பத்தி

மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள்

வில்லவன் ராமதாஸ்

ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து மோடி ஊடகங்களில் வாந்தியெடுத்தபோது எங்கள் அருகாமையில் உள்ள தெருக்களில் பட்டாசுகள் வெடித்தன. அதன் பிறகு வந்த உறவுக்காரர்கள் நால்வரின் தொலைபேசி அழைப்புக்கள் பெரும் பரவசத்தை சுமந்து வந்தன. அதன் மோசமான பின்விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ளக்கூட அவர்கள் தயாரில்லை. ஒரு ரஜினி ரசிகன் அவர் படம் வெளியானால் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவானோ அவைதான் இந்த மத்தியதர வர்கத்தின் உடனடி எதிர்வினையாக இருந்தது. அவர்களின் ஆகப்பெரும்பாலானாவர்கள் இதனை அறிவுபூர்வமாக அணுகத் தெரியாதவர்களாக இல்லை. மாறாக அப்படி அணுக விருப்பமற்றவர்களாக இருந்தார்கள். அறிவீனத்தைவிட அறிவின்மீதான விருப்பமின்மை கொடூரமானது. அறிவின் மீது ஆர்வமற்ற மிடில் கிளாஸ், அவர்கள் அறிவு மற்றும் விருப்பத்தினை தீர்மானிக்கும் வெகுஜன ஊடகங்கள், ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசு இந்த கூட்டணிதான் இப்படியொரு பேரழிவு துவங்கிய பிறகும் நாட்டை அமைதியாக வைத்திருக்கிறது.

1990க்கு பிறகு வந்த தாராளமயமாக்கல் நடவடிக்கை நடுத்தர வர்கத்தை மனதளவில் ஊழல்மயமாக்கி சமூகசிந்தனையற்ற கும்பலாக உருமாற்றியிருக்கிறது. பிறரைப் பற்றி அக்கறை கொள்வது நமது வேலையில்லை என்பதும் பணம் சம்பாதிக்க உதவாத அறிவு அனாவசியமானது என்பதும் இந்திய நடுத்தர வர்கத்தின் பெரும்பகுதியினரின் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய மாற்றங்கள் எல்லாம் நம்மை எப்படியாவது பணக்காரனாக மாற்றிவிடும் எனும் நம்பிக்கையின் மூலம் இவர்கள் போதையூட்டப்பட்டிருக்கிறார்கள். குடிகாரன் குவாட்டரால் திருப்தியடையாதபோது சாராயத்தின் மீது நம்பிக்கையிழப்பதில்லை. மாறாக இன்னும் கூடுதல் சாரயத்தை நோக்கி போகிறான். அவ்வாறே தனியார்மய போதையூட்டப்பட்ட மத்தியதர வர்கம் சிரமங்கள் நெருக்க நெருக்க முன்னிலும் தீவிரமாக தாராளமயக் கொள்கையை பற்றிகொள்கிறார்கள்.

மோடியின் இத்திட்டத்தை மூன்று பிரிவினர் ஆதரிக்கிறார்கள். முதலில் உயர் நடுத்தர வர்கம். இவர்கள் ஆதரிக்க காரணம், மோடி கொண்டுவரும் மாற்றங்கள் நீண்டகால அடிப்படையில் இவர்களுக்கு பலன் அளிக்கக்கூடியவை. இப்பிரிவு மக்கள்தான் நிறுவனங்களின் உயர் பொறுப்பை அடைவார்கள். சிறு வணிகமும் தொழிலும் அடிபட்டால் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில்கள் வளரும், அதனால் இந்த பிரிவினரின் பணிவாய்ப்பின் பரப்பு அதிகரிக்கும். ஆடிட்டர்கள். பங்குசந்தை ஆலோசகர்கள், பங்கு பரிவர்த்தனை நிறுவனங்கள் என இப்பிரிவில் உள்ள பலர் இதனால் பலனடைவார்கள் (உதாரணம்: வங்கி வட்டி விகிதம் குறைந்தால் மக்கள் பங்குசந்தைக்கு இழுக்கப்படுவார்கள், அதன் நிச்சய பலனாளிகள் இவர்கள்தான்)..

