தங்க நகைகள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. திருமணமான பெண் ஒருவர் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராமும், ஆண் ஒருவர் 100 கிராம் தங்க நகைகளை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரம்பரை நகைகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் வருமான வரித்துறை சோதைனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திரை செயல்பாட்டாளர் மோ. அருணின் முகநூல் பதிவு இது:

“உண்மையில் மக்கள் வெகுண்டெழக்கூடிய நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்கிற நிலை மாறி இப்போது எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி ஆண்கள் 100 கிராமும், திருமணம் ஆகாத பெண்கள் 250, திருமணம் ஆன பெண்கள் 500 கிராம் தங்கம் வைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. நடப்பது மக்களாட்சியா, அல்லது பாசிசவாதிகளின் சர்வாதிகாரமா, அங்கமாக பாஜக வின் அந்திமக்காலம் நெருங்கிவிட்டது என்றே நினைக்கிறேன். குடிமக்களை மதிக்க தெரியாத இந்த தேசத்தில் வாழ்வதையே பாவமாக நினைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்னமும் இரண்டரை வருடங்கள் என்னென்ன கூத்து நடக்கப்போகிறதோ?

ஆண்கள் எப்படி உடை அணிய வேண்டும், பெண்கள் எப்படி உடை அணியவேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்போது உறங்க வேண்டும், எப்போது கலவிக்கொள்ள வேணும் என்றெல்லாம் கூட அறிவிக்கைகள் வரும் என்றே நினைக்கிறேன்.

ஆனா என்கிட்டே பொட்டுத் தங்கம் கூட கிடையாது. எனவே தங்கம் இல்லாத ஆண்களுக்கு மத்திய அரசே 100 கிராம் தங்கத்தை கொடுக்குமா?” என்கிறார்.

எழுத்தாளர் சரவணன் சந்திரன்,  “மக்களின் அடிமடியில் கைவைத்துவிட்டார்கள் இனி இவர்கள் (பாஜக அரசு) பிழைப்பது கடினம்” என விமர்சித்திருக்கிறார். அவருடைய முகநூல் பதிவில்,

“நகை இந்திய மக்களின் கௌரவம். அவர்களின் அடியாழத்து ஆன்மா. குண்டுமணி தங்கத்தில் துவங்கி ஆளுயர தங்க மாலைகள் வரை இந்த அம்சம் பொருந்தும். தங்கம் இங்கு மங்கலத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆக அடிமடியில் கைவைத்து வைட்டார்கள். இனி இவர்கள் பிழைக்க மாட்டார்கள்.” என்கிறார்.

ஆவணப்பட இயக்குநர் கருப்பு கருணாவின் பகடி இது: 

“திருமணமான பெண்கள் இத்தனை நாளுக்குள் கர்ப்பந்தரிக்க வேண்டும்.

திருமணமாகாத பெண்கள் இத்தனை நாளுக்குள் திருமணம் செய்தாக வேண்டும்.

ஆண்கள் இத்தனை நாளுக்குள் தங்களை ஆண் என்று நிரூபிக்க வேண்டும்.

# விரைவில் வரவிருக்கும் தேசபக்தி அறிவிப்புகளில் சில.”