இரங்கல்

“ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒலித்த கவிஞர் இன்குலாப் என்ற பறை நின்றுவிட்டது!”

இன்குலாப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், “ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒலித்த கவிஞர் இன்குலாப் என்ற பறை நின்றுவிட்டது” என கூறியுள்ளது.

தமுஎகச மாநிலக்குழு சார்பில் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொறுப்புப் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம் இருவரும் வெளியிட்ட அறிக்கை :

முற்போக்குப் படைப்பாளிகளுக்கு மிகச்சிறந்ததொரு முன்னோடியாய்த் திகழ்ந்த இன்குலாப் மறைவுச் செய்தி ஆழ்ந்த வேதனைனையைத் தருகிறது. தெளிவான வர்க்கக் கண்ணோட்டத்துடன் தனது கவிதைகளையும் பாடல்களையும் இதர இலக்கிய ஆக்கங்களையும் இறுதிவரையில் எவ்வித சமரசமுமின்றி வழங்கிவந்தவர் அவர்.

இன்குலாப்பின் அரசியல் நிலைபாடுகளில் கருத்து வேறுபாடு உண்டு என்றபோதிலும், மக்களுக்காகக் களமிறங்கிச் செயல்படுவோருக்கு அவரது படைப்புகள் உரமளித்தன, ஊக்கமூட்டின என்பதை மறுப்பதற்கில்லை. அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவரான அவர், புரட்சிகரமான சமூதாய மாற்றங்களுக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். அந்த ஈடுபாட்டின் காரணமாகவே, ஒரு மத நம்பிக்கைகளில் ஊறிப்போன ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த சாகுல் ஹமீது, ஒரு பகுத்தறிவாளராகப் பரிணமித்ததோடு, தமது பெயரை “புரட்சி” என்ற பொருள்தரும் “இன்குலாப்” என மாற்றிக்கொண்டார்.

“போராடும்போதுதான் மனிதன் பிறக்கிறான்,” என்ற அவரது கவிதை வரி தமிழகத்தில் பலரையும் ஈர்த்து போராட்டக் களத்தில் இயங்கச் செய்திருக்கிறது. போராட்டமே மாற்றத்திற்கான உயிர்நாடி என்ற உணர்வோடு, “எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புதான். இளைஞர்களின் விழிகளில் எரியும் சுடர்களையும் போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் இதுவரை கவிதை என மொழிபெயர்த்திருக்கிறேன்,” என்று கவித்துவத்தோடு எழுதினார்.

கீழவெண்மணியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரான விவசாயத் தொழிலாளிகள் தீ நாக்குகளுக்கு இரையாக்கப்பட்டதை, மனக்கொதிப்போடு “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்று அவர் எழுதிய பாடல், மறைந்த முனைவர் கே.ஏ. குணசேகரன் குரலில் தமிழகம் முழுவதும் தமுஎகச கலை இரவு மேடைகளிலும் இதர முற்போக்கு அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தவிர்க்கவியலாத பாடலாக ஒலித்தது. “குடியானவன் வீட்டு அடுப்பு எரியாதபோதும், கோபாலகிருஷ்ணர்கள் குளிர்காய்ந்துகொள்ள விறகாய் எரிந்தது வெண்மணி விவசாயிதான்,” என்ற கவிதை வரிகளும் கீழவெண்மணி போராளிகளுக்கான சமர்ப்பணம்தான.

எண்ணத்தின் போராட்டக் குணம் எழுத்திலும் அப்படியே இறங்கியதால், அவரது “ஸ்ரீராஜராஜேஸ்வரியம்,” என்ற கவிதை, ராஜராஜ சோழன் காலத்திய அநீதிகளை எடுத்துரைத்ததற்காக, அதைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே முன்மொழியப்பட்டது. அதேபோல், “கண்மணி ராஜம்”, “ராஜமகேந்திர சதுர்வேதிமங்கலம்” என்ற கவிதைகளும் ஆட்சிபீடத்தினரின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகின. “பாலையில் ஒரு சுணை” என்ற உயிரோட்டமுள்ள சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வழங்கிய அவர், ‘அவ்வை’ உள்ளிட்ட பல முற்போக்கான நாடகங்களை எழுதினார், நாடகங்களுக்கான பாடல்களையும் அளித்தார்.

தனது பேனா யாருக்காக என்பதில் தெளிவோடும் உறுதியோடும் இருந்த அவர், “கவிதையாக்கம் என்பது கூட்டிசை போன்றது. தேவதேவன் வயலினை எடுத்து வருவதால் நான் என்னுடைய பறையை எடுத்து வருகிறேன். கூட்டிசையில் வயலினின் சுநாதம் மட்டும்தான் ஒலிக்க வேண்டும், பறையொலி தலைதூக்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. பறையின் தேவை இருக்கும் வரையில் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு என் பறையை என்றென்றைக்கும் நான் தட்டிக்கொண்டே இருப்பேன்,” என்று ஆழ்ந்த அரசியல்-சமுதாய உட்பொருளோடு சொன்னார். இன்று அந்தப் பறையின் இயக்கம் நின்றுவிட்டது. ஆயினும் அது எழுப்பிய ஒலி, அதன் தேவை நிறைவேறும் வரையில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.