இரண்டாவது பிரிவு அரசியல் அடையாளமற்ற மற்றும் புரிதலற்ற இளைஞர்கள். நாளிதழ்கூட படிக்காமல் அரைமணிநேர தொலைக்காட்சி செய்திகளை வைத்து தங்கள் அரசியல் ஞானத்தை காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் இவர்கள். ஒரு தனிப்பட்ட அடையாளம் தமக்கு வேண்டும் எனும் விருப்பமும் அதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகளின் மீதான விருப்பமின்மையும் அவர்களை மோடி போன்ற கதாநாயக பிம்பங்களை நோக்கி தள்ளுகிறது. அதில் தேசபக்தி, ஜாதிபக்தி என சகல கிளைகளுக்கும் இடம் இருக்கிறது. இத்த நிலைப்பாடு இவர்களிடம் எந்த உழைப்பையும் எதிர்பார்ப்பதில்லை. விஜய்க்கு பேனர் வைத்து அதற்கு கீழே தன் படத்தை போட்டுக்கொள்ளும் பாமரனின் உளவியல் இதுதான் “தன் படத்தை விளம்பரப்படுத்த அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லை, ஆகவே ஒரு பிரபலத்தின் தொண்டனாக தன்னை அடையளப்படுத்திக்கொள்வதன் மூலம் அவன் தனக்கு ஒரு முகம் இருப்பதாக கற்னையான திருப்தியை பெறுகிறான்”. இது ரசிக குஞ்சுகளுக்கு மட்டுமானதில்லை. தர்க ரீதியாக சிந்திக்க வக்கற்ற ஐ.டி தலைமுறைக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம் அவர்கள் ஒரு சினிமா நாயகனை முன்னிருத்தி தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் மோடியை முன்னிருத்தி தங்கள் ஐடெண்ட்டிட்டி அரிப்பை தீர்க்க முனைகிறார்கள்.

இந்த இரண்டு பிரிவும் திருந்தும் வாய்ப்பு அனேகமாக இல்லை. மேலும் இத்தகைய மனோநிலை கொண்டவர்கள் எல்லா சமூகத்திலும் இருந்தே தீருவார்கள். ஆனால் இதில் சிக்கிக்கொண்டிருக்கும் மூன்றாம் தரப்பு அப்பாவி மந்தை மனோபாவம் கொண்ட நடுத்தர மற்றும் பாமர மக்கள். இவர்கள் தங்களை அறியாமல் இந்த கொள்ளை கும்பலுக்கு துணைபோய் தங்களின் அழிவையும் தேடிக்கொள்கிறார்கள். இதன் ஆதாரப் புள்ளி என்பது நமது பள்ளிகளிலேயே ஆரம்பிக்கிறது. கேள்வி கேட்பதும் உரையாடலுமே ஒரு மனிதனின் தர்க அறிவை மேம்படுத்துகிறது. ஆனால் இங்கே பள்ளிகளின் முதல் பாடமே பேசாதே என்பதும் கேள்வி கேட்காதே என்பதும்தான். கடந்த 35 ஆண்டுகளாக இந்த கல்வியமைப்பில் வளர்த்தெடுக்கப்பட்ட நவமத்தியதர வர்கம் எதையும் கேள்வி கேட்டு பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளும் திறனை இழந்து நிற்கிறது. நான் உரையாடிய பல நடுத்தரவர்க மனிதர்களுக்கு இந்த பண ஒழிப்பு நடவடிக்கையை சந்தேகிக்கக்கூட தெரியவில்லை. தேசபக்தி ஹேஷ்டேக் போட்ட எந்த ஒரு அறிவிப்பையும் நம்பிவிட அவர்கள் சித்தமாயிருக்கிறார்கள்.

