுத்த நிகழ்வு அதிமுக அரசின் மிக மோசமான நிதி நிர்வாக நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக தனியார் நகை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் போது நான்கு கிராம் உள்ள ஒரு நாணயத்திற்கு 1303 ரூபாயிலிருந்து 2362 ரூபாய் வரை அதிகம் தாரை வார்க்கப்பட்டுள்ளதன் பின்னனி மர்மமாகவே இருக்கிறது. ஏழை எளிய பெண்களுக்கு “தங்க நாணயம்” வழங்கும் திட்டத்தில் கூட அதிமுக அரசு செய்துள்ள முறைகேடு, “மாங்கல்யம்” வாங்குவதிலும் அதிமுக ஆட்சியில் “மார்ஜினா” என்ற சந்தேகத்திற்கு இடம் அளித்திருக்கிறது. அரசு கஜானாவிலிருந்து 111 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை இப்படி அலட்சியமாக வாரி இறைத்ததின் பின்னனி என்ன? அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அமைச்சர்கள் யார்? குறிப்பாக வங்கிகளிடமிருந்தும், தனியார் நகை நிறுவனங்களிடமிருந்தும் சர்வதேச விலையை விட அதிகமாக விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன? இந்த ஒட்டுமொத்த சலுகை மற்றும் முறைகேட்டால் பயனடைந்தவர்கள் யார் யார் என்ற விவரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

ஆகவே, திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கிகளிடமிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தங்க நாணயம் கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள விதிமுறை மீறல்கள், சர்வதேச விலையை விட அதிக விலை கொடுத்து அரசுக்கு 111 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தியது உள்ளிட்ட அனைத்து முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.