அதிகாரிகள் மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தின் விளைவாகவே திருச்சி மாவட்டத்தில் மிகப்பெரும் வெடிவிபத்து துயரம் நேர்ந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் வெடிமருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இந்த தொழிற்சாலை நீண்டகாலமாக இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுப்பட்டு அருகிலுள்ள பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே இத்தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். காவல்துறையும், மாவட்ட ஆட்சி நிர்வாகமும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இதனை அலட்சியமாகவே பார்த்துள்ளனர்.

சமீப காலமாக பட்டாசு தொழிற்சாலை மற்றும் வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டுஅப்பாவி தொழிலாளர்கள் பலியாவது தமிழகத்தில் தொடர் கதையாக நீடித்து வருவது கண்டிக்கத்தக்கது.போதுமான கட்டுமான வசதி, உரிமம், பாதுகாப்பு அம்சங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை தனியார் பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற் சாலைகளில் உள்ளனவா என தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்காணிக்கத் தவறுவதே இதுபோன்ற வெடிவிபத்துகளுக்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, இந்த வெடிவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைநடத்திட வேண்டுமெனவும்; உயிரிழந்த குடும்பங்கள் அனைவருக்கும் உரிய நட்ட ஈடும் அவர்தம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும்; படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டுமெனவும், இதுபோன்ற வெடிவிபத்துகள் இனியும் நடக்கா வண்ணம் கண்காணிப்பு ஏற்பாடுகளை கறாராக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில்,

“திருச்சி மாவட்டம் துறையூர்வட்டம் தலுகை ஊராட்சி முருங்கப்பட்டியிலுள்ள வெற்றிவேல் வெடி மருந்து தொழிற்சாலையில் இன்று (01.12.2016) காலையில் விபத்து ஏற்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 21 சடலங்கள் மீட்கப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் உரிமையாளர் விஜய் கண்ணன் சேலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தொழிற்சாலை உயர்அதிகாரி செல்வம் தொழிலாளர்களின் பதிவேட்டை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக தெரிகிறது.

இந்த தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியுள்ளது. அதனை மீறி மாவட்ட ஆட்சியர் சிபாரிசை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்க படுவதாக விவசாயிகள் கூறி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த தொழிற்சாலையின் உரிமையாளரை கைது செய்து அவர்மீது நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலையை மூடவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துக்கிறது.”

பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இதுபோன்ற கோரமான விபத்துக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தனப் போக்கால் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டுவருகிறது. வெடிமருந்து தொழிற்சாலைகள், பட்டாசு விற்பனை நிலையங்கள் போன்றவற்றை சரியான முறையில் கண்காணிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிதி உதவி வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.