என் வீட்டு காம்பவுண்டுக்கு வெளியே நடப்பது எல்லாமே எனக்கு தேவையற்றது என்பதும் பணம் சம்பாதித்தால் எல்லாவற்றையும் பெற்றுவிடலாம் என்பதும் இந்த வர்கத்துக்கு கற்றுத்தரப்பட்டு அடிமைத்தனத்தை விரும்பி ஏற்கும் மசோகிஸ்ட்டுக்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் எஜமானனின் காலைச்சுற்றிவரும் நாயைப்போல இவர்கள் தங்களை சுரண்டி கொழுக்கும் அதிகார வர்கத்திடம் மூர்கமான விசுவாசத்தை காட்டுகிறார்கள். இவர்களுக்கான உடனடி பலன் தரும் மருந்துகளான சோதிடமும், கோயில்களும், சாமியார்களும் ஊடகங்களால் தொடர்ந்து சப்ளை செய்யப்படுகின்றன. சொத்து சேர்க்கும் ஆசை ஊட்டப்பட்டு ரியல் எஸ்டேட்டும், தங்கநகை வியாபாரமும் கொழிக்கின்றன. இது முட்டாளாக இருப்பதில் ஆனந்தம் கொள்ளும் கூட்டம். நகரத்தில் வீடு வாங்க வாழ்நாள் முழுவதையும் செலவு செய்யும் இவர்கள் அந்த வீடிருக்கும் நகரம் சூழல் சீர்கேடால் சில ஆண்டுகளில் வாழத்தகுதியற்றதாகிவிடும் என்பது பற்றி பிரக்ஞையே இல்லாமல் இருப்பார்கள்.

என் மகன் பிறந்தபோது வீட்ட்டுக்கு வந்திருந்த உறவுக்காரர் ”பையன் பொறந்துட்டான்ல, ஒரு மனை வாங்கிப்போடுங்க”, என்றார். எங்களுக்கு ஒரு மனை இருக்கிறது என பதிலளித்தேன். அது உங்களுக்கு, உங்க மகனுக்கு வேண்டாமா என்றார் அவர். என் சித்தப்பா மகன் ஐரோப்பாவில் பணியாற்றுகிறான். அவனுக்கு தஞ்சாவூரில் ஒரு விசாலமான வீடு இருக்கிறது. அவன் அடுத்த 20 வருடங்களுக்கு தமிழகத்தில் செட்டில் ஆக வாய்பில்லை. ஆனாலும் சென்னையில் 40 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பொன்றை வாங்கியிருக்கிறான். அதனை என்ன காரணத்துக்கு வங்கியிருக்கிறான் என்று அவனால் விளக்க முடியவில்லை. வெளிநாட்டில் வேலை செய்யும் அவனையொத்த பலரும் சென்னையில் வீடு வாங்கிவிட்டார்கள், இவன் அந்த குழுவில் சேராமல் தனித்திருப்பது அவனை நெருடுகிறது. இந்த ஒரே காரணம்தான் அந்த வீட்டை வாங்க தூண்டியிருக்கிறது. இவ்வாறே பல மத்தியதர வர்க மக்கள் அவர்களுக்கென்றே போதிக்கப்பட்ட ஒரு மாய மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் நோக்கி ஓடுகிறார்கள். அவர்கள் தெரிவு செய்யும் பள்ளியாகட்டும், நகை வாங்குவதாகட்டும் எல்லாமே ஒரு கண்ணுக்கு புலப்படாத பந்தயத்தால் நடக்கிறது. இந்த ரேஸ் அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் வழங்குவதில்லை. அந்த பதட்டம் காரணமாக இன்னும் வெறியோடு அந்த பந்தயத்தில் ஓடுகிறார்கள்.

