முதலமைச்சர் ஜெயலலிதா கவலைக்கிடமான நிலைமையில் நீடிப்பதாக அப்பலோ மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அப்பலோ மருத்துவமனையில் அவசரமாக கூடிய அதிமுக எம் எல் ஏக்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக ஊடகங்கள் பரபரப்புகின்றன.

இந்நிலையில் மாநில பொறுப்பு ஆளுநரும், மத்திய அரசு பிரதிநிதிகள் மட்டுமே முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தகவல்கள் அளிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் அதிமுக அரசின் முதலமைச்சரை தவிர்த்த பிரதிநிதிகள் மவுனத்தையே சாதித்து வருகிறார்கள். தமிழக அரசு நிர்வாகம் நெருக்கடியை சந்தித்து வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன.  இந்த நெருக்கடியை தமிழகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதுதான் இப்போதைய நெருக்கடிக்குத் தீர்வு” என்கிறார். மேலும் அவர்,  நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குத்தான் உரிமை உண்டே தவிர மத்திய அரசுக்கோ, ஆளுநருக்கோ எந்த தார்மீக உரிமை இல்லை என்கிறார்.

அவருடைய முகநூல் பதிவில்,

“20 தமிழர் கொலையில் ஆந்திரவிற்கு மறைமுக மற்றும் நேரடி ஆதரவை கொடுத்த வெங்கைய்யாநாயுடு இன்றய தமிழக நெருக்கடியை எப்படியய்யா தீர்ப்பாரு?

தமிழகத்தின் இன்றய நெருக்கடி, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது தானே ஒழிய, வேறொன்றும் இல்லை. இந்த இடத்தை இட்டு நிரப்புவது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வேலை. இதில் தலையிட மத்திய அரசுக்கோ, ஆளுனருக்கோ எந்தவகையில் தார்மீக உரிமை உள்ளது?..

முழுமையாக தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட மோடிக்கும், பாஜகவிற்கும் இங்கு எந்த வேலையும் இல்லை.

‘நீங்க கிளம்புங்க’னு சொல்லும் அரசியல் நமக்கு வேண்டும். இதை அதிமுக அடிமைகள் சொல்ல மாட்டார்கள். சொல்ல வேண்டியது ‘நாம்’!” என்கிறார்.

திமுக முன்னாள் எம் எல் ஏ எஸ். எஸ். சிவசங்கரன், ‘முதலமைச்சர் பொறுப்புகளை வகிக்கும் ஓ. பன்னீர்செல்வம் என்ன செய்கிறார்?” என கேள்வி எழுப்புகிறார்.

“முதல்வர் நலம் பெற வேண்டும் என விழைவது மனிதாபிமானம். அதே போல பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது மிக முக்கியம்.

அரசு இயந்திரம் என்ன செய்கிறது. முதலமைச்சர் பொறுப்புகளை வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்கிறார் ? இந்த இக்கட்டான நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, செய்ய வேண்டியவற்றை கூட செய்யாமல் இருப்பது நியாயமா ?

அமைச்சர்கள் கூட அவர்கள் தலைவியின் உடல்நலக் குறைவால் மனதால் பாதிக்கப்பட்டிருப்பது நியாயம். அரசாங்க சம்பளம் வாங்கிக் கொண்டு, மக்களுக்காக பணியாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், குறிப்பாக தலைமைச் செயலாளர் என்ன செய்கிறார்?

நேற்றைய மாலையில் இருந்து தமிழகம் பதட்டத்தில் இருக்கிறது. சென்னையில் கடைகள் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பாலுக்காக இரவு மக்கள் கியூவில் நின்றனர். இது அத்தனை செய்திகளும் ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டன. யாருக்கும் கவலை இல்லை.

இன்னொருபுறம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை. தேர்வுகள் ஒத்திவைப்பு. பஸ்கள் நிறுத்தம். காவலர்கள் குவிப்பு. பாரா மிலிட்டரி வருகிறது. இதில் எது உண்மை, பொய் என தெரியாமல் மக்கள் தவிப்பு. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாத்திரம் விளக்கமளித்தார். மற்ற யாரும் வாய் திறக்கவில்லை.

ஆளுநர் மும்பையில் இருந்து விரைகிறார், தனி விமானத்தில் வருகிறார், வந்துவிட்டார், ஆளுநர் மாளிகை சென்றார், உள்துறை அமைச்சர் போனில் பேசினார், அப்போலோ வருகிறார், வந்துவிட்டார், உள்ளே சென்றார், 10 நிமிடத்தில் வெளியே வந்துவிட்டார், ராஜ்பவன் சென்றவுடன் அறிக்கை வெளியிடுவார் என நான்கு மணி நேரம் ஊடக பரபரப்பு தான் மிச்சம். இது வரை அவரும் வாய் திறக்கவில்லை.

முதல்வர் குறித்து ஏதும் சொல்ல வேண்டாம். தமிழக அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் நிலையில் செயல்பட வேண்டியவர் அவர் தானே. அவர் தமிழகம் வந்து 12 மணி நேரம் ஆகப் போகிறது. தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் என்ன செய்யப் போகிறார். பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்திருக்க வேண்டாமா?

இதோ இப்போது கர்நாடகத்தில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்ட செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. சென்னையில் அதிமுக தொண்டர்கள் குவியும் செய்திகள். காவல்துறை அதிகாரிகளை காலையில் அலெர்ட்டாக இருக்க டி.ஜி.பி உத்தரவு என செய்தி. அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வர அழைப்பு என தகவல்.

ஆயிரம் சூழல் இருக்கலாம். மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு தகவல். மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் குறித்த ஒரு செய்தியை அவரிடம் சிறப்பு நேர்முக உதவியாளராக பணியாற்றிய திரு.செந்தமிழ்செல்வன் நினைவு கூர்ந்திருக்கிறார். அய்யா கோ.சி.மணி அவர்களுடைய மூத்த மகன் மதியழகன் உடல்நலக் குறைவால் மறைவுற்று, அவரது உடலுடன் சென்னையிலிருந்து ஊருக்கு கிளம்புகிறார்கள். அப்போது அய்யா கோ.சி.மணி கேட்டிருக்கிறார்,” நான் கையெழுத்திட வேண்டிய முக்கிய கோப்பு ஏதும் இருக்கிறதா?. நம்மால் பணி எதுவும் நின்று விடக் கூடாது”. அந்தக் கடமை உணர்வு வேண்டும்.

முதல்வர் உடல்நிலையை மருத்துவர்கள் கவனித்துக் கொள்ளட்டும். மக்கள் பிரச்சினையை கவனியுங்கள் ஆளுநரே, அதிகாரிகளே !” என்று கேட்கிறார்.