அமுதா சுரேஷ்

அமுதா சுரேஷ்
அமுதா சுரேஷ்

சில மாதங்களுக்கு முன்,

“அம்மா, அம்மா அப்பா எல்லாம் பசங்களுக்குக் கெட்டது சொல்லித் தருவார்களா” என்று மகள் கேட்க, கொஞ்சம் மனசுக்குள் ஜெர்க்காகி,

“ஏன்டா செல்லம், எல்லா அம்மா அப்பாவும் பசங்களுக்கு நல்லதுதான் செய்வாங்க” என்றேன்

“நீ என்ன சொல்லி இருக்கே, சிப்ஸ் மாதிரி பாக்கெட்ல விக்கிற ஜங்க் பூட்ஸ் சாப்பிடக்கூடாதுன்னு தானே, அதெல்லாம் உடம்புக்கு கெடுதல் தானே?”

“ஆமா மா சரிதான்!”

“அப்போ என் கிளாஸ் பிரியா மட்டும் தினம் அதெல்லாம் வாங்கிச் சாப்பிடுறா”

“ஒ, அவகிட்டே சாப்பிடாதுன்னு சொல்லு மா!”

“நான் அவகிட்டே அதெல்லாம் சாப்பிட்டா கெடுதல்ன்னு சொன்னா, அவ கேக்க மாட்டேங்குறா, எங்கம்மாதான் வாங்கித் தராங்க, சாப்பிட்டா என்னனு கேக்குறா”

“சரி நீ உன் டீச்சர் கிட்டே சொல்லு”

“சொன்னேன், அவங்க ஒன்னும் சொல்லல, நீ வந்து பேசு”

சில நாட்கள் கழித்து, அவள் வகுப்பு ஆசிரியையிடம் அதுபற்றி எடுத்துக் கூற,

“என்னங்க பண்றது, அம்மா அப்பா வாங்கிக் கொடுக்குறாங்க, இல்லே காசு கொடுத்துடுறாங்க, நாங்க என்ன செய்யறது?”

“இந்த வயசுப் பிள்ளைங்க டீச்சர் சொல்றதை கவனமாக் கேக்குறாங்க, சோ ப்ளீஸ் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு வந்தேன்!

வீட்டில் துரித உணவுகளைப் பிள்ளைகளுக்கு எப்போதுமே கொடுப்பதில்லை, அதிலும் நான்கு வயதில் பள்ளி ஆசிரியை சொன்னார் என்று இப்போது பத்து வயது நிறைவு செய்திருக்கும் மகன் இன்னமும் அந்தச் செய்தியை மறக்கவில்லை! பெற்றவர்கள் மட்டுமில்லை ஆசிரியர்களின், பள்ளிகளின் பங்கும் குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது!

துரித உணவுகளின் நம்பகத்தன்மையைப் பற்றி எதுவும் தெரியாமல் இங்கே எதையும் கூறிட இயலாது, எனினும் ஆரோக்கியத்திற்காக சில யோசனைகள்;

 1. குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளைப் பெற்றவர்கள் வீட்டிலேயே செய்து தரலாம்!

 2. பாரம்பரிய உணவு முதல் சுவைகூட்டும் உணவுகள் வரை செய்முறைகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.

 3. மைதாவை கொண்டு செய்யப்படும் உணவு செய்முறைகளில் அதைத் தவிர்த்து, கோதுமை மாவு, அரிசி மாவு, சோள மாவு (சிறிதளவு) மாற்றாகக் கொண்டு தயாரிக்கலாம், கோதுமை நூடுல்ஸ், பாஸ்தா போன்றவைகளில் ரெடிமேட் மசாலா, மைதா தவிர்த்துச் செய்து பார்த்திருக்கிறேன், நன்றாக வந்திருக்கிறது!

 4. வீட்டிலேயே பிரைட் ரைஸ் தயாரிக்கும்போது “அஜினமோட்டோ ” தவிர்த்து அதற்குப்பதில் சிறிது வெண்ணையும் காளானும் (மஸ்ரூம்) சேர்த்துக் கொண்டால் சுவையாய் இருக்கும்

5.ஒரேகனா என்று சொல்லப்படும் இத்தாலியன் மசாலா, ஓமவல்லி அல்லது கற்பூரவள்ளி என்று சொல்லப்படும் இலையைக் கொண்டு செய்வது, சில கற்பூரவள்ளி இலைகளையும், துளசி இலைகளையும் நிழலில் நன்றாகக் காயவைத்துப் பொடித்துவைத்துக் கொள்ளுங்கள், இத்தாலியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

 1. மிளகு, மஞ்சள்தூளைக் கூடக் கடையில் வாங்கும் பெண்களைப் பார்க்கிறேன், அவசர யுகத்தில், இதற்கெல்லாம் நேரமே இல்லாதவர்களுக்காக வந்த இந்தப் பாக்கெட்டுக்கள் இப்போதெல்லாம் நேரம் இருப்பவர்களுக்கும் கூடக் கைக்கொடுக்கிறது! மஞ்சள், மிளகு முதல் பல்வேறு மசாலாக்கள் வரை நேரமிருப்பவர்கள் வீட்டிலேயே செய்து கொள்ளுதல் நல்லது!

