சுப. உதயகுமாரன்

சுப. உதயகுமாரன்
சுப. உதயகுமாரன்

தாங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பெரும்பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள பிரயத்தனிக்கும் ஒரு கூட்டமும், அவர்களுக்கு ஒத்தாசையாக செயல்பட்டு கொல்லைப்புறம் வழியாக கோட்டைக்குள்ளே நுழைய விரும்பும் இன்னொரு கூட்டமும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை கடத்தி வைத்து அரசியல் நாடகங்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், ஒரு மாபெரும் மக்கள் தலைவரை பல மாதங்களாக மக்களுக்குக் காட்டாமல் ஒளித்து வைத்திருப்பது, அவரது இரத்த உறவுகளைக்கூட அண்டவிடாமல் தடுத்து நிற்பது, வெற்று அறிக்கைகள் மட்டும் விடுத்து மக்களை மதிக்காமல் நடப்பது கடத்தல் நடவடிக்கைதான். நேற்று இரவே அப்பல்லோ வந்து சென்ற தமிழக (பொறுப்பு) ஆளுநரும் இதுவரை எதுவும் பேசவில்லை. ஏன்? அவரும் இந்தக் கடத்தல் குற்றத்தில் பங்கேற்கிறாரா?

“உங்களுக்கு வேட்டை, எங்களுக்குக் கோட்டை” என்று பங்கு போட முதல்வரை கடத்தி வைத்திருப்பவர்கள் மொத்தத் தமிழினத்தையும் கடத்தத் திட்டமிடுகின்றனர், முயல்கின்றனர். தமிழர்கள் கவனமாக, நிதானமாக செயல்பட வேண்டிய தருணமிது:

[1] காவிகளை எதிர்க்கும் தமிழகக் கட்சிகள், தலைவர்கள் அனைவரும் உடனடியாக ஒன்றுகூடி ஆலோசிக்க வேண்டும்.

[2] வளக்கொள்ளை, ஊழல், ஊதாரித்தனம், மதவாதம், பாசிசம் போன்றவற்றை எதிர்க்கும் ஒரு பொது அடிப்படை வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

[3] தமிழகத்தில் ஆட்சித் தலைவர் அல்லது ஆட்சி மாற்றம் நிகழவேண்டிய தேவை ஏற்பட்டால், அதனை நேரடியாக அவதானித்து, தமிழ் மக்களை பரந்துபட்ட அளவில் சந்தித்து, அந்த மாற்றம் நேர்மையானதாக, சனநாயகத் தன்மையோடு கூடியதாக நடக்க ஆவன அனைத்தும் செய்ய வேண்டும்.

[4] உள்மாநிலக் கொள்ளையர்களும், வெளிமாநில வியாபாரிகளும் உள்ளே புகுந்து ஆட்டம் போட எத்தனித்தால், அவர்களை அம்பலப்படுத்த வேண்டும், எதிர்த்து நிற்க வேண்டும்.

[5] பிற நடவடிக்கைகளை பின்னர் திட்டமிட்டு நடத்திக் கொள்ளலாம்.

சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சி,ஒருங்கிணைப்பாளர்.