மோடி திணித்திருக்கும் பணத்தாள் ஒழிப்பு நடவடிக்கையின் சேனைகள் இவர்கள்தான். ஆனால் இந்த நடவடிக்கையின் முக்கியமான மற்றும் இறுதி இலக்கு இவர்கள்தான். ஏழைகளிடம் இனி சுரண்ட ஏதுமில்லை. சென்றவாரம் மிண்ட் இதழில் வெளியான தரவுகளின்படி இந்தியாவில் உள்ள 1 சதவிகிதம் பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 59% வைத்திருக்கிறார்கள். இன்னொருபுறம் 50 சதவிகித மக்கள் நாட்டின் செல்வத்தில் வெறும் 2 சதவிகிதத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த கொடூரமான சமநிலையற்ற சமூகத்தில் ஏழைகளிடம் சுரண்ட அவர்கள் உழைப்பும் உயிரும் மட்டுமே இருக்கிறது. ஆனால் நடுத்தர வர்கத்திடம் இன்னும் சுரண்ட ஓரளவுக்கு செல்வம் இருக்கிறது.

அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அபாரமாக விலையேறும் எனும் ஆசைவார்த்தைகளை நம்பி வாங்கியிருக்கும் வீடுகளும் நிலங்களும் இனி விலையேற வாய்ப்பில்லை. இப்போதே அவை 30 சதவிகிதம் விலை குறைந்துவிட்டன. விற்க விரும்பும் பலருக்கு வாங்க ஆள் கிடைப்பதில்லை. பெரு நகரங்களில் லட்சக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்க ஆளில்லாமல் கிடக்கின்றன. இதனால் தங்கள் அசையா சொத்துக்கு கற்பனையாக ஏற்றப்பட்ட விலையை கடன் நிலுவையாக அவர்கள் செலுத்தப்போகிறார்கள். முதலீடாகவும் இல்லாமல் அவசரத்துக்கு விற்க முடியாத சேமிப்பாகவும் இல்லாமல் அவை இவர்களை ஏமாற்றப்போகின்றன.

பருவமழை பொய்த்தது போதாமல் இந்த பணப்பிரச்சினையும் விவசாயத்தை முடக்கிவிட்டது. உணவுப்பொருட்கள் இறக்குமதியாகும் அதே வேளையில் டாலர் மதிப்பு ஏறி அடுத்த கோடைக்குள் உணவுப்பொருட்கள் விலையேறும் (இன்றைய நிலையில் அரிசி விலை 20% உயர்ந்திருக்கிறது). பொருளாதார மந்தத்தைக் காட்டி சம்பள வெட்டும், வேலையிழப்பும் பல துறைகளில் நிகழும். இந்த இரட்டை சுருக்கு மிடில்கிளாஸ் மக்களின் கழுத்தை மிக விரைவில் இறுக்கப்போகிறது. கட்டுமானம், நுகர்பொருள் துறை, வாகன உற்பத்தி, ஆடைத்துறை என பெருமளவிலான தனியார் வேலைவாய்ப்பு தரும் துறைகள் இப்போதே இழப்பை சந்திக்க ஆரம்பித்துவிட்டன. ஐ.டி துறை பணியாளர் குறைப்பு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஆட்டோமேஷன் இன்னும் லட்சக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடவிருக்கிறது. மொத்த சம்பளத்துக்கும் செலவை வைத்திருக்கும் நடுத்தர வர்கத்தை முற்று முழுதாக நிலைகுலைய இவை வைக்கப் போதுமானவை.
வங்கி முதலீடுகளின் மீதான வட்டிவிகிதம் கணிசமாக குறைக்கப்படவிருக்கிறது. ரியல் எஸ்டேட் ஒரு முதலீடு எனும் தகுதியையே இழக்கவிருக்கிறது. தங்கம் பணத்தை சேமிக்க உதவுமே தவிர அது ஒரு வருவாய் தரும் முதலீடல்ல. ஆகவே ஓய்வுகால சேமிப்பை நம்பி வாழும் நடுத்தர வர்க முதியவர்கள் விதியை நொந்துகொண்டு காலனுக்கு காத்திருப்பதைத் தவிர வேறு வழி இருக்கப்போவதில்லை. ஓய்வுகால சேமிப்பை சேர்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு அது ஒரு நட்டமளிக்கும் முதலீடு. ஆகவே அவர்கள் வேறு வழியில்லாமல் பங்குசந்தை சார்ந்த முதலீடுகளின் பக்கம் நெட்டி தள்ளப்படுவார்கள். அது முதலாளிகளையும் தரகர்களையும் வாழவைத்துவிட்டு பணம் போட்டவர்களுக்கு பட்டை நாமம் சாத்தப்போகிறது.

