ரபீக் ராஜா

 

ரபீக் ராஜா
ரபீக் ராஜா

மதுரையில் இருந்து, கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள ஊர் தாமரைக்குளம். காரியாபட்டியிலிருந்து இடது புறம் திரும்பி, குண்டுங்குழியுமான சாலையில், தையத்தக்கா பயணம். தோழர் தமிழ் தாசன் லாவகமாக வண்டி ஓட்டினாலும், கொஞ்சம் பயம் தான்.

சாலைதான் குண்டுங்குழி., காற்று ரம்மியம். சில்லென்ற சூழல். சீமைக்கருவேல மரங்கள் வழியெங்கும் தென்பட்டாலும், ஊர்கள் என்னவோ சீமையின் தாக்கமில்லாமல் இயல்பாக இருந்தன. பனைமரங்கள் மிகுந்த பாதைகள். மயில்கள் அதிக அளவில். பாம்புகள், கீரிகள், முயல்கள். பருத்திக்காடுகள். வழியில் மட்டும் ஆறேழு கண்மாய்கள். ஊர்களின் பெயர்களே, தாமரைக்குளம், அல்லிக்குளம், கிழவனேரி, பொட்டல் குளம், குண்டுக்குளம். சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள்.

குண்டாறும், கிருதுமால்நதியும் அருகே. அவை நீரின்றிக் கிடந்தாலும் இக்குளங்கள் முற்றிலும் வற்றுவதில்லை. மானாவாரி நிலம் என்றாலும், மழை பொய்த்து, ஆறு வறண்டாலும் இந்நிலத்தின் ஊற்றுநீர் இக்குளங்களை சீவனுடன் உயிர்ப்பிக்கிறது. ஊர்க் கிணறுகள் தாகம் தணிக்கின்றன. கடந்த வருட வறட்சியில் இக்குளங்கள் தாமரையையும், அல்லியையும் பறிகொடுத்துவிட்டு, இவ்வூர் மக்களுக்கும், ஆடுமாடுகளுக்கும் நீரைத் தாரை வார்க்கின்றன.

வளமையான செம்மறி ஆடுகளும், கறவைக் கன்றுகளும் புன்செய், நன்செய்க் காடுகளை நிறைத்திருக்கின்றன.பெயரறியா காவல் தேவதைகளும், கன்னிமார்களும், நாகம்மாக்களும் வெட்டவெளியில் ரௌத்திரமாக, அமைதியாக, அமானுஷ்யமாக ஒற்றைத் துணியால் உடல் மறைத்து ஒய்யாரமாய், ஒயிலாய், கண்களில் கருவுடனும், செறிவுடனும் வீற்றிருக்கின்றன. வெளிகளில் வீறுகொள்ள எத்தனிப்பதாகப்பட்டது.

ஏறக்குறைய ஒன்றரை மணிநேரப் பயணம்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆங்காங்கே, சிறிதளவு தூசி துப்பட்டை இல்லாமல் பளிச்சென்று பதாகைகளாக இருந்தது. அன்றைக்குத் தான வைக்கப்பட்டதனால் இருக்கலாம். “வேண்டாம் சாயப்பட்டறை” சுவரொட்டிகள் உள்ளூர்வாசிகளால் ஒட்டப்பட்டிருந்தன.

ஒரு பெரிய பொட்டலில் அலங்காரப்பந்தல் அமெரிக்கையாக அமைக்கப்பட்டிருந்தது. குடிநீர் புட்டிகள், மிக்சர், பப்ஸ், தேநீர் எல்லாம் இருந்தன. மேடை, அதில் குளுரூட்டிகள் இத்யாதிகள் இருந்தன. நிறைய காக்கிச் சட்டைகள், வெள்ளை வாகனங்கள், படாடோப மனிதர்கள் நின்றிருந்தார்கள்.
அதனைத் தாண்டி சாலை நீள்கிறது. வட்டவடிவில் சென்றால், தாமரைக்குளம் வரவேற்கிறது. கிராமங்கள் என்பவை எவ்வளவு உயிர்ப்பானவை! நிர்மலமாய்!

எதார்த்தமாய்! கிணற்றுத் தண்ணீர் இனிமை! ஊருக்கே அதுதான் நீரமுதூற்று. பள்ளிக்குழந்தைகள் எதிர்ப்புப் பதாகைகளுடன் அமர்ந்திருந்தார்கள்.

இளைஞர்கள் துண்டறிக்கைத் தந்து, கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதிமுக, திமுக கரைவேட்டி இளைஞர்களும் பிரச்சாரம் செய்து நின்றிருந்தார்கள்.
கிராம அலுவலர்கள் வந்தார்கள். “ஏப்பா பச்சைப் பிள்ளைகளை ஒக்கார வச்சிருக்கீங்க? அதுக படிப்பக் கெடுக்கலாமா? அதுகளுக்கு என்ன தெரியும்? உங்க கொறைகளை கலக்டர் அய்யாட்ட சொல்லுங்க ” என்று கரிசனம் காட்டினார்கள். இரண்டு இளைஞர்கள், “எங்க பிள்ளைக மேல எவ்வளவு அக்கறை உங்களுக்கு! பஸ் வராம எத்தனையோ நாள் பள்ளிக்கொடத்துக்குப் போகாம இருந்திருக்காங்க, அப்ப எங்க போனீங்க? நாங்க, அதுகளுக்கும் சேத்துத்தான் வேலை பாத்திட்டிருக்கோம், எங்க ஊருப் பிள்ளைகளுக்கு கேன்சர், குழந்தைப் பிரச்சனை வராம இருக்கணும். கலக்டர்ட்ட கொறையச் சொல்லணுமா? ஏன் இது குறைதீர்க்கூட்டமா? இல்ல நாங்க என்ன பிச்சக்காரங்களா? இது கருத்துக்கேட்புக் கூட்டம் ” என்றனர் சூடாக. கிராம அலுவலர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
நடுநடுவில் காவல் துறை வாகனங்கள், ஆட்சியர் வருகைக்குக் கட்டியம் கூறின.

