தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து வலுப்பெற்று புயலாக இன்று காலை 08.30 மணியளவில், தென்மேற்கு வங்ககடலில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. நாடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிச 2 ஆம் தேதி கடலூர் அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும்,புதுச்சேரியிலும் நாளை காலை முதல் கனமழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் மற்றும் வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை தேர்வு ரத்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயலால் தமிழகத்தின் அநேக இடங்களில் நாளை மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பொறியியல் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் 5 கடலோர மாவட்டங்களிலும், விழுப்புரத்தில் 2 தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.