இதுவரை மோடிக்கு இந்த கும்பல் காட்டிய விசுவாசத்துக்கு சிறப்புப் பரிசு கிடைக்க சாத்தியம் அதிகம். எல்லா கணிப்புக்களும் அடுத்த சில மாதங்களுக்கு பொருளாதாரம் நாறி நசநசத்துவிடும் என்றே சொல்கின்றன. ஏழைகள் எதிர்ப்பை சமாளிக்க இயலாது என்பதால் பெருமளவுக்கான விரிவிதிப்பு போராட்ட குணம் காயடிக்கப்பட்ட நடுத்தரவர்கத்தின் தலையில் விடியும். அப்போதும் இவர்கள் கோயிலுக்கு போவார்கள் மீறிப்போனால் தற்கொலை செய்துகொள்வார்களேயன்றி ரோட்டுக்கு வர மாட்டார்கள் என அரசுக்கு தெரியும். தாங்கள் பார்த்து ஏமாந்த விளம்பரத்துக்கான தண்டத்தையும் அவர்களே கட்டும் அதிசயம் இங்கே நிகழவிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல் இங்கே சிதையப்போகும் சமூக சமநிலையானது நேரடியாக மத்தியதர வர்கத்தைத்தான் தாக்கப்போகிறது. கிராமப் பொருளாதாரம் அழிந்ததால் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் நகரங்களுக்கு கூலிகளாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த உதிரித் தொழிலாளிகளின் பணிவாய்ப்புக்களும் பறிபோகும். அவர்களுக்கு இனி போக இடமில்லை. அது சிலரை தற்கொலையை நோக்கி தள்ளலாம், சிலரை பிச்சையெடுக்க நிர்பந்திக்கலாம். ஆனால் எல்லோரும் அடுத்தவர்களுக்கு பாதகம் செய்யாத இந்த அஹிம்சா வழிகளை தெரிவு செய்வார்கள் என முடிவெடுக்க முடியாது. அடித்து பிடுங்குவது என சிலர் முடிவெடுத்தால் அவர்களால் அதானியிடம் அதை செய்ய இயலாது. எதிரிலிருக்கும் மிடில்கிளாஸ் மக்கள்தான் அவர்களின் இலக்காக இருப்பார்கள். உலகம் முழுமையிலும் வெள்ளைக் காலர் கிரிமினல்கள் மற்றும் ஊழல்வாதிகளைத் தவிர்த்து மற்ற திருட்டு, ரவுடியிசம் செய்யும் குற்றவாளிகள் எல்லோரும் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வறிய நிலையில் இருப்பவர்கள்தான். அவர்களின் சூழல் இலகுவாக இத்தகைய நிலைக்கு அவர்களை தள்ளுவதுதான் அதற்கு காரணம்.
ஒரு பேரிழப்பிற்குப் பிறகு மனிதர்களின் உடனடி எதிர்வினை என்பது அந்நிகழ்வை மறுதலிப்பதுதான் என்கிறார் உளவியல் அறிஞர் எலிசபெத் குப்லாரோஸ். உதாரணமாக நான் மிகவும் நேசிக்கும் ஒருவர் திடீரென இறந்துபோனால் என் மனம் இது நிஜமில்லை என்றுதான் முதலில் நினைக்கும். மோடியை பெரிதும் நம்பிய நவீன நடுத்தரவர்கம் இப்படியொரு அடியை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அதிர்ச்சியால் அவர்கள் யதார்த்தத்தை மறுதலிக்க தலைப்படுகிறார்கள். அந்த ஏமாற்றத்தின் விளைவுகளையும் அவமானத்தையும் அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. அதனால் அப்படியான அனுமானங்களை அவர்கள் கண்மூடித்தனமாக நிராகரிக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவம் கண்ணை மூடிக்கொண்டிருப்பவன் மீது பரிதாபம் கொள்ளும் மிருகமல்ல.

பெருவணிக நிறுவனங்கள் மற்றும் பெரிய ஊடகங்கள் ஆகியவற்றின் குவிமையமாக கடந்த முப்பதாண்டுகளில் உருவான மத்தியதர வர்கம் இருக்கிறது. அவர்களின் விருப்பத்தையும் விருப்பமின்மையையும் இந்த நிறுவனங்களே வடிவமைக்கின்றன. யாரை அவர்கள் கொண்டாட வேண்டும் யாரை அவர்கள் வெறுக்க வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்த வர்கத்தின் எழுச்சிதான் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு சாவுமணி அடித்தது. நகரங்களில் சொர்க்கமிருப்பதாக காட்ட இந்த வர்கம்தான் பயன்படுத்தப்பட்டது. அதன் காரணமாக விவசாயத்தின் வீழ்ச்சி மக்கள் போராட்டமாக மாறாமல் கிராம மக்களின் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது.

இந்த நடுத்தர வர்கம்தான் இதுவரை நடந்த தாராளமய சுரண்டலுக்கு விளம்பர தூதுவர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் இதுவரை நடந்த சூழல் சீர்கேடுகளுக்கும், கிராமப் பொருளாதார வீழ்ச்சிக்கும் மவுன சாட்சிகளாக இருந்தார்கள். வறிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களான மானிய வெட்டு, இலவச கல்வி மருத்துவ வசதிகள் ஒழிப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் ஒழிப்பு போன்றவைகளுக்கு இவர்களே போர்வீரர்களாக இருந்தார்கள். ஆனால் இனி இந்த வீரர்களுக்கான தேவை இல்லை, அவர்களுக்கு வீசப்படும் எலும்புத்துண்டுகள் இனி கார்ப்பரேட்டுக்களுக்கு அனாவசியம். தனது முரட்டு விசுவாசியான மன்மோகனையே பழையை காகிதம்போல வீசியெறிந்த முதலாளித்துவத்துக்கு மிடில்கிளாஸ் மீது மட்டும் இரக்கம் பிறக்குமா என்ன?

இப்போதைய நிலையில் ஏழை மக்களுக்கும் தங்களை நடுத்தரவர்கம் என நம்பிக்கொண்டிருப்போருக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு என்பது நடுத்தர வர்க மக்களிடம் உள்ள தாங்குதிறன். அதாவது அவர்களது சில சேமிப்புக்களால் இன்னொரு வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும், அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க அவகாசம் கிடைக்கும். இனி வரப்போகும் மாற்றங்கள் இந்த சேமிப்பின் மதிப்பை காலி செய்யப்போகிறது. ஆகவே இனி அவர்களது நிலை ஏழைகளுக்கு ஒப்பானதுதான். ஆனால் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கும் மிகையான செலவீனங்களை நிறுத்த வழியில்லை. பிள்ளைகளை சாதாரண பள்ளிக்கு மாற்ற முடியாது, காரணம் முன்பு இருந்த அளவுக்கு அரசுப் பள்ளிகள் கிடையாது. வீட்டுக்கடனை விற்று அடைக்க முடியாது, மதிப்பு சரிந்துவிட்டது. மக்கள் பெருமளவு தங்கத்தை விற்க ஆரம்பித்தால் அதற்கும் அரசு ஒரு செக் வைத்துவிடும். இன்று எங்கும் ஓட முடியாத முட்டுச்சந்தில் சிக்கியிருப்பது இவர்கள்தான்.

இதுவரை உதாசீனம் செய்த ஏழைகளோடு இணைந்து போராட முன்வந்தால் இந்த வர்க்கம் பிழைக்க இன்னமும்கூட வாய்ப்பிருக்கிறது.

வில்லவன் ராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.