செய்திகள்

திரையரங்கில் தேசிய கீதமும் தேசப்பற்றுடன் சில கேள்விகளும்

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்


சமுதாயத்தில் சில பிரச்சனைகள் அறிவுப்பூர்வமாகக் கையாளப்படுவதற்கு மாறாக உணர்ச்சிப்பூர்வமானதாக மாற்றப்படுவது எப்போதுமே ஆபத்தானது. சிந்திப்பதற்கும் முன்னேறுவதற்கும் முட்டுக்கட்டை போடுவது. மக்களிடையே பகைமையைத் தூண்டுவது.
அவ்வாறு உணர்ச்சிகள் கிளறிவிடப்படுகிறபோதெல்லாம் தலையிட்டு நிதானத்திற்குக் கொண்டுவருகிற பெரும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு இருக்கிறது. ஆனால், தேசப்பற்றையும், தேசிய கீதத்தையும் சம்பந்தப்படுத்தி உச்சநீதிமன்றமே ஒரு இடைக்கால ஆணை பிறப்பித்திருப்பது, அப்படி உணர்ச்சிவயப்படுத்தும் திருப்பணியால் திசை திருப்ப முயல்கிற சக்திகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன் தேசிய கீதம் திரையிடப்பட வேண்டும், பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும், அவர்கள் வெளியே செல்லாமலிருக்கக் கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் டிசம்பர் 1 அன்று ஒரு இடைக்கால ஆணை பிறப்பித்திருக்கிறது. இதனால் குடிமக்கள் மனதில் தேசப்பற்று உணர்வு வளரும் என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்த ஆணைக்குக் காரணமான பொது நல மனுவைத் தாக்கல் செய்தவர் தேசிய கீதம் வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையே வைத்திருந்தார். திரையரங்குகளில் அதனைத் திரையிடுவதற்கு ஆணையிட வேண்டும் என்று அவர் கோரியதாகத் தெரியவில்லை. இருந்தாலும் நீதிபதிகள் தாங்களாக இந்த இடைக்கால ஆணையை அளித்துள்ளனர்.

ஏன் திரையரங்குகளுக்கு மட்டும் இந்த ஆணை? மக்கள் கூடுகிற இடம் என்றால், விளையாட்டு மைதானங்கள், இசை நிகழ்ச்சிகள், நடனக் கூடங்கள், சொற்பொழிவு மன்றங்கள், கட்சிக் கூட்டங்கள், ஊர்க் கொண்டாட்டங்கள் என்று விரித்துக்கொண்டே போகலாம். அங்கெல்லாம் தேசப்பற்று வளர்க்கப்பட வேண்டாமா? எல்லா மதங்களின் வழிபாட்டுத் தலங்களில், ஆன்மீக உரை நிகழ்ச்சிகளில் மக்கள் கூடுகிறார்களே, அந்த இடங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தப் பொருத்தமற்றவையா?

இயற்கைச் சீற்றங்களின்போது மாநில எல்லைகள் தாண்டிப் பாய்கிற மனித நேய வெள்ளங்களில் பொதிந்திருப்பது தேசப்பற்றே அல்லவா? ஆட்சியாளர்கள் கைவிட்டபோதிலும் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பால் பங்களித்துக்கொண்டே இருப்பது தேசப்பற்றே அல்லவா? அதை மென்மேலும் வளர்த்தெடுக்க என்ன செய்யலாம் என்ற அக்கறையும் தேசப்பற்றே அல்லவா?

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அது வெறும் சடங்காக நிகழ்த்தப்படாமல், இந்த தேசம் உருவான வரலாற்றை (உண்மையான வரலாற்றை) மாணவர்கள் விரும்பிக் கேட்கும் வகையில் சொல்வது, தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தல் பற்றிய அறிவியல்பூர்வ புரிதல்களை ஏற்படுத்துவது, நாட்டின் குடிமக்களை நேசிக்கக் கற்பிப்பது… போன்ற செயல்கள் மூலம் தேசிய கீதத்திற்கு உணர்வுப்பூர்வமாக மரியாதை செலுத்தும் பண்பை வளர்த்தெடுக்க முடியும். எத்தனை கல்வி நிறுவனங்களில் தேசிய கீதத்தின் வரிகளுக்குப் பொருள் சொல்லப்படுகிறது?

தேசப்பற்று என்பதே தேச வரைபடத்தை வணங்குவதல்ல; தேசியக் கொடிக்கு சல்யூட் வைப்பதோ, தேசிய கீதம் பாடுவதோ மட்டுமல்ல. சக மனிதர்களை சமமானவர்களாக மதிப்பதுதான் மெய்யான தேசப்பற்று. தேசியக் கொடியின் முன் விரைப்பாக நின்று மரியாதை செலுத்திவிட்டு, அப்புறம் தேசத்தின் பிள்ளைகளைப் பிறப்பின் அடிப்படையில், பாலின அடிப்படையில், பணத்தின் அடிப்படையில் கேவலமாகக் கருதி நடத்தினால் அது தேசப்பற்றாகுமா? அதிலும், பெரும்பகுதி மக்களிடம் நாடு என்றாலே அவர்களுடைய குறுகிய சாதி/சமூக வட்டாரம்தான் என்ற எண்ணம் காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக ஊறிப்போக வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதில் மதவாதத்தையும் சேர்க்கிற முயற்சி நடக்கிறது. இவர்களிடையே உண்மையான தேச உணர்வையும், தேசப்பற்றையும் கொண்டுசெல்வது எப்படி?

நீதிமன்றம் இந்தக் கோணங்களில் யோசித்து வழிகாட்டினால் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கும்? மாறுபட்ட இனங்களும் பண்பாடுகளும் உள்ள இந்திய நாட்டில் ஒன்றுபட்டு வாழ்வதன் அழகையும் பெருமிதத்தையும் போற்றுகிற தேசிய கீதத்தின் பொருளை விளங்க வைப்பதற்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கும்? உண்மையான தேசப்பற்றை வளர்ப்பதற்கு எவ்வளவு ஆதரவாக இருக்கும்?

அ. குமரேசன், பத்திரிகையாளர். இவருடைய தமிழாக்கத்தில் சமீபத்தில் வெளியான நூல் நந்தனின் பிள்ளைகள்; பறையர் வரலாறு. 

முகப்புப் படம் நன்றி: மிட் டே

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.