முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி மறைவுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

“எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. அய்யகோ; கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்?

காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் என்னிடம், தஞ்சை மாவட்டத்தில் எனக்கு தளகர்த்தராகவும், உற்ற காவலராகவும் இருந்து கழகம் வளர்த்த அருமைத் தம்பி கோ.சி. மணி மறைந்து விட்டார் என்ற செய்தியினைத் தயங்கித் தயங்கிச் சொன்னபோது, மருத்துவ மனையிலிருந்து எழுந்து குடந்தைக்கு ஓடோடிச் சென்று, மணியின் மாணிக்க முகத்தை கடைசியாகக் காண வேண்டுமென்று என் மனம் துடிதுடித்தது!

தஞ்சைத் தரணியின் தளகர்த்தர் – தமிழ்க் குலம் தன்மானத்தோடு தழைத் திடவும் – இனப்பற்று – மொழிப்பற்று என்றென்றும் எழுச்சியுறவும், வாலிபப் பருவந்தொட்டே வாட்டம் சிறிதுமின்றி “என் கடன் இயக்கப் பணி” ஒன்றே என இன்முகம் காட்டி எந்நாளும் உழைத்திட்ட என்னருமைத் தோழர் கோ.சி. மணி மறைந்து விட்டார்.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் அருகிருந்து பழகி அவர் தம் அன்பையும், பாசத்தையும் அளவின்றிப் பெற்ற இலட்சிய முரசம் கோ.சி. மணி. கொட்டியும், ஆம்பலும் போல ஒட்டி உறவாடி இயக்கத்தின் கொள்கை காத்த குணக்குன்று கோ.சி. மணி.

என்னைப் பற்றி யாராவது குறை காண முனைந்தால், அதனை எதிர்த்து ஆவேசத்துடன் முதல் குரல் எழுப்புவது கோ.சி. மணியாகத் தான் இருக்கும். பேரறிஞர் அண்ணா அவர்களே, ஒருமுறை தனது சுற்றுப் பயணத்தின் போது, திடீரென மேக்கிரிமங்கலம் சென்று வீட்டில் இல்லாததால், தம்பி கோ.சி. மணியை அவருடைய வயலுக்கே சென்று பணியாற்றிக் கொண்டிருந்த அவரைச் சென்று சந்தித்தார் என்றால் அவரது பெருமையை உணர்ந்து கொள்ள முடியும். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் என்னுடைய சுற்றுப் பயணம் என்றால், அவர் மேடையில் இல்லாமல் நான் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றியது கிடையாது. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டாண்டுகளாகப் பயணம் செய்ய முடியாத நிலையிலும், எப்படியாவது இரண்டு பேர் துணையோடு சென்னை வந்து என்னைச் சந்திப்பார். அவர் வந்து சென்ற பிறகு, ஒரு சில மணி நேரம் கோ.சி. மணி தான் என் சிந்தையிலே ஊன்றி இருப்பார். அவருடன் கழித்த அந்த நாட்களின் நினைவுகள் எல்லாம் என் நெஞ்சக் கடலில் நெடுநேரம் அலைஅலையாக எழும்!

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அந்தக் காலத்தில் உடனடியாக வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், பூண்டி வாண்டையார், குன்னியூர் சாம்பசிவம் அய்யர், உக்கடை அப்பாவுத் தேவர், நெடும்பலம் சாமியப்பா போன்ற பெயர்கள் மட்டுமே நினைவுக்கு வந்த காலம் போய், மன்னை நாராயணசாமி, ஆடுதுறை கோ.சி மணி, விளநகர் கணேசன், மயிலாடுதுறை கிட்டப்பா, முத்துப்பேட்டை தர்மலிங்கம், தஞ்சை நடராசன், குடந்தை கே.கே. நீலமேகம், பேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, நாடியம் ராமையா, நன்னிலம் நடராஜன் போன்ற தொண்டர்தம் பெருமைப் பெயர்கள் பேசப்பட்டு, அந்தப் பட்டியலில் மிச்சமிருந்த குடந்தை கோ.சி. மணியையும் இன்று இழந்து விட்டோம். நம்மிடையே நடமாடிக் கொண்டிருந்த மணி இன்று படமாகி விட்டார்; துhய தொண்டுக்கும், தோழமைக்கும் அனைவர்க்கும் பாடமாகி விட்டார்.

கோ.சி. மணியின் இறுதிப் பயணத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில், கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் பங்கேற்கச் சென்றுள்ளார். அவருடன் தம்பிகள் பொன்முடி, ஆ. ராஜா ஆகியோரும் சென்றுள்ளனர். என்னைப் பொறுத்தவரை, எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. அய்யகோ; கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்?”