“இத்தாமரைக்குளம், பொட்டல்குளம் கிராமங்களில் சாயப்பட்டறை நிறுவ, பொதுமக்கள் கருத்துக்கேட்கும் நிகழ்வு இது “அலங்காரப் பந்தலை அடைந்தோம். நாயொன்று இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளந்தி மனிதர்கள், “ஆட்சியர் வந்து நம்மை அழைக்கட்டும். நாம் இங்கேயே நிற்போம்” என்று சாலையின் மறுபுறத்தில் கூடினர்.

வட்டாட்சியர் வந்திறங்கினார். சல்யூட் அடித்த காவல்துறையினரிடம், “இன்னிக்கு பப்ளிக் ஹியரிங்னு எனக்குத் தெரியாது ” என்றவாறே, மக்களிடம், “உள்ளே வந்து உங்க குறைகளைச் சொல்லுங்க” என்றார். “இவளுக்கே தெரியலன்றா! என்னங்கடி இது” என்று ஓர் அம்மா சலித்துக்கொண்டார்.
10.30 க்கு வரவேண்டிய ஆட்சியர் 11.30க்கு வருகிறார். கூட்டம் தொடங்குகிறது.

ஆலை முதலாளிகளின் விளக்க அறிக்கை வாசிக்கப்படுகிறது.

“* இது ஜவுளிப்பூங்கா

*800 பேருக்கு நேரடி வேலை, 2000 பேருக்கு மறைமுக வேலை

*இது வறண்ட பூமி

*சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம்” என்றவாறு, பாலாறும் தேனாறும் நிறையப்போவதாக அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்.
பொதுமக்கள் கருத்துக்களைச் சொல்ல அழைக்கப்பட்டார்கள்.

தோழர் முகிலன், “இக்கருத்துக்கேட்புக்கான அறிவிப்பு ஊர்மக்களைச் சென்றடையவில்லை. கூட்டத்தை ஒத்திவைக்கக் ” கோரினார்.
ஆட்சியர் தொடர்ந்தார். ஊர் மக்களைப் பேசுமாறு அழைத்தார்.
ஊர்மக்களின் கருத்துகள்,

*நீங்க தான் கலக்டரா? பலமுறை ஆட்சியர் அலுவலகம் வந்து உங்களைப் பார்க்கமுடிவதே இல்லை. இப்போது முதலாளிகளுக்காக வந்திருக்கிறீர். எங்களுக்கு இந்த ஆலை வேண்டாம்.

*எங்க ஊருக்கு நீங்க வேண்டாம். நாங்க குடிக்கிற தண்ணியே போதும். எங்களுக்கு விவசாயமும், ஆடுமாடும் போதும். எங்களைக் கொல்லாதீங்க.

*நான் திருப்பூரில் இருபது வருசம் இருந்திருக்கிறேன். அந்த அழிவு போல இங்கும் வேண்டாம். … என்று தங்கள் எதிர்ப்புகளை வலிமையாக, நேராகப் பதிவுசெய்தார்கள்.

கலெக்டர் செல்போனை நோண்டிக்கொண்டிருந்தார்.

தோழர் முகிலன், பிரச்சினைகளை விளக்கி அழுத்தமாகப் பேசினார்.

முதலாளி, அதிகாரிப் பிரிவினர் மட்டும் தேநீர், தண்ணீர், மிக்சரைப் பகிர்ந்துகொண்டனர்.

ஆட்சியர், ” நாம் எல்லோருமே, விவசாயப் பின்னனி உடையவர்கள் தான். ஆனால் வளர்ச்சி என்று ஒன்று இருக்கிறது…” என்று தொடங்க, தோழர் முகிலன்,

“நீங்கள் பக்கச்சார்பாகக் கருத்துச் சொல்வது சட்டவிரோதம்” என எதிர்ப்புத் தெரிவிக்க, அவரை வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட, தோழரை இழுத்துச்சென்றனர்.

mugilan

பொதுமக்கள் இச்செயலை எதிர்த்து, தோழருக்கு ஆதரவாக வெளியேற, அதிகாரிகளும், ஆட்சியரும் இதுதான் சமயமென, வண்டிக்குச் செல்ல, மக்கள் அவர்களை முற்றுகையிட, ஓட்டம்பிடித்தனர்.

வளர்ச்சி கோசம் அதிகாரவர்க்கத்தின் மோசடிக் கோசம்…இதை எழுதிக்கொண்டிருக்கையில், “துறையூரில் தோட்டா ஆலை விபத்தில் 20 பேர் பலி…” தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது… அங்கிருக்கும் அதிகாரவர்க்கம் இப்படித்தானே, மக்களை ஏமாற்றியிருக்கும்!

ரபீக் ராஜா, ஊடகவியலாளர்; சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.