 2. (ISABGOL) ஈசாப் கோல் என்றொரு பவுடர் கடையில் கிடைக்கும், அது ஒரு வகை நாட்டு விதை, அஜீரணம் ஏற்படும்போது, சிறிய குழந்தைகள் என்றால், கால் ஸ்பூனும், வளர்ந்தவர்கள் ஒன்று முதல் இரண்டு ஸ்பூனும் தண்ணீரில் அல்லது மிதமான வெந்நீரில் கலந்துக் குடித்தால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் சரியாகும்!  (குடிக்கத் தாமதப்படுத்தி அப்படியே வைத்திருந்தால் இந்தக் கலவை, கூழ்போல் ஆகிவிடும்).

 3. சீரகத்தைக் குடிநீரில் போட்டுத் தொடர்ந்து குடித்துவந்தால் அஜீரணப் பிரச்சனைகள் இருக்காது (சிலருக்கு இதன் குளிர்ந்தத் தன்மையால் சளிப் பிடிக்கலாம், தொடர் உபயோகத்தில் சரியாகும்)

 4. ஓமம் மற்றும் சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தாலும் நெஞ்செரிச்சல் அஜீரணப் பிரச்சனைகள் சரியாகும், வெறும் சூடுநீர் கூட ஜீரணத்தைச் சீர்படுத்தும்!

 5. வீட்டில் கத்தாழைச் செடியை வைத்துக்கொள்ளுங்கள், சிறிய அடிகளுக்கு, சிராய்ப்புகளுக்கு, சிறிய வெட்டுக் காயங்களுக்கு, சிறிய நெருப்புக் காயங்களுக்கு, அடிபட்ட இடத்தைச் சுத்தம் செய்து, கத்தாழையை ஒடித்து அதில் வரும் ஜெல்லை தடவி வர, காயங்கள் விரைவில் சரியாகும். கலப்படமில்லா அலோவேரா ஜெல்லை கடையில் இருந்து வாங்கிவைத்தும் உபயோகிக்கலாம்!

 6. அடிபட்ட இடங்களில் மஞ்சளும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யையும் கூடச் சேர்த்து வைக்கலாம்!

 7. பொறிப் பொறியாய் வரும் வியர்வைக் கட்டிகளுக்கும், கொசுக்கடி மற்றும் அலர்ஜிப் பருக்களுக்கும் கூட மஞ்சள், கத்தாழை, தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணி!
  கொசுக் கடித்த இடத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவினால், விரைவில் அரிப்பு நீங்கும்!

 8. ஒரு கற்பூர வள்ளி இலையையும், மூன்று துளசி இலைகளையும், இரண்டு மிளகையும் இடித்துக் குடிநீரில் போட்டுக் கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் இருக்கும்போது சிறிது தேனையும் கலந்து, காலை மாலை இருவேளை குடித்து வர, சளி இருமல் சரியாகும். சிறிய குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் அளவுப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.

 9. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் சிறிது தேங்காய்ப்பாலுடன் சேர்த்துத் தலையில் தடவி, மிதமான ஷாம்பூவோ சீயக்காயோ போட்டுக் குளித்துவர, உடல் உஷ்ணம் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் செய்யும்போது அதிக நேரம் ஊறவைக்காமல், ஐந்து நிமிடத்திலேயே அலசி விடுவது நல்லது, இல்லையென்றால் தலையில் நீர்கோர்த்துச் சளிபிடிக்கும்!

 10. வாரம் இரண்டுமுறை, தலை முதல் பாதம் வரை எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது நல்லது, குழந்தைகளுக்கும் செய்யலாம்!

மற்றபடி, குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிப் பெற்றோர்கள் அறியாதது இல்லை, உணவே மருந்து, மருந்தே உணவு!

அமுதா சுரேஷ்; ஒரு ஐ டி கம்பெனியில் சென்டர் மானேஜர்;இரண்டு குழந்தைகளின் தாய்; சமூக-அரசியல் விமர